கட்டுரைகள்
Published:Updated:

ஆண்களின் செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள் 10!

செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள்

மனித உடலில் இருக்கும் ரத்தக்குழாய்கள் சிறுவயதில் மென்மையாக இருக்கும். வயது செல்லச் செல்ல தடிமனாகிவிடும்

1. விந்தணுக்கள் வீரியமாக வேண்டுமா..?

ஓர் ஆணின் ஆரோக்கியத்துக்கு எந்த உணவுகளெல்லாம் நன்மை செய்யுமோ, அவை விந்தணுக்களின் வீரியத்துக்கும் நன்மையே செய்யும். குறிப்பாக, காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், சிக்கன், மட்டன், மீன், முட்டை என்று உணவு சரிவிகிதமாக இருந்தால், விந்தணுக்கள் வீரியமாக இருக்கும்.

2. ஆணுறுப்பில் வெடிப்பு, எரிச்சலா?

ஆணுறுப்பில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையென்றாலோ உறுப்பு உலர்ந்து, வெடிப்பும் விடலாம். மனைவிக்கு ட்ரைகோமோனஸ் வெஜைனிட்டிஸ் (Trichomonas vaginitis) என்கிற தொற்று இருந்தால், கணவனுடைய ஆணுறுப்பில் வெடிப்பு, எரிச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கணவன், மனைவி இருவருமே ஒரே நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னையை சரிசெய்துவிடலாம்.

ஆண்களின் செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள் 10!

3. விறைப்புத்தன்மை இல்லையா?

மனித உடலில் இருக்கும் ரத்தக்குழாய்கள் சிறுவயதில் மென்மையாக இருக்கும். வயது செல்லச் செல்ல தடிமனாகிவிடும். இதனால், ரத்தக்குழாய்களுக்குள் செல்கிற ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து, ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் நோய்கள் இருந்தாலும், அல்லது புகைப்பழக்கம் இருந்தாலும், ரத்தக்குழாய்கள் சேதமடைந்து, ஆணுறுப்புக்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காது. 50 வயதுக்கு மேல் ஆண் ஹார்மோனின் சுரப்பு குறைந்தாலும் விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும். வாழ்வியல் நோய்களைக் கட்டுக்குள் வைத்து, ஹார்மோன் மாத்திரை, ஊசி மருந்து, ஆயின்மென்ட் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.

4. மாதவிடாயின்போது தாம்பத்திய உறவு?

மாதவிடாயின்போது வெளியேறக்கூடிய ரத்தமானது, `டிஸ்டில்டு வாட்டர்’ போல சுத்தமாக இருக்கும். அதனால், அந்த நேரத்தில் உறவுகொண்டால் கணவருக்குக் கிருமித்தொற்று வராது.

5. உடலுறவின்போது சிலருக்கு ஹார்ட் அட்டாக்... ஏன்?

உடலுறவில், உச்சக்கட்டம் என்கிற ஆர்கசம் அடையும்போது உடல் முழுக்கவே ஒரு பரவச நிலையில் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அரிதிலும் அரிதாக சிலருக்கு மாரடைப்பு வரலாம். குறிப்பாக, புது பார்ட்னருடன், ஹோட்டல் போன்ற வெளியிடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது பதற்றமும் த்ரில்லும் அதிகமாக இருக்குமென்பதால், ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். இதுவே வீட்டில், மனைவியுடன் உறவுகொள்கையில் பதற்றம் இருக்காது என்பதால், ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். மற்றபடி, இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், பைபாஸ் செய்துகொண்டவர்கள், இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக்கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் உறவுகொள்ள வேண்டும்.

ஆண்களின் செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள் 10!

6. விந்து சொட்டுச் சொட்டாக வருகிறதே..?

விந்து பொதுவாகவே விட்டு விட்டுத்தான் வரும். மருத்துவக் காரணத்தால் விந்து சேகரிப்புக்கு வலிந்து ஆணுறுப்பைத் தூண்டும்போது, உறுப்பின் பக்கத்தில் இருக்கிற மற்ற சுரப்பிகளில் இருந்து ஒன்றிரண்டு சொட்டுகள் வந்துவிடலாம், அது விந்து அல்ல. ஒருவேளை விந்துவே குறைவாக வருகிறது என்றால், விந்து எடுத்தவுடன், தனியாக ஒரு வெள்ளைப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். அதில் விந்து திரவம் பாலாடைபோல சேர்ந்து வரலாம். இப்படி வந்தால், விந்துவானது சிறுநீர்ப்பைக்குள் சென்று விழுந்துவிட்டது என்று அர்த்தம். இதன் காரணமாகவும் சில சொட்டுகள் மட்டுமே விந்து வரும். நீரிழிவு இருப்பது, சில மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருப்பது, புராஸ்ட்டேட் சுரப்பியில் அறுவைசிகிச்சை செய்திருப்பது போன்ற காரணங்களாலும் விந்து சொட்டுச் சொட்டாக வரும். அதற்கான மருந்துகளைச் சாப்பிட்டாலே தீர்வு கிடைத்துவிடும்.

7. சுய இன்பத்தின்போது ரத்தம் வருகிறதா?

சுய இன்பம் செய்யும்போது மட்டுமல்ல, தாம்பத்ய உறவின்போதும் சில ஆண்களுக்கு ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம். ஆணுறுப்பின் அடிப்பகுதியில் மெல்லிய இழை ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இது மிகவும் மென்மையான பகுதி. வேகமாக சுய இன்பம் செய்யும்போதோ, வேகமாக உறவுகொள்ளும்போதோ இந்த இழை அறுந்து ரத்தம் வரலாம். அப்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரும். இந்த ரத்தம் ஃபிரெஷ்ஷாக இருந்தால், இந்தக் காயம் ஆறுகிற வரைக்கும் சுய இன்பமோ, தாம்பத்திய உறவோ மேற்கொள்ளக் கூடாது. ஆனால், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், புராஸ்ட்டேட் சுரப்பியில் அல்லது செமனைல் வெசிக்கிள் (seminal vesicle) ஆகிய இடங்களில் ரத்தக்கட்டிகள் இருக்கலாம். உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

8. ஆணுறுப்பின் மேல்தோலை முன், பின்னாக நகர்த்த முடியவில்லையா?

பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு முதலிரவின்போது ஆணுறுப்பின் முன்தோல் வலிந்து பின் தள்ளப்படுவதால் கிழிந்து ரத்தம் வரும். ஆணுறுப்பின் மேல்தோலைப் பின்னுக்குத் தள்ள முடியாத பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி தேவைப்பட்டால் அதற்கான அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

ஆண்களின் செக் ஷுவல் ஹெல்த்... வழிகாட்டல்கள் 10!

9. கர்ப்பிணி மனைவியுடன் உறவு கொள்ளலாமா?

கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் உறவு வைத்துக்கொண்டால் கரு கலைந்துவிடுமோ என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், கருத்தரித்த ஆரம்பத்தில் கருவானது கண்ணுக்கே தெரியாத அளவில்தான் இருக்கும். அந்த அளவுக்குச் சிறிதான கரு, தாம்பத்ய உறவின்போது நிகழ்கிற உடல் அசைவுகளால் கலையாது. கர்ப்பகாலம் முழுவதும் தாம்பத்ய உறவு கொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது. வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் பொசிஷனை மாற்றி உறவுகொள்ளலாம். ஆனால், மனைவியின் கர்ப்பகால உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை இருந்தால், மருத்துவ ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

10. வளைந்த ஆணுறுப்பு... பிரச்னையா?

பலரும் ஆணுறுப்பு 90 டிகிரியில் நேராக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மேல் நோக்கி, கீழ் நோக்கி, வலது அல்லது இடது பக்கம் நோக்கி என லேசாக வளைந்துதான் இருக்கும். இந்த வளைவுகள் எல்லாம் இயல்பானவையே. ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்றால், உள்ளாடை அணியும்போது ஆணுறுப்பு எந்தப் பக்கம் வளைந்திருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக ஆணுறுப்பை ஒதுக்கி வைத்து உள்ளாடை அணிய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால் கொஞ்ச காலத்தில் அந்த வளைவு சரியாவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்து `எல்’ மாதிரியோ, `எஸ்’ மாதிரியோ வளைந்திருந்தால் அது `பைரோனி’ (Peyronie) என்கிற நோயாக இருக்கலாம். இப்படி வளைந்திருப்பதால் அதன் நீளம் குறைவாக இருக்கும். விறைப்புத்தன்மை அடையும்போது சுரீரென்று வலிக்கும். விறைப்புத்தன்மை வருவதிலும் பிரச்னை இருக்கும். சிகிச்சை மூலம் பைரோனியை முற்றிலும் சரிசெய்ய முடியும்.