Published:Updated:

மனஅழுத்தம், தலைவலி, முதுகுவலி... விடுப்பு எடுத்து ஓய்வெடுக்க வேண்டிய 5 உடல்நலப் பிரச்னைகள்!

சளி, இருமலுக்கெல்லாம் விடுப்பு எடுப்பதற்கு 75 சதவிகிதம் பேர் விரும்புவதில்லை. இந்த அற்ப காரணத்துக்கெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கேட்க முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

உலகமே கொரோனா வைரஸ் தொற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. காய்ச்சல், இருமல் என அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து வீட்டில் தனியாக ஓய்வெடுக்க வேண்டும் என ஒவ்வொரு நாடும் பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது.

கொரோனா வைரஸ் என்றில்லாமல் எந்தெந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விடுப்பு எடுத்து ஓய்விலிருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus
2
சளி

சளி, இருமல், ஃபுளூ காய்ச்சல்

மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, தொடர் இருமல், ஃபுளு காய்ச்சல் போன்ற நேரங்களில் எல்லாம் உடல் மிகவும் பலவீனமாகக் காணப்படும். இதுபோன்ற நேரங்களில் விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுப்பதே சிறந்தது. மீண்டும் அலுவலகத்துக்குச் செல்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாகவே காய்ச்சல் குணமாகிவிட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சளி, இருமலுக்கெல்லாம் விடுப்பு எடுப்பதற்கு 75 சதவிகிதம் பேர் விரும்புவதில்லை. இந்த அற்ப காரணத்துக்கெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கேட்க முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அந்தச் சமயத்திலும் விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுப்பதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அலுவலகத்தில் நடமாடி பலருக்கும் அந்தத் தொற்றை பரப்புவதற்குப் பதில் வீட்டில் ஓய்விலிருப்பதே சிறந்தது.

அதுபோன்ற நேரங்களில் நீர்ச்சத்துள்ள பானங்களைக் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க முடியும். இருமல், தும்மல் தொந்தரவுகளின்போது ஒருமுறை பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்களையே பயன்படுத்தவும். ஒவ்வொருமுறை தும்மிய பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

3
தலைவலி

தலைவலி

பலருக்குப் பொதுவான பிரச்னையே இந்தத் தலைவலிதான். ஒரு மாத்திரை போட்டால் அதற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றாலும் ஒற்றைத் தலைவலி அந்த வகையைச் சேர்ந்தது இல்லை. ஒற்றைத் தலைவலி பிரச்னை சிலருக்கு பல நாள்கள்கூட நீடிக்கலாம். அதிலும் சிலருக்கு தலைவலியுடன் பார்வையில் தெளிவின்மை, குமட்டல், வாந்தி ஆகிய தொந்தரவுகளும் ஏற்படும். அதுபோன்ற நிலையில் விடுப்பு எடுப்பதே சிறந்தது.

ஓய்வு, போதுமான அளவு நீர் அருந்துதல், வலி நிவாரண மாத்திரைகள் ஆகியவை பயன் தரும். மனஅழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, பார்வை குறைபாடு, மதுப்பழக்கம், வேளைக்கு உணவு உண்ணாமை, சோர்வு, உணவு ஒவ்வாமை போன்றவை ஒற்றைத் தலைவலியை மேலும் தூண்டலாம். எனவே, தலைவலியைத் தூண்டும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4
வாந்தி

வாந்தி, வயிற்றுப்போக்கு

மாதவிடாய்... அறிந்ததும் அறியாததும்! A to Z தகவல்கள் #HappyPeriods #AllAboutMenstruation

இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுப்பது மட்டுமே சரியாக இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கு வைரஸ்அல்லது பாக்டீரியா தொற்றுகள் காரணமாக அமையலாம். பிறருடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம் அந்தத் தொற்று மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. நீர்ச்சத்துள்ள பானங்களை அதிக அளவில் எடுப்பதன் மூலம் நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்கலாம். வீட்டில் ஓய்விலிருப்பதே சிறந்தது.

அடிக்கடி கை கழுவுதல், கைக்குட்டை, துண்டு ஆகியவற்றை தனியாகப் பயன்படுத்துதல், கழிவறைகள், வாஷ் பேசின் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்துதல் ஆகியவை மிகவும் அவசியம்.

5
மன அழுத்தம்

மனஅழுத்தம், மனப்பதற்றம்

மனநலம் சார்ந்த பிரச்னைகளோடு பணியாற்றினால் போதுமான உற்பத்தியை அளிக்க முடியாது. அதனால் பணியிடத்திலும் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். உடல்நலப் பிரச்னைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை மனநலப் பிரச்னைகளுக்கும் வழங்க வேண்டும். மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் தயங்காமல் விடுப்பு எடுக்க வேண்டும்.

மனநலப் பிரச்னைகளோடு இருப்பதாகத் தெரிவித்த பலருக்கு அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கி பணி நீக்கம் ஏற்பட்டிருப்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதனால் அதுபோன்ற நேரங்களில் விடுப்பு எடுத்துவிட்டு மருத்துவரையோ மனநல ஆலோசகரையோ அணுகுவதுதான் சிறந்தது. நெருங்கியவர்களுடன் மனம்விட்டுப் பேசுவது, ஒழுங்கான உடற்பயிற்சிகள் போன்றவை நலம் பயக்கும்.

6
முதுகு வலி

முதுகு வலி

`கொரோனாவைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி!' - பெங்களூரில் தற்காலிகமாக மூடப்பட்ட நிறுவனங்கள்

அதிக நேரம் இடைவிடாது பணியாற்றுவது முதுகு வலி, கழுத்து வலி, தசைகளில் வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். ஆனால், இதுபோன்ற வலிகள் ஏற்படும் சமயம் முடங்கிவிடாமல் வழக்கம்போல் செயல்படுவது அவசியம்.

ஒருவேளை உங்கள் வேலை அதிக உடலுழைப்பு மிகுந்ததாக இருக்கும் பட்சத்தில் உயரதிகாரியிடம் அனுமதி பெற்று சற்று வேலையைக் குறைத்துக்கொள்வது நல்லது.

எப்போதாவது மட்டும் இந்தப் பிரச்னை ஏற்பட்டால் வலி நிவாரண மாத்திரைகள், ஹாட் அல்லது கோல்ட் பேக் வைப்பது தீர்வாகும். பிரச்னை நீடிக்கும் பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். முதுகுப் பகுதியை வலுப்படுத்த நாள்தோறும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உங்கள் தோற்றத்தைக் (Posture) கண்காணித்தல், உயரத்துக்கேற்ற எடையை நிர்வகித்தல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்த்தல் போன்றவை பிரச்னை தீவிரமாவதைத் தடுக்கும்.

அடுத்த கட்டுரைக்கு