`அந்த உழைப்பை அவமதித்துவிடாதீர்கள்!' - அமெரிக்காவில் முதல் பேட்ச் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷர்மிளா

அமெரிக்காவில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் குறித்தும், இந்தத் தடுப்பூசி ஏன் முக்கியமானது என்பது குறித்தும் ஷர்மிளா கோபாலகிருஷ்ணன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
கொரோனா தொற்று குறித்த பயத்தைவிட அதற்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த பயம் வேகமாகப் பரவிவருகிறது. தடுப்பூசிக்கு எதிராகத் தற்போது சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பூசியின் அவசியம் குறித்து மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். மக்களிடம் இதுகுறித்த அறிவியல் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெய்லர்வில் மெமோரியல் மருத்துவமனையில் தெரெப்பிஸ்டாகப் பணியாற்றும் ஷர்மிளா கோபாலகிருஷ்ணன், கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். பிரபல சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லத்தின் மகள் இவர். அமெரிக்காவில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் குறித்தும், இந்தத் தடுப்பூசி ஏன் முக்கியமானது என்பது குறித்தும் இங்கே பகிர்ந்துகொள்கிறார். தடுப்பூசி குறித்து ஷர்மிளா சொல்லும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

``டிசம்பர் 17-ம் தேதி, ஃபைஸர் நிறுவனத்தின் கோவிட் 19 தடுப்பூசி எனக்குக் கிடைத்தது. மருத்துவப் பணியில் இருப்பதால் இது எனக்குக் கிடைத்துள்ளது. இதை மிகப் பெருமையாகக் குறிப்பிடக் காரணம் உண்டு.
என்னுடைய தாத்தா கே.எஸ்.ராமகிருஷ்ணன். 1940-களில் அவர் இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர். அதில் ஓய்வு பெற்ற பிறகு, பப்ளிக் ஹெல்த் ஆபீஸராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போதுதான் இந்தியா முழுவதும் அம்மை நோய் பரவத் தொடங்கியது. பல லட்சக்கணக்கான மக்கள் அந்த நோயினால் பலியாயினர். அதற்குத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலானவர்கள் அதைப் போட்டுக்கொள்ளத் தயங்கினர். காரணம், அம்மை என்பது தெய்வச் செயல் என்று நம்பியதுதான். அம்பிகையே நம் உடலில் விளையாடுவதாகவும் அதனால் மருந்துபோட்டு அதைத் தடுக்கக்கூடாது என்றும் எண்ணினர். அப்போது அவர்களிடம் சென்று தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அவர்களை ஊசிபோட்டுக்கொள்ளுமாறு அப்போதைய அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
என் தாத்தா தென் இந்தியாவில் பல கிராமங்களுக்கும் சென்று, அங்கு வீடு வீடாகப் போய் அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்தார். மேலும், அவர்களுக்குத் தடுப்பூசி தொடர்பான பயத்தைப் போக்கவும் செய்தார். இதை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். என் தாத்தாவைப் போலப் பலர் இந்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அதன்மூலமே அம்மைத் தடுப்பூசி நாடுமுழுவதும் போடப்பட்டு மக்கள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெற்றனர். தற்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது எனக்கு அந்த நாள்கள்தான் நினைவுக்கு வருகின்றன. தடுப்பூசி குறித்த அச்சம் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகிறது.

கோவிட் ஒருவரைத் தாக்கினால், அது அவருக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகிறது. பலருக்கும் உள்ளுறுப்புகள் செயல்பாட்டில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பலருக்கு இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள் பலருக்கு சிந்திக்கும் ஆற்றலும் ஞாபக மறதியும்கூட ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற நிரந்தர பாதிப்புகளோடு ஒப்பிடும்போது தடுப்பூசி போடுவதால் ஏற்படும் மிகக்குறைந்த தற்காலிக பாதிப்புகள் ஒன்றுமேயில்லை.
நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பாக அதுகுறித்து மருத்துவர்களும் ஆய்வாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். மருத்துவ ஜர்னல்களில் வெளியாகும் இதுகுறித்த கட்டுரைகள் மிகவும் திருப்திகரமாக இருந்தன. பொதுவாகவே தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வகங்களில் எப்படி அர்ப்பணிப்போடு பணிசெய்வார்கள் என்பதை சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் பணியாற்றிய என் பெரியம்மா டாக்டர் சாரதா சுந்தரம் மூலம் அறிந்திருக்கிறேன். இவை எல்லாம் தடுப்பூசி குறித்த பயத்தை முதலில் போக்கின.
நான் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணமும் வலுவானது. பணி செய்யும் இடத்திலிருந்து எனக்கு கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. என் மூலம் என் வீட்டில் உள்ளவர்களுக்கும் அது பரவலாம். அதைத் தடுக்க நான் ஊசி போட்டுக்கொண்டே ஆக வேண்டும். இதே போன்று அவசியம் நம் அனைவருக்குமே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டால் தொற்று பரவுவது தடுக்கப்படும். ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
டிசம்பர் 17 அன்று தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன். இனி ஜனவரி 8-ம் தேதி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். வழக்கமாக ஊசி போட்ட இடத்தில் உருவாகும் சிறு தடிப்பும் அடையாளமும் மட்டுமே இருக்கிறது. மற்றபடி இந்த ஊசியினால் வேறு எந்தப் பக்கவிளைவுகளும் என் உடலில் ஏற்படவில்லை. நீண்ட கால உடல் பாதிப்புகளுக்கு உள்ளாவதைத் தவிர்க்க இதைத் தவிர வேறுவழியில்லை.

மருத்துவத்துறை சார்ந்த பலரின் கடின உழைப்பால் இன்றைய மருத்துவம், மனித குலத்துக்கு எதிரான நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசிகளைக் கண்டடைந்திருக்கிறது. அந்த உழைப்பை, ஆதாரமற்ற அறைகூவலுக்குக் காதுகொடுப்பதன் மூலம் அவமதித்துவிடக் கூடாது. வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசி உங்களை வந்து சேரும்வரை கட்டாயம் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடிச் சுத்தம் செய்வது, கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது என்று தற்போது கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் விரைவில் கோவிட் இல்லாத உலகம் நம் வசமாகும்” என்றார் ஷர்மிளா.
- காயத்ரி கணேஷ்