Published:Updated:

`சாத்தான்குளம் சம்பவத்தை எப்படி தடுத்திருக்கலாம்!?' - மனநல மருத்துவரின் வழிகாட்டல்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம்: லத்தியும் துப்பாக்கியும் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காகத்தானே தவிர, அவர்களுடைய உயிரை எடுப்பதற்கு அல்ல என்பதை போலீஸுக்குப் பயிற்சியில் இருக்கிற காலத்திலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

சாத்தான்குளத்தில் சில காவலர்களின் லத்தி, இரண்டு பேருடைய உயிரை இரக்கமில்லாமல் எடுத்துவிட்டது. பொதுமக்களின் உயிருக்கு காவல் இருக்க வேண்டிய துறையைச் சேர்ந்தவர்கள், அந்தப் பொதுமக்களையே கொன்றிருக்கிறார்கள். தங்கள் துறையின் கடமையைத்தாண்டி எந்த உணர்வு அவர்களை இப்படி செய்யத் தூண்டியது? வருங்காலத்தில் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் வேறெங்கும் நடைபெறாமல் இருக்க, காவலர்களுக்கு கற்றுத்தர வேண்டிய `அறிவாற்றல் நடத்தை சிகிச்சை’ (Cognitive behavioral therapy) பற்றிச் சொல்கிறார் மனநல மருத்துவரும் காவல்துறையினருக்கு ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பயிற்சியளிப்பவருமான சுபா சார்லஸ்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

``இந்த விஷயத்தை மனித இயல்புகள், அதிகாரம் படைத்த காவல்துறையினரின் இயல்புகள் என்று பிரித்துப்பார்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனும் தெய்வ குணம், மனித குணம், மிருக குணம் ஆகிய மூன்று வித குணங்களுடனும் பிறக்கிறான். இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு குணம் மேலோங்கி இருக்கும். சிலரிடம் தெய்வ குணம், சிலரிடம் மனித குணம், சிலரிடம் மிருக குணம் மேலோங்கி இருக்கும். இதில் மிருக குணம் மேலோங்கி இருப்பவர்கள் சாதாரண வேலைகளில் இருக்கும்போது, மற்றவர்களுக்குப் பெரியளவுக்கு கெடுதல் நிகழாது. ஆனால், இப்படிப்பட்டவர்கள் அதிகாரம் மிகுந்த பதவியில் அமரும்போது, சாத்தான்குளம் போன்ற கொடுமைகள் நடந்துவிடுகின்றன.

சாடிஸ மனப்பான்மை இருந்தால்...

`நான் நினைப்பதுதான் சரி’, `நான் நினைப்பதுதான் நடக்க வேண்டும்’ என்று நினைப்பவர்களின் கையில் அதிகாரம் சென்றாலும் இப்படித்தான் நடக்கும்.

`எனக்கு என்ன செய்யவும் அதிகாரமிருக்கிறது’ என்று நினைப்பவர்கள், அடுத்தவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்கிற சாடிஸ மனப்பான்மை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவார்கள்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

பொதுமக்களைக் காப்பாற்றவே லத்தி!

காவல்துறையினரைப் பொறுத்தவரைக்கும், அரசாங்கம் கொடுத்திருக்கிற லத்தியும் துப்பாக்கியும் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காகத்தானே தவிர, அவர்களுடைய உயிரை எடுப்பதற்கு அல்ல என்பதை அவர்களுக்குப் பயிற்சியில் இருக்கிற காலத்திலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

சுயக்கட்டுப்பாடு இன்மையால்...

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அதிகரிக்கும். அது ஆளுமையை அதிகரிக்கும். சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் காவல்துறையினர், மக்களைத் தவறான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகவும் இந்த ஆளுமையைப் பயன்படுத்துவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாதவர்கள், தன் உடல் வலிமையை வலிமை குறைந்தவர்கள் மீது காட்டிவிடுகிறார்கள்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

பயிற்சியின்போதே கண்டுபிடிக்க வேண்டும்!

காவல்துறையில் பயிற்சியளிக்கும்போதே `இந்த நபருக்கு தன்னையும் தன் கோபத்தையும் கட்டுப்படுத்தத் தெரிகிறதா’, `லத்தியையும் துப்பாக்கியையும் பலம் குறைந்தவர்கள் மீது பயன்படுத்தாத பக்குவம் இருக்கிறதா’ என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்துகிற இயல்பு குறைவாக இருப்பவர்களை அந்த நிலையிலேயே சரி செய்துவிடலாம்.

பேச்சுரிமைக்கு எதிராக லத்தியை வீசாதிருக்க பயிற்சி!

சுயமரியாதை, தன் பக்கத்து நியாயத்தைச் சொல்வதற்கான, தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பேச்சுரிமை ஆகியவை தனிமனிதர்களுக்கு உண்டு. அப்படிப் பேசும்போது அதற்குக் காதுகொடுக்க வேண்டியதையும் அவர்கள் மீது லத்தியை வீசாமல் இருக்க வேண்டுமென்பதையும் காவல்துறையினருக்குப் பயிற்சியின்போதே அறிவுறுத்த வேண்டும்.

நான் காவல்துறையினரிடம் பேசும்போது, `நீங்கள் பயங்காட்டுவதற்கு லத்தியைக் கையில் வைத்திருக்கிறீர்களா, அடிப்பதற்கு வைத்திருக்கிறீர்களா அல்லது அடித்தே ஒரு நபரைக் கொல்வதற்கு வைத்திருக்கிறீர்களா' என்று அவர்களின் மனநிலையை சீர்ப்படுத்துவதற்காகப் பலமுறை கேட்டிருக்கிறேன்.
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
சாத்தான்குளம்: `நடந்ததை பயப்படாமச் சொல்லுங்கம்மா!’ - ஜெயராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை

`நீ பாதுகாவலன்... நீ அழிப்பவன் கிடையாது’

காவல்துறை பயிற்சியில் இருக்கும்போது, இளம் போலீஸ்காரர்களுக்கு யாரை அடித்து தன் அதிகாரத்தை நிரூபிக்கலாம் என்றுதான் இருக்கும். அந்த உணர்வை போலீஸ் அகாடமியில் தரப்படுகிற பயிற்சியில்தான் நெறிப்படுத்த வேண்டும். `நீ பாதுகாவலன். நீ அழிப்பவன் கிடையாது’ என்பதை ஒவ்வொரு காவல்துறையினரின் மனதிலும் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

சைக்கலாஜிக்கல் டெஸ்ட் வைக்க வேண்டும்!

லாக்கப் மரணங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், 3 மாதங்களுக்கு ஒருமுறையோ, 6 மாதங்களுக்கு ஒருமுறையோ, காவல்துறையினருக்கு அவர்கள் மனநலத்தைப் பரிசோதிக்கிற சைக்கலாஜிக்கல் டெஸ்ட் வைக்க வேண்டும். யாரிடம் மனிதத்தன்மை இருக்கிறது, யாரிடம் மிருகத்தன்மை இருக்கிறது என்பதை வெறும் 10 நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்டவர்களுக்கு, நான் மேலே சொன்ன நடத்தைகளில் பயிற்சி அளிக்க வேண்டும்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்
சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

சக மனிதன் உயிரைப் பறிக்காமல் இருக்க...

இது காவல்துறையினருக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கு, உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஏன் பெற்றோர்களுக்கும்கூட இந்த நடத்தை பயிற்சிகளைச் சொல்லித் தர வேண்டும். அப்போதுதான் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உயிரைப் பறிக்க மாட்டான்’’ என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

அடுத்த கட்டுரைக்கு