Published:Updated:

இயற்கை சோப்பாகப் பயன்பட்டு வந்த பூவந்திக்காய்; அதில் இன்னும் எத்தனை நன்மைகள் தெரியுமா?

சோப்புக்காய் (Representational Image)
News
சோப்புக்காய் (Representational Image) ( Photo by Alexandra Tran on Unsplash )

இப்போது நாம் பயன்படுத்தும் ரசாயனக் கூறுகள் நிறைந்த சோப், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, குளியல் கலவையாக, பொடியாகப் பல்வேறு மூலிகைகள் வழக்கத்தில் இருந்தன. அதில் பூவந்திக்காயின் பங்கு மிக முக்கியமானது. ஆச்சர்யப்படும் வகையில் சோப் கொடுப்பதைப் போலவே நுரையைக் இது கொடுக்கும்.

பூவந்திக்காய்… பெயரே கவித்துவமாக இருப்பதாகத் தோன்றலாம். உண்மைதான் பூவந்திக்காய் என்றாலே பலருக்கும் கவித்துவமான சிறுவயது நினைவுகள் எட்டிப்பார்க்கும். அப்படி அந்தப் பூவந்திக்காய்க்கு இருக்கும் ஃப்ளாஷ்பேக்தான் என்ன..?

பல்வேறு இயற்கை பொக்கிஷங்களை அழகு சாதனப் பொருள்களாகப் பயன்படுத்தி மெருகேற்றிய இயற்கை ஆர்வலர்கள்தான் நாம். காலப்போக்கில் வணிகமயமாதல், நகரமயமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிப்போகத் தொடங்கிவிட்டோம். உடலைத் தூய்மைப்படுத்துவதற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும் நம்மிடம் புழங்கிய இயற்கையின் பரிசுதான் பூவந்திக்காய்!

இயற்கை நுரை:

கிராமங்களைச் சார்ந்த சென்ற தலைமுறையினர் யாரிடம் கேட்டாலும், இளம்வயதில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பூவந்திக்காய் மரம் குறித்து சிலாகித்துப் பேசாமல் இருக்க மாட்டார்கள். விளையாட்டாகப் பூவந்திக்காய்களைச் சேகரித்து, கொட்டைகளை நீக்கி, தோலை ஒன்றுகூட்டி, குளியல் நுரையாகப் பயன்படுத்திய அனுபவம் இன்றும் பசுமை மாறாத கவிதையாக பலருக்கும் மனதுக்குள் நிலைத்திருக்கும்.

விக்ரம் குமார்
விக்ரம் குமார்

இப்போது நாம் பயன்படுத்தும் ரசாயனக் கூறுகள் நிறைந்த சோப், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, குளியல் கலவையாக, பொடியாகப் பல்வேறு மூலிகைகள் வழக்கத்தில் இருந்தன. அதில் பூவந்திக்காயின் பங்கு மிக முக்கியமானது. ஆச்சர்யப்படும் வகையில் சோப் கொடுப்பதைப் போலவே நுரையைக் கொடுக்கும் நம் பூவந்திக்காய். காயில் உள்ள சாபோனின்கள் அதற்குக் காரணமாகின்றன.

எப்படிப் பயன்படுத்துவது?

பூவந்திக்காய்களைத் தேவையான அளவு சேகரித்து வைத்துக்கொண்டு, உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதன் தோலை மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் நீர் விட்டு, நன்றாகத் தேய்க்க வழுவழுப்பான நுரை உருவாவதைப் பார்க்க முடியும். குளியலின்போது தேகம் மற்றும் தலைமுடியின் பிசுக்கை எடுப்பதற்கு ரசாயனமில்லாத இந்த நுரையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எண்ணெய்ப் பசை நீங்க:

சீயக்காய்ப் பொடியோடு பூவந்திக்காயின் தோலையும் சேர்த்தரைத்து தேவைப்படும்போது குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியல் செய்த நாள்களில் ஷாம்பூவுக்குப் பதிலாகக் சீயக்காய், அரப்புத்தூளோடு பூவந்திக்காய் சேர்ந்த காம்பினேஷனைப் பயன்படுத்தினால், எண்ணெய்ப் பிசுக்கு முழுமையாக நீங்கும். உலர்ந்த பொடியோடு நுரையும் உருவாகும்போது, எண்ணெய்ப் பசை உடனடியாக நீங்குவதை உணரலாம். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, ஷாம்பூ பயன்படுத்திக் குளித்தால் முழு எண்ணெய்ப் பசையும் நீங்காது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். உடலில் உள்ள அழுக்குகளை எடுக்க பூவந்திக்காய் குளியல் நிச்சயம் பயன்படும்.

ஆர்கானிக் அலசல்:


அக்காலத்தில் துணிகளுக்கு டிடெர்ஜென்ட்டாகவும் பூவந்திக்காய் பயன்பட்டிருக்கிறது. துணிகளைத் துவைப்பதற்கு இயற்கையை நாட ஆசைப்படுபவர்களுக்குப் (Organic washing) பூவந்திக்காய் நல்ல சாய்ஸ்! இன்றும்கூட சில கிராமங்களில் பூவந்திக்காய் கொண்டு துணிகளை அலசும் பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மெல்லிய துணிகளில் படிந்திருக்கும் கறைகளை எடுக்க பூவந்திக்காயைப் பயன்படுத்தலாம் என்பது கிராமத்திய நுணுக்கம். துணிகளைத் தூய்மைப்படுத்த, பண்டைய இந்திய மற்றும் அமெரிக்க மக்கள் பூவந்திக்காயை அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கறுத்த தோல், சிறுபட்டாணி அளவிலான கடினமான விதை, இதுவே பூவந்திக்காய்க்கான அடையாளம். பூவந்திக்காய், பூந்திக்காய், சோப்புக்காய் எனப் பல பெயர்கள் இதற்கு. Sapindus emarginatus என்பது இதன் தாவரவியல் பெயர். வயிற்றுவலி, செரிமானக் கோளாறுகளுக்கு பூவந்தியின் பழங்கள் பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சாயமேற்றவும் பூவந்திக்காய்கள் பயன்பட்டிருக்கின்றன. கொசுக்களின் பெருக்கத்தைத் தவிர்க்க பயன்படும் மூலிகைப் புகையில் பூவந்திக்காய்களைச் சேர்த்துக்கொண்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் கிராமவாசிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதைய சூழலில் அனைத்து இடங்களிலும் பூவந்திமரம் இல்லை. எனவே, வாய்ப்பிருக்கும் இயற்கை ஆர்வலர்களிடம் பூவந்திக்காய்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமம் என்னவென்றால், நாள்பட்ட பூவந்திக்காய்கள் கடினத்துவம் அடைந்துவிடுகின்றன. தோலைப் பிரிப்பதற்கு சிரமமாக இருக்குமென தெரிவிக்கின்றனர். இயந்திரத்தில் கொடுத்து நூறு கிலோ பூவந்திக்காய்களை அரைத்து எடுத்தால் சுமார் 25 கிலோ இயந்திரத்திலேயே பசை போல தங்கிவிடும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். எனவே, தேவையான அளவு வாங்கி வைத்துக்கொண்டு, பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். தோலை நீக்கிய கொட்டைகளை விதைப்பந்துகளாக மாற்றி ஆங்காங்கே வீசினால், நிறைய பூவந்தி மரங்களை மீண்டும் பார்க்க முடியும்.

Bath (Representational Image)
Bath (Representational Image)
Image by Seregas from Pixabay

பூவந்திக்கொட்டைகளைத் தனியாகவும் பயன்படுத்தலாம். மற்ற மூலிகைக் குளியல் பொடிகளுடன் சேர்த்து அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். வெட்டிவேர், விலாமிச்சம் வேர் சேரும் `நலங்குமா’ போன்ற மூலிகை கலவையிலும் பூவந்திக்காய்க்கு இடமளிக்கலாம். மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேம்பு, கடுக்காய், நெல்லிக்காய் சேரும் சித்த மருந்தான பஞ்ச கற்ப குளியல் பொடியிலும் பூவந்திக்கொட்டைகளைச் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மிகப்பெரிய நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனைகளில் பூவந்திக்காய் கிடைப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், அன்றாடம் அருகிலேயே புழங்கிய ஒரு பொருள் தூரத்து நிறுவனம் வசம் சென்றிருப்பதில் சற்று வருத்தமே. இப்போதும் உங்களுக்கு அருகே இருக்கும் இயற்கை விவசாயிகளிடம் வாங்கி பூவந்திக்காய் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்துங்கள்.

ஆற்றோரங்களில் உள்ள பூவந்திக்காய் மரங்களிலிருந்து, காய்களைப் பறித்து, ஆற்றுநீரில் குளியல் போடும்போது இயற்கை நுரையைப் பயன்படுத்திய நிகழ்வுகளை வரலாறாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி நிறைய அழகான விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். இனிமேலாவது விழித்துக்கொண்டு நம்மிடம் பயன்பாட்டில் இல்லாத பொக்கிஷங்களை மீண்டும் தூசுதட்டி எடுத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது அவசியம்.