Published:Updated:

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

 ஹரிதா கோபி
பிரீமியம் ஸ்டோரி
ஹரிதா கோபி

எது அழகு?

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

எது அழகு?

Published:Updated:
 ஹரிதா கோபி
பிரீமியம் ஸ்டோரி
ஹரிதா கோபி

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவர் அவர். ஒருநாளைக்கு 19 மணி நேரம் உழைப்பவர். அதிகாலை 4 மணிக்குச் சந்தித்தாலும் நள்ளிரவு 12 மணிக்குச் சந்தித்தாலும் அவருடைய பளிச் முகமும் பளீர் புன்னகையும் மாறாது. பொட்டு முதல் செல்போன் பவுச் வரை மேட்ச்சிங் பார்ப்பார். அவரது எனிடைம் எனர்ஜியை வியக்காதவர்கள் அரிது.

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

அப்படிப்பட்டவர் திடீரென ஆறு மாதங்கள் தனிமைக்குள் முடங்கினார். அத்தனை அப்பாயின்ட்மென்ட்டுகளையும் கேன்சல் செய்தார். போன் அழைப்புகளுக்கு நோ ரெஸ்பான்ஸ். எல்லோரிடமிருந்தும் அவர் ஒதுங்கியிருந்ததன் காரணம் தெரிந்தால் சிலர் சிரிக்கலாம்... பலர் வியக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல வருடங்களாக டை அடிக்கும் பழக்கமுள்ள அந்த மருத்துவருக்கு திடீரென அது ஏற்படுத்திய ஒவ்வாமையால் முகமெங்கும் கருமை படர்ந்திருக்கிறது. கண்ணாடி மாதிரிக் காட்சியளித்த தன் சருமம், தீயில் சுட்ட கிழங்குபோல் மாறியதில் மருத்துவர் கடுமையான டிப்ரெஷனுக்குள் போய்விட்டார். ஆறுமாத காலப் போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை எடுத்துத் திரும்பிய அந்த மருத்துவரின் முகத்தில் இப்போது கருமை இல்லை, பழைய களையும் இல்லை என்பது வேறு கதை.

70-களின் லேடி சூப்பர் ஸ்டார் அந்த நடிகை. ஒரு தீபாவளி சிறப்பிதழுக்காக அவரிடம் பேட்டிக்காக அணுகினேன். ‘முதல்ல பேட்டி எடுத்துடுங்க. போட்டோ ஷூட் அடுத்த வாரம் வெச்சுக்கலாம். ஹேர் கட்டும் டையும் பண்ணணும்’ என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவருடன் நீண்டநேரம் உரையாடல் நிகழ்ந்தது. குடும்பம், அந்தரங்கம், அந்தக் கால `மீ டூ' எனப் பல விஷயங்களையும் மனம் திறந்து பேசியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுத்த பிரமாதமான பேட்டி அது. போட்டோ ஷூட்டுக்காக அவர் சொன்ன அடுத்த வாரம் தொடர்புகொண்டபோது ‘போட்டோஷூட் பண்ண முடியாது. டை அலர்ஜியாகி, முகமெல்லாம் கறுப்பாயிடுச்சு. ட்ரீட்மென்ட்டுல இருக்கேன்... ஸாரி’ சொன்னவரின் குரலில் தெரிந்த வலி, அதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்றது.

`நடிகை .......யின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி' என டீசர் ஓட்டிப்பார்த்த மனதுக்கு இன்றுவரை பிரசுரிக்க முடியாத அந்தப் பேட்டி தந்த ஏமாற்றம் மறக்க முடியாதது.

அஜித்தும் விஜய்யும் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் திரையில் தோன்றினால் கொண்டாடும் ரசிகர்களால் அதே தோற்றத்தில் ஒரு ஹீரோயினை ஏற்றுக்கொள்ள முடியுமா? நடிகைகளை ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ, தம்மை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயமும் தயக்கமும் அநேகப் பெண்களுக்கு இருக்கிறது. சருமத்துக்கும் உடல் எடைக்கும் கொடுப்பதையெல்லாம்விட கூடுதல் அக்கறையை தலைக்குச் சாயம் அடிப்பதில் செலுத்துவது அதன் வெளிப்பாடுதான்.

ன்றைய தலைமுறையினருக்கு 15 ப்ளஸ் ஸில் நரைக்கத் தொடங்குகிறது. 80 ப்ளஸ்ஸில் இருப்பவர்களும் டை அடித்துக் கொண்டு கருகரு கூந்தலுடன் வலம் வருகிறார்கள். இரண்டுமே கவலை தரும் விஷயங்கள்தாம்.

வாழ்க்கை முறை மாறினால் 15 வயதில் நரைப்பதை 51 வயதுக்குத் தள்ளிப் போடலாம். ஆனால், 80 ப்ளஸ்ஸிலும் டை அடிப்பவர்களை மனம் மாறச் செய்வது சாத்தியமா? வயதானவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ, ‘நாங்க மாறிட்டோம்’ என்கிறார்கள் பிரபலமான சில பெண்கள்.

ஆணுக்கு அழகாகவும் கம்பீரமாகவும் தெரிகிற அதே சால்ட் அண்டு பெப்பர் லுக் பெண்களுக்கும் பேரழகுதான் என்பதை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஹரிதா கோபி மீடியா பிரபலம்

சின்னத்திரை பிரபலமும், படவா கோபியின் மனைவியுமான ஹரிதா கோபியின் லேட்டஸ்ட் ஸ்டைல் சால்ட் அண்டு பெப்பர் லுக்தான்.

 ஹரிதா கோபி
ஹரிதா கோபி

‘`எனக்கு கலரிங் பண்றது ரொம்பப் பிடிக்கும்.. ரெட், கோல்டன் உட்பட எல்லா ஃபேஷன் கலர்ஸையும் முயற்சி செய்திருக்கேன். ஆனா, இது எல்லாம நரைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி. நரைக்க ஆரம்பிச்சதும் அதை மறைக்க கலரிங் பண்ண வேண்டியிருந்தது. அப்பதான் அது எவ்வளவு பெரிய இம்சைன்னு புரிஞ்சது. முதல்ல நரை முடியை கறுப்பாக்கிட்டு, அப்புறம்தான் ஃபேஷன் கலர்ஸ் பண்ண முடியும்னு சொன்னாங்க. திடீர்னு ஒரு ஞானோதயம் வந்தது. இவ்வளவு மெனக்கெட்டு கலரிங் பண்ணித்தான் ஆகணுமாங்கிற கேள்வி வந்தது. நரையை அப்படியே விட்டா என்னன்னு யோசிச்சேன். கடந்த ஒரு வருஷமா இப்படித்தான் இருக்கேன். எல்லாரும் நல்லாருக்குனு சொல்றாங்க’’ - அழகியான ஹரிதா, சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் பேரழகியாகத் தெரிகிறார்.

‘`நரை முடியை அப்படியே விடறதுங்கிற முடிவை எடுக்கிறது சாதாரண விஷயமில்லைதான். எங்க வீட்டுக் குட்டிப் பசங்க எல்லாம் ‘இப்படி இருக்காதே... கலர் பண்ணு’னு திட்டினாங்க. எனக்குமே முதல்ல கொஞ்ச நாளைக்கு கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஏன் இப்படி இருக்கணும்... நம்மைவிட வயசானவங்க எல்லாம் டை பண்ணும்போது நான் ஏன் இப்படி இருக்கணும்’ என்ற கேள்வி அடிக்கடி வந்திருக்கு. அப்பல்லாம் என்னை மோட்டிவேட் பண்ணினவர் என் கணவர். ‘நீ இந்த லுக்குல சூப்பரா இருக்கே’னு சொன்னார். வேறென்ன வேணும்.அது மட்டுமல்லாம அஜித்தே சால்ட் அண்டு பெப்பர் லுக்குல இருக்கும்போது நமக்கென்னனு தோணுச்சு. எங்கம்மா டீச்சரா இருந்தவங்க. எப்போதும் கறுப்பு முடியோடு இருந்து பழகினவங்க. என்னுடைய முடிவைப் பார்த்து முதல்ல ரொம்ப வருத்தப்பட்டாங்க. அப்புறம் என்னைப் பார்த்து அவங்க மனசை மாத்திக்கிட்டு இப்போ ஃபுல் சில்வர் லுக்ல இருக்காங்க. சிலருக்கு கலரிங் பண்ணினா நல்லாருக்கும். சிலருக்கு பண்ணாம விட்டா நல்லாருக்கும். நான் ரெண்டாவது வகை. கலரிங்கை விட்டதும் பெரிய ரிலீஃப் தெரியுது. கலர் பண்ணும்போது அந்தக் கலரைத் தக்கவெச்சுக்க பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் யூஸ் பண்ண வேண்டியிருக்கும். அந்த பட்ஜெட் எங்கேயோ எகிறிடும். கலரிங் பண்ணினா இயற்கையான பொருள்களைப் பயன்படுத்த முடியாது. இப்ப நான் உண்டு, என் நேச்சுரல் புராடக்ட்ஸ உண்டுனு சந்தோஷமா இருக்கேன்’’ - சிரிப்பவருக்கு சால்ட் அண்டு பெப்பர் லுக்தான் வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறதாம்.

‘`ஆமாம்.... அதுதான் உண்மை. என்னுடைய இந்த கெட்டப்பைப் பார்த்துட்டு எனக்கு ரெண்டு வெப் சீரிஸ்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஒரு வெப் சீரிஸ்ல நானும் கோபியும் சேர்ந்து நடிக்கிறோம்’’- சந்தோஷம் பகிர்பவர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி, இசையோடு சமையலும் சேர்ந்த யூடியூப் சேனல் என எக்கச்சக்க பிஸி!

லதா டேங்கர் ஃபவுண்டேஷன் நிறுவனர்

‘`கலரிங் பண்ற கான்செப்ட்டில் சின்ன வயசுலேருந்தே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனக்கு நரைக்க ஆரம்பிச்சபோது, ‘கலரிங் பண்றதில்லை’ங்கிற முடிவை எடுத்தேன். டேங்கர் கிட்னி ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருந்த நேரம் அது. ரொம்பச் சின்ன வயசுல இப்படியொரு விஷயத்தை ஆரம்பிச்சிருக்காங்களே என்ற பார்வையை நிறையவே எதிர்கொண்டேன். கொஞ்சம் வயசானவளா தெரிஞ்சா நல்லாருக்குமோன்னு தோணினது. கலரிங்கைத் தவிர்க்க அதுவும் ஒரு காரணம். 35, 36 வயசுல நரை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது. அப்புறம் 20 வருஷங்கள் கழிச்சுதான் முழுத் தலையும் நரைச்சது. வாழ்க்கையில ஒருமுறைகூட நான் என் முடியை கலரிங் பண்ணினதில்லை. என்னைப் பார்க்கிறவங்கள்ல ‘எப்படி தைரியமா கலரிங் பண்றதை நிறுத்தினீங்க’னு கேட்கறவங்கதான் அதிகம். ‘நான் நிறுத்தலை. கலரிங் பண்ணினதே இல்லை’னு சொல்வேன். ‘உங்களை மாதிரி எங்களுக்கும் கலரிங் பண்ணாம இருக்கணும்னு தோணுது'ன்னு சிலரும், `உங்களைப் பார்த்து நாங்களும் கலரிங்கை விட்டுட்டோம்'னு சிலரும் சொல்லியிருக்காங்க’’ - சால்ட் அண்டு பெப்பரில் கம்பீரமாகத் தெரிபவரின் பேச்சிலும் அதே கம்பீரம்.

லதா
லதா

‘`முடி என்பது உங்க தோற்றத்தில் ஒரு பகுதி, அவ்வளவுதானே தவிர... அது அழகைத் தீர்மானிக்கிற விஷயமில்லைங்கிறது என் எண்ணம். அழகு என்பது அகம் சம்பந்தப்பட்டது. நான் சந்திக்கிற எல்லாப் பெண்களும் எனக்கு அழகானவங்க தான். `கலர் பண்ணினா இன்னும் பத்து வயசு கம்மியா தெரிவீங்க... ஏன் முயற்சி செய்யக்கூடாது’ன்னு கேட்கிறவங்களும் உண்டு. ‘என் வயசைக் குறைச்சுக் காட்ட வேண்டிய ஆசையோ, தேவையோ எனக்கு இல்லை’னு பதில் சொல்வேன். ‘இதுதான் நான். யாருக்காகவும் என் முடிவை மாத்திக்கிறதா இல்லை’னு கோபமாகூட சிலருக்குப் பதில் சொல்லியிருக்கேன்.

‘நீ ஏன் கலர் பண்ணலை’னு என் கணவர் கேட்டபோதும், ‘இதுதானே இயற்கை. அதை ஏன் மாத்தணும்’னுதான் கேட்டேன். என் குழந்தைங்ககிட்ட நிறைய பேர், ‘உங்கம்மா கிரே கலரிங் பண்ணியிருக்காங்களா’னு கேட்டிருக்காங்க. நான் வேணும்னே என் முடியை அப்படி கலர் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. எனக்கு நரைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என் பையன் ஸ்கூலுக்கு ஜீன்ஸ் போட்டுக்கிட்டுப் போனபோது, ‘அம்மா... நீங்க ஜீன்ஸ் போட்டுட்டு வராதீங்க. புடவையிலயோ சல்வார்லயோ வாங்க’னு சொல்லியிருக்கான். அதே பையன் இன்னிக்கு, ‘நீ ஏன் கலரிங் பண்ணலை’னு கேட்கலை. அதுல எனக்குப் பெருமைதான். ‘அம்மா நீங்க ரொம்ப ஃபேஷனபிள்’னு எங்க ஃபிரெண்ட்ஸ் நினைக்கிறாங்கன்னு என் பிள்ளைங்க சொல்லும்போதும் அதைச் சந்தோஷத்தோடு ஏத்துக்கிட்டேன்’’ - பாசிட்டிவ் வார்த்தைகள் உதிர்ப்பவர் தனக்கு கலரிங் தேவையில்லை என்றுதான் சொல்கிறாரே தவிர, மற்றவர்களுக்கும் அதை வலியுறுத்தவில்லை.

‘`கலரிங் பண்றதால நிறைய பிரச்னைகள் வருவதா நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, தரமான கலர்ஸ் உபயோகப்படுத்தினா பாதிப்புகள் வராது. ஹேர் கலரிங்கைத் தவிர்த்ததால் என் கூந்தல் ஆரோக்கியமா இருக்கிறதா நான் சொல்ல மாட்டேன். நாம சாப்பிடற சாப்பாடு, எடுத்துக்கிற வைட்டமின்கள்னு எல்லாம் கூந்தல் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். ஒரே ஒரு விஷயம்... கிரே ஹேர் கொஞ்சம் முரடா இருக்கும். அதிகமா பறக்கும். அதைக் கட்டுப்படுத்த சரியான ஷாம்பூ உபயோகிக்கணும். அது ரொம்ப முக்கியம்’’ - பறக்கும் வெள்ளிக்கம்பிகளை ஸ்டைலாகக் கோதியபடிச் சொல்கிறார் லதா.

ஷோபா தொழிலதிபர்

ஒன்றரை வருடங்களாக சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் வலம் வருகிறார் ஷோபா. சின்னத்திரை பிரபலம் பாவனாவின் சித்தி.

ஷோபா
ஷோபா

‘`சின்ன வயசுல விதவிதமான ஹேர் கலர்களை ட்ரை பண்ணியிருக்கேன். குழந்தைங்களுக்கு ஹேர் கட் பண்ண பார்லர் கூட்டிட்டுப் போகும்போது, ‘நீங்க இந்தக் கலர் ட்ரை பண்ணலாமே... உங்களுக்கு சூப்பரா இருக்கும்’னு ஆசை காட்டுவாங்க. நரைக்கிறதுக்கு முன்னாடியே அப்படி கலர் பண்ண ஆரம்பிச்சவள் நான். அதுக்கப்புறம் நரை எட்டிப் பார்க்க ஆரம்பிச்சதும் டச்சப் என்ற பெயர்ல டை பண்ண ஆரம்பிச்சேன். டச்சப் பண்ணி, டச்சப் பண்ணி, மொத்த முடியும் வெள்ளையானதுதான் மிச்சம். எனக்கு ரொம்ப சின்ன வயசுலேயே நரைக்க ஆரம்பிச்சதுக்கும் என் ஜீனும் ஒரு காரணம். அம்மாவுக்கு அப்படித்தான் இருந்தது. என்னை மாதிரியே அம்மாவும் 45 வயசுலயே டை அடிக்கிறதை விட்டுட்டாங்க. அவங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனதும் என்னுடைய சால்ட் அண்டு பெப்பர் லுக்குக்கு ஒரு காரணம். ஹேர் டையில் கேன்சரை உருவாக்கும் கார்சினோஜென் இருக்கிறதா கேள்விப்பட்டபோது இனிமே டை அடிக்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்’’ - துணிந்து முடிவெடுத்தாலும், பாசிட்டிவ்வும் நெகட்டிவ்வுமாக நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

‘`சால்ட் அண்டு பெப்பர் லுக்குக்கு மாறினதும் ரெண்டுவிதமான கமென்ட்ஸையும் எதிர்கொண்டேன். என் குடும்பத்தார் ரொம்ப ஷாக் ஆனாங்க. ‘அதெல்லாம் வேணாம்.... 60, 70 வயசுல டை அடிக்கிறதைவிட்டா போதும்’னு சொன்னாங்க.

கலரிங்கை விடற முடிவை எடுக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனா விட்டுட்டோம்னா அது சுதந்திரமான ஓர் உணர்வு. கொஞ்சூண்டு வெள்ளையாகி, அப்புறம் பாதி வெள்ளையாகிற அந்த ட்ரான்சிஷன் பீரியடைக் கடக்கிறதுதான் கஷ்டம்.

கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் பட்டுப்புடவை உடுத்திட்டு, ஜிமிக்கி போட்டுக்கிட்டு கிராண்டா ரெடியாகும்போது மட்டும் நரைச்ச தலை கொஞ்சம் வேடிக்கையா தெரியும். ‘உங்க முகத்துக்கும் தலைக்கும் மேட்ச்சே ஆகலை’னு நிறைய பேர் சொல்வாங்க. முகம் ரொம்ப இளமையா தெரியுது. முகமும் வயசான லுக்குக்கு மாறினதும் டை அடிக்கிறதை நிறுத்துனு சொல்வாங்க. சிலர். ‘இந்த வயசுலகூட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’னு தேடிவந்து சொல்லிட்டுப் போவாங்க.

‘நானும் டையை விட்டுடணும்னு நினைச்சிட்டே இருக்கேன். ஆனா முடியலை. நீங்க கிரேட்’டுனு சொல்றவங்களும் அதிகம். ‘நீங்க நல்லா டிரெஸ் பண்றீங்களே... டை அடிக்க மட்டும் ஏன் யோசிக்கிறீங்க... அதுக்கென்ன செலவாயிடப் போகுது’னு கேட்கறவங்களையும் எதிர்கொள்றேன்.ஹென்னா மாதிரி செலவில்லாதது ஏதாவது ட்ரை பண்ணலாமேங்கிற இலவச அட்வைஸும் நிறைய வரும். எது எப்படி இருந்தாலும் யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. நான் இந்த வயசையும் வயசுக்குரிய இயற்கையான தோற்றத்தையும் ரசிக்கிறேன். நாம எல்லா வயசையும் கொண்டாடறோம்.... நரைக்கிற வயசையும் ஏன் கொண்டாடக்கூடாதுன்னு யோசிச்சேன். அந்த நேரம் வாழ்க்கையிலும் எனக்கு பாட்டி புரொமோஷன் கிடைச்சது. வெள்ளை முடியோடு அதைக் கொண்டாட நினைச்சதும் இன்னொரு காரணம்’’ என்பவர் பெருந்தன்மையோடு ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்... ‘`பெண்களைவிட ஆண்கள் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் சூப்பரா இருக்காங்க. அஜித் முதல் ஜார்ஜ் க்ளூனிவரை சால்ட் அண்டு பெப்பரில் செம ஹேண்ட்சம்!’’

சால்ட் & பெப்பர் லுக் பற்றி அழகுக்கலை, மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

அடுத்த இதழில்!