Published:Updated:

உடல் சூட்டைத் தணிக்கும் ஆயில் மசாஜ்; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மசாஜ் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன… உண்மையில் பாரம்பர்ய முறைப்படி அவர் மசாஜ் செய்கிறாரா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அனுபவம் இல்லாதவர்கள் செய்தால் பிரசனைகள் அதிகம்.

ஒகேனக்கல் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஆயில் மசாஜ்தான்! பலமுறை ஒகேனக்கல் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. தண்ணீர் பிரவாகம் அதிகம் இருக்கும்போது… தண்ணீர் பிரவாகம் குறைவாக இருக்கும்போது… என நீர்வரத்து குறித்து தீர விசாரித்து பல்வேறு பரிமாணங்களில் ஒகேனக்கலின் அழகை ரசித்திருக்கிறேன்.

தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது, அருவியை நோக்கி நீங்கள் சென்றால் உங்களைச் சுற்றி மசாஜ் செய்பவர்கள் சூழந்துகொள்வார்கள். `ஆயில் மசாஜ் பண்ணிக்கோங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது… உடம்புல இருக்குற ஹீட்டெல்லாம் குறைஞ்சுடும்… ஆயில் மசாஜ் பண்ணிட்டு அருவியில குளிச்சிக்கலாம்…’ என எண்ணெய்க் குளியலின் பிரதிபலன்களைச் சுட்டிக்காட்டி மசாஜ் செய்ய அழைப்பார்கள். அதுவே நீர்வரத்து அதிகமிருந்து, அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தால், வேறு இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் மசாஜ் பிரியர்கள்!

Hogenakkal Falls
Hogenakkal Falls
Photo: Dhanasekaran.K / Vikatan
தேகப்பொலிவு முதல் குடல் ஆரோக்கியம் வரை; மக்காச்சோளத்தின் மகத்துவம் அறிவோமா?

இப்போதைய சூழலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து மிக அதிகம் என்பதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மசாஜ் செய்வதற்கு ஆற்றங்கரையோரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யூடியூபர் நண்பர் ரகு ஒகேனக்கல் மசாஜ் குறித்த காணொளி ஒன்றை வெளியிட, அவரிடம் மசாஜ் செய்பவரின் அலைபேசி எண் பெற்றுக்கொண்டு ஒகேனக்கல் சென்றிருந்தேன். அப்படி அந்த மசாஜில் என்னதான் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆயத்தமானேன்.

ஒகேனக்கல் வந்த பிறகு, ஓசூர் செல்லும் சாலை வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் வந்தால், இப்போது மசாஜ் செய்யப்படும் புதிய இடத்திற்கு நீங்கள் வந்துவிடலாம் என்றார் மசாஜ் செய்யும் நண்பர். இடத்தை அடைந்துவிட்டேன். கண்ணுகெட்டிய தூரத்தில் காவிரி ஆறு கரையைப் புரட்டாமல் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் செல்லச் செல்ல தப்… தப்… எனத் துணியை கனத்த பாறையின் மீது அடித்துத் துவைப்பது போன்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது..! ஒருவேளை துணி துவைக்கிறார்களோ என நினைத்துக்கொண்டு அருகில் சென்று பார்த்தபோது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது!

கேட்ட தப்… தப்… ஓசை பாறையிலிருந்து வந்தது அல்ல… மனித முதுகுகளிலிருந்து வந்தது என்பதை அறிந்துகொண்டேன். ஏறக்குறைய நாற்பது நபர்களுக்கு வெவ்வேறு நபர்கள் மசாஜ் செய்துகொண்டிருந்தார்கள். `கண்டிப்பா நம்ம மசாஜ் பண்ணணுமா… இல்ல அவர்கிட்ட சொல்லாம கிளம்பிடலாமா…’ என்று தோன்றியது. `ரைட்டு வந்தாச்சு… என்னதான் இருக்குன்னு பார்த்திடலாம்…’ என மசாஜுக்கு தயாரானேன்.

Hogenakkal Falls
Hogenakkal Falls
Photo: Dhanasekaran.K / Vikatan

காவிரி ஆற்றங்கரையோரம்… அழகான மணற்மேடுகள்… ஆற்றில் வெளித்தெரிந்த பாறைகள் மீது நிறைய நீர்க்காகங்கள் இறக்கைகளை விரித்து இளைப்பாறிக்கொண்டிருந்தன. நீர்க்காகங்கள் போலவே எண்ணெய்த் தேய்த்திருந்த மனிதர்களும் மணற்மேடுகளில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். நீர்க்காகங்கள் இறகுகளில் படிந்த தண்ணீரை உலர வைப்பதற்காகக் காத்திருந்தன. மனிதர்களோ தேகத்தில் ஊறிய எண்ணெயை உட்கிரகிப்பதற்காகக் காத்திருந்தார்கள்… அவ்வளவே வித்தியாசம். `நம்மைப் போலவே எதற்காக இவர்கள் இப்படி வித்தியாசமாக இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்…’ எனக் காகங்கள் மனித இனத்தை நிச்சயம் சந்தேகப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உச்சி முதல் பாதம் வரை நல்லெண்ணெயைப் படிப்படியாக தேய்த்தார் மசாஜ் செய்பவர். ஏற்கெனவே கேட்ட `தப்-தப்’ ஓசை திடீரென நினைவுக்கு வர, `பிரதர்… கொஞ்சம் லைட்டா மட்டும் பண்ணுங்க… முதல் அனுபவம்… அவங்களுக்குப் பண்ண ஃபோர்ஸ்லாம் வேணாம்…’ என ராஜா ராணி நஸ்ரியா போல, `பிரதர்ர்ர்ர்’ என அன்புடன் சொல்லிவைத்தேன்! `சார் மசாஜ்னு வந்த பிறகு, இதெல்லாம் சொல்லலாமா… இப்ப உங்க உடம்பு என் கையில…’ என மசாஜ் பிரதர் காமெடி என்ற பெயரில் திகிலைக் கொடுக்க, மசாஜ் செயல்பாடுகள் தொடங்கின.

சித்த மருத்துவத்தில் தொக்கண (மசாஜ்) அறிவியலில் சொல்லப்பட்டுள்ள உருவல்… தட்டல்… இறுக்கல்… கைக்கட்டல்… முறித்தல்… பிடித்தல்… அழுத்தல்… என அனைத்து விதமான மசாஜ் டெக்னிக்குகளும் என் உடம்பில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. உருவும்போதும், தசைகளைப் பிடித்து அழுத்தும்போதும் பெரியளவில் தெரியவில்லை. ஆனால் தட்டும்போது மட்டும் செம்ம அடி! தலையில் எண்ணெய்த் தடவல் ஆரம்பமானபோது சின்ன தம்பி பிரபு நினைவில் எட்டிப் பார்த்தார். ஏறக்குறைய அரை மணி நேரம் நடைபெற்ற சம்பவம் ஒருவழியாக நிறைவுற்றது. மல்லாந்து படுத்து… குப்புறப்படுத்து… நேரே நிமிர்ந்து… அமர்ந்து… நின்று எனப் பல்வேறு நிலைகளில் மசாஜ் செய்யப்பட்டது.

Coconut Oil
Coconut Oil
Photo: Ramkumar.R / Vikatan

சித்த மருத்துவத்தின் வர்மத்தடவல் முறை குறித்த மருத்துவ அனுபவம் எனக்கு ஏற்கெனவே இருப்பதால், அவர் முறையாகச் செய்கிறாரா… இல்லை முறையில்லாமல் எனது உடம்பில் முயல்கிறாரா என்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. வர்ம தொக்கண முறைப்படியே நயமாகச் செய்து முடித்தார் அவர். எவ்வித பிசகும் தவறும் இல்லை.

அக்கால அரசுகளில் மல்லர்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள் எனும் செய்தியும் நினைவுக்கு வந்தது! போர் வீரர்களின் எலும்பு மூட்டு விலகலை சரிசெய்யும் மருத்துவர்களாகவும், உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு உற்சாகமூட்டும் கருவிகளாகவும் மல்லர்கள் இருந்திருக்கிறார்கள். ராஜ உறுப்பினர்களின் உடலுக்கு தொக்கணம் மூலம் ஊட்டம் கொடுப்பதும் மல்லர்களின் முக்கியப் பணி.

`பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழில்தான் செய்யுறோம் சார்… இதுதான் எங்க குலத்தொழில்…’ என்பதை அவர் பகிர்ந்துகொண்டார். `ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு மசாஜ் செய்வீங்க’ என நான் கேட்க, ‘10 – 12 பேருக்கு திடமா பண்ணலாம் சார்… அதுக்கு மேல நம்ம உடம்பு போயிடும்…’ என்றார் அவர். `கொரோனா காலத்துலதான் ரொம்ப கஷ்டப்பட்டுடோம் சார்… சுற்றுலா பயணிகளின் வரத்து இல்லாம, தொழிலை விட்டுட்டு கல்குவாரிக்குப் போயிட்டேன்… `கல்லப் புடிக்கிற கையா சார் இது… உடம்ப கல்லாக்குற கை… எப்படியோ இப்போ திரும்பவும் எங்க குலத்தொழில் பக்கம் திரும்புனதுல சந்தோஷம்… இப்போதும் சனி, ஞாயிறு விட்டா மத்த நாள்கள்ல பெரிய வருமானம் இல்ல…’ என தன் மனக்குறைகளை என்னோடு பகிர்ந்துகொண்டார்.

விக்ரம் குமார்
விக்ரம் குமார்

`ஒரு மசாஜுக்கு எவ்ளோ வாங்குவீங்க’ என்ற எனது கேள்விக்கு… `சார் நிறைய மசாஜ் வகைகள் இருக்கு… சிங்கிள் மசாஜுக்கு 400 முதல் 500 ரூபாய்… அதுவும் எங்க திறமையைப் பொறுத்து, அதிகமாகவும் கேட்போம். நாங்க செய்யும் முறையில திருப்தியடைஞ்சு அதிகமா கொடுத்துட்டுப் போறவங்களும் இருக்காங்க. டபுள் மசாஜ்னு ஒண்ணு இருக்கு… அதுக்கு 900 - 1,000 ரூபாய்… அதாவது முதல்ல எண்ணெயில்லாம உடல் முழுக்க மசாஜ் செய்துட்டு, அப்புறம் எண்ணெய் தேய்ச்சு மசாஜ் செய்து முடிச்சு, சீயக்காய் கொண்டு குளியல் வரை செய்து முடிப்போம்… இப்போ புதுசா பவுடர் மசாஜும் அறிமுகம் செய்திருக்கோம்… டிரை பண்றீங்களா…’ என முடித்தார் அவர்.

`நமக்கு சிங்கிள் மசாஜுக்கே உடம்பு தாங்குமான்னு தெரியல… டபுள் மசாஜா… நீங்க வேற…' என நான் அலுத்துக்கொள்ள, `சார் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… இந்த ஆத்துல குளிச்சிட்டு… வீட்ல போயி சுடுதண்ணி வச்சிக் குளிச்சிடுங்க… நைட்டு அடிச்சிப்போட்ட மாதிரி தூக்கம் வரும்… திரும்பவும் காலைல ஒரு சுடுதண்ணிக் குளியல் போட்டீங்கணா உடம்பு நார்மல் ஆகிடும்… எவ்ளோ தெம்பா ஃபீல் பண்ணுவீங்க பாருங்க...’ என்று ஆறுதல் அளித்தார்… அவர் சொன்ன படியே இரவு அடித்துத் துவைத்தது போல உறக்கம் வந்தது. ஆனால் உறக்கத்தில் அடிக்கடி முனகல் சத்தம் கேட்டுக்கோண்டே இருந்திருக்கிறது என்பதை காலையில்தான் தெரிந்துகொண்டேன். அப்படியொரு வலியாக்கும்! காலை மீண்டும் வெந்நீர் குளியல் எடுக்க நார்மலுக்குத் திரும்பியது எனது உடல்.

Massage (Representational Image)
Massage (Representational Image)
Photo: Rajendran.L / Vikatan

முறையான என்ணெய்க் குளியலில் எவ்வளவு பலன்கள் இருக்கிறது என்பது சித்த மருத்துவனாக எனக்கு நன்றாகவே தெரியும். விருப்பத்துடனே இந்த எண்ணெய் மசாஜ் குளியலை எடுத்துக்கொண்டேன்… மறுநாள் முதல் உடலில் ஓர் உற்சாகம்… ஆழ்ந்த உறக்கம்… நல்ல பசி உண்டானதை என்னால் உணர முடிந்தது! முதன்முறை என்பதால் கொஞ்சம் வலியும் சோர்வும் அன்றைய இரவில் பாடாய்ப்படுத்திவிட்டது உண்மைதான். இத்தனைக்கும் மற்றவர்களுக்கு செய்ததைப் போல, அதிக வலிமையுடன் எனக்கு அவர் மசாஜ் செய்யவில்லை என்பதே உண்மை!

மசாஜ் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன… உண்மையில் பாரம்பர்ய முறைப்படி அவர் மசாஜ் செய்கிறாரா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அனுபவம் இல்லாதவர்கள் செய்தால் பிரச்னைகள் அதிகம். அதைப் போலவே தலைப்பகுதியில் அதிக வலுவுடன் தட்டும் முறைகளைத் தவிர்க்கச் சொல்லிவிடுவது சிறந்தது! கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் பிரச்னை உடையவர்கள், முன்னரே உங்கள் பிரச்னையைச் சொல்லி வைப்பது சாலச் சிறந்தது. முறுக்கல் சிகிச்சையில் நோயின் தீவிரம் அதிகரித்துவிடக் கூடாது அல்லவா! எலும்பு அடர்த்திக்குறைவு நோய் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த மசாஜ் உகந்ததல்ல… வேண்டுமானால் வைட்டமின் – `டி’யைப் பெற எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஆற்றங்கரையோரத்தில் `சன் - பாத்’ மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

Massage Oil
Massage Oil
Photo: Rajendran.L / Vikatan
`குளிர்ந்த நீரில் குளித்தால் பக்கவாதம் வருமா?' - வாட்ஸ்அப் ஃபார்வர்டும் உண்மையும்!

கவலை தரக்கூடிய விஷயம் என்னவென்றால், மசாஜ் செய்துகொள்ளும் பெரும்பாலானோருக்கு அருகில் மதுவை ஏந்திய நெகிழி டம்பளர்கள் இருக்கின்றன. மதுபோதையினால்தான் பலத்த அடியெல்லாம் உரைப்பதில்லை போலும். அழகிய ஆற்றங்கரையில் அவ்வளவு மது நாற்றமுடைய நெகிழிக் குப்பைகள். மது உடலுக்கு மட்டுமல்ல, சூழலுக்கும் கேடு என்பதை அந்த ஆற்றங்கரையில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்!

ஒகேனக்கல் மசாஜ்… கடற்கரையோர `சன் - பாத்’ போல, இது ஆற்றங்கரையோர `சன் - பாத்’ சிகிச்சை! மசாஜ் முடிந்தபிறகு, ஆற்றில் குளிப்பதைவிட, அருவியில் ஒரு குளியல் எடுத்துக்கொண்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும்… (மசாஜ் செய்பவர்கள் கொடுக்கும் அடிக்கு இணையாக அருவியின் அடி விழும் என்பது தனிக்கதை!) இருப்பினும் ஆயில் மசாஜ்… அருவியில் குளியல்… இதுவே சிறந்த காம்பினேஷன்! ஒகேனக்கல் சென்றால் முறையானவர்களிடம் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்! உங்களின் உடல்நிலையைப் பற்றி தெளிவாக அவர்களிடம் தெரிவித்துவிட்டு அதற்கேற்ப மசாஜ் சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்!

ஆறுமாதத்துக்கு ஒரு முறை இது போன்ற மெல்லிய தொக்கண சிகிச்சை… வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொண்டால் போதும், நமது உடலுக்கு புத்துணர்வு நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு