Published:Updated:

ஹெச்.ஐ.வி-யிலிருந்து முழுமையாக மீண்ட உலகின் இரண்டாம் நபர்!

ஹெச்.ஐ.வி-யிலிருந்து முழுமையாக மீண்ட  ஆடம் காஸ்டிலேஜோ
ஹெச்.ஐ.வி-யிலிருந்து முழுமையாக மீண்ட ஆடம் காஸ்டிலேஜோ

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் CCR 5 ரிசெப்டாரை ஜீன் தெரபி மூலம் சரிசெய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

`ஹெச்.ஐ.வி வைரஸால் ஒரு முறை பாதிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் பாதிப்புதான். அதிலிருந்து மீள முடியாது' என்கிறது மருத்துவ உலகம். அந்தக் கருத்தை மறுஆய்வுக்கு உள்ளாக்கும் வகையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் முழுமையாக ஹெச்.ஐ.வி தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஹெச்.ஐ.வி தொற்றிலிருந்து 100% குணமான, உலகின் இரண்டாம் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HIV
HIV
Samples

லண்டனைச் சேர்ந்த 40 வயதான ஆடம் காஸ்டிலேஜோ (Adam Castillejo) ஹெச்.ஐ.வி-க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தி 30 மாதங்கள் ஆகின்றன. அவர் தற்போது ஹெச்.ஐ.வி தொற்று இல்லாமல் உள்ளார். காரணம், ஸ்டெம்செல் சிகிச்சை.

ஆடம் ஒரு புற்றுநோயாளியும்கூட. அவர் புற்றுநோய்க்கு மேற்கொண்ட ஸ்டெம் செல் சிகிச்சை, ஹெச்.ஐ.வி பாதிப்பை குணமாக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Blood samples
Blood samples

ஆடம்க்கு ஸ்டெம்செல் தானம் அளித்தவரின் மரபணுவிலுள்ள எதிர்ப்புத்தன்மை இவருக்கு ஹெச்.ஐ.வி-யிலிருந்து பாதுகாப்பு அளித்துள்ளது. தானம் பெறப்படும் நோய் எதிர்ப்பு செல், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவரின் உடலில் வைரஸ் கிருமிகள் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதே ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை.

2011-ம் ஆண்டு பெர்லினைச் சேர்ந்த டிமோதி பிரவுன் (Timothy Brown) என்ற ஹெச்.ஐ.வி நோயாளர், இதேபோன்ற சிகிச்சையை மூன்றரை வருடங்கள் தொடர்ந்து எடுத்து, ஹெச்.ஐ.வி-யிலிருந்து முழுமையாக குணம்பெற்ற முதல் நபராக அறிவிக்கப்பட்டார்.

இப்போது, ஆடமின் ரத்தம், விந்தணுக்கள், திசுக்களில் எந்தவித ஹெச்.ஐ.வி பாதிப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக மீண்ட இரண்டாவது மனிதராக அவர் உலகுக்கு அறிமுகமாகிறார்.

HIV
HIV

``ஹெச்.ஐ.வி-யிலிருந்து முழுமையாக குணம்பெற முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்" என்று கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் தலைமை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரவீந்திர குமார் குப்தா கூறியுள்ளார்.

கேன்சருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை ஹெச்.ஐ.வி-யை குணமாக்கி உள்ளது. ஆனால் இதை, உலகில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு அளிக்க முடியாது. தற்போதுள்ள ஹெச்.ஐ.வி மருந்துகள் நோயாளிகளை ஆரோக்கியமாக அதிக நாள் வாழ வைக்கக்கூடியவை. புற்றுநோயாலும், ஹெச்.ஐ.வி-யாலும் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மட்டுமே இந்தத் தீவிர சிகிச்சை அளிக்க முடியும். ஹெச்.ஐ.வி நோயால் மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை பொருந்தாது. வருங்காலத்தில் மரபணு மாற்று சிகிச்சையின் மூலம் ஹெச்.ஐ.வி-யை குணமாக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Adam Castillej
Adam Castillej

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் CCR 5 ரிசெப்டாரை ஜீன் தெரபி மூலம் சரிசெய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி மரபணுமாற்று குழந்தைகளை உருவாக்கிய சீன விஞ்ஞானி ஹி ஜியான்குய் (He Jiankui) தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan

`99 சதவிகித நோய் எதிர்ப்பு செல்கள் மட்டுமே தானமாகப் பெறப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.வி மீண்டும் பரவாது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது' என்றும் சிலர் கருதுகின்றனர். 100% ஹெச்.ஐ.வி பிடியிலிருந்து விடுதலை கிடைக்குமா என்பதற்கான விடை காலத்தின் கையில்தான் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு