Published:Updated:

"அலோபதிக்கு உள்ளேயே பாரம்பர்ய மருத்துவமும் இயங்க சுதந்திரம் வேண்டும்!"- ஆயுர்வேத மருத்துவர் சுனில்

பாரம்பர்ய மருத்துவம்
பாரம்பர்ய மருத்துவம்

"இந்தப் பாரம்பர்ய மருத்துவத்தின் செயல்பாடுகளில் ஒரு எல்லை இருக்கிறது. அது மிகவும் பாதுகாப்பாக, எளிதில் குணமடையக் கூடிய ஆட்களை மட்டுமே பாருங்கள் என்கிறது. என்றபோதிலும், தொடக்க நிலையிலிருந்து ஐ.சி.யூ வரை இந்தப் பாரம்பர்ய மருத்துவத்துக்கு ஓர் பங்கிருக்கிறது."

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. படுக்கைகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகளால் மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றாக மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காகச் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்றுக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் பயன்பாடு பரவலாகியுள்ளது. இதுவரை சித்த மருத்துவத்தின் பக்கம் வராதவர்கள்கூட, இப்போது அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், விகடன் ட்விட்டர் பக்கத்திலும் செய்தித் தளத்திலும் சித்த மருத்துவம் குறித்த கருத்துக் கணிப்பு (Poll) ஒன்றை நடத்தியிருந்தோம். அதில் “சாதாரண நோய்களுக்குச் சித்த மருந்துகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?!” என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஆம், எப்போதும் சித்தா தான், மருத்துவர் பரிந்துரைத்தால், இல்லை என்ற நான்கு பதில்களைக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு மொத்தம் 4,500க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்தன.

கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பு
வாக்களித்தவர்களில் “ஆம்” என்று 48 சதவிகிதம் பேரும், “இல்லை” என்று 32 சதவிகிதம் பேரும் பதிலளித்திருந்தனர்; 11 சதவிகிதம் பேர் “மருத்துவர் பரிந்துரைத்தால்” சித்த மருத்துவத்தை எடுத்துக் கொள்கிறோம் என்றும், 9 சதவிகிதம் பேர் “எப்போதும் சித்தா தான்” என்றும் பதிலளித்திருக்கின்றனர்.

தற்போது கொரோனாவுக்கான சிகிச்சையில் சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், ஆயுர்வேத மருத்துவரும் எழுத்தாளருமான சுனில் கிருஷ்ணனிடம் இதுகுறித்து பேசினேன்.

“எல்லா காலத்திலும் இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பர்ய மருத்துவ முறைகள் மக்களிடையே புழங்கிவந்திருக்கின்றன. இன்றைக்கு இவை படிப்புகளாக நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டாலும், சிலர் வாஸ்லின் உடன் மஞ்சளைச் சேர்த்துத் தடவிக் கொள்வது மாதிரி மக்களின் பொது அறிவிலிருந்து உருவாகும் தரவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் இதைக் கேலி செய்தாலும், புறந்தள்ளினாலும் சளி, இருமல், வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு இந்தப் பாரம்பர்ய மருத்துவம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஆக, எல்லா காலத்திலும், எல்லா கலாசாரங்களிலும் பிரதான மருத்துவத்துக்கு மாற்றாக மக்கள் மருத்துவம் இருந்துகொண்டேதான் இருக்கிறது!” என்று இதன் பின்னணி குறித்து விளக்குகிறார் சுனில் கிருஷ்ணன்.

சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன்

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் பயன்பாடு பரவலாகியுள்ளது குறித்துப் பேசும்போது, “கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் நாள்களில், ஆரம்ப அறிகுறிகளில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், இந்த மருத்துவத்தின் மூலம், மருத்துவர்கள் வழிகாட்டுதலோடு சமாளித்து மீண்டுவிட முடியாதா என்று இதை முயல்கின்றனர்; குணமடைந்தும் இருக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் வழிகாட்டுதல் இல்லாமலும், மருத்துவமனைக்குச் செல்லாமலும் இருப்பது பிரச்னைகளையே உருவாக்கும்” என்று கூறுகிறார்.

“கொரோனா முதல் அறிகுறி தொடங்கும் நோயின் ஆரம்பக் கட்டங்களில் இந்த மருத்துவம் பிரமாதமாக வேலை செய்கிறது. பெரிய தொந்தரவுகள் ஏதுமின்றி எளிதாகத் தீர்வு காண முடிகிறது. ஆனால், இந்தப் பாரம்பர்ய மருத்துவத்தின் செயல்பாடுகளில் ஒரு எல்லை இருக்கிறது. அது மிகவும் பாதுகாப்பாக, எளிதில் குணமடையக் கூடிய ஆட்களை மட்டுமே பாருங்கள் என்கிறது.

Vikatan

என்றபோதிலும், தொடக்க நிலையிலிருந்து ஐ.சி.யூ வரை இந்தப் பாரம்பர்ய மருத்துவத்துக்கு ஓர் பங்கிருக்கிறது; கொரோனாவுக்குப் பிந்தைய நிலையிலும் இதை ஈடுபடுத்த முடியும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, சில பாரம்பர்ய மருந்துகள் மூலம் அதைச் சமாளிக்க முடிந்தது என்றும், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தவர்கள் சிலருக்கு அதைக் கொடுத்தபோது உடல்நிலையைச் சீராக்க அது உதவியது என்றும் சமீப காலங்களில் என் நண்பர்களிடமிருந்து கேட்டறிந்தேன்... நோயிலிருந்து மீண்டுவருவதற்கு இது பெரிதும் உதவுகிறது” என்று இதன் சிறப்பம்சங்களைப் பட்டியலிடும் அதே வேளையில், அதன் பிரச்னைகளையும் சாத்தியங்களையும் சுனில் கிருஷ்ணன் விளக்குகிறார்.

சித்த மருத்துவம் (Representational Image)
சித்த மருத்துவம் (Representational Image)
“அலோபதி மருத்துவத்துக்கு உள்ளேயே பாரம்பர்ய மருத்துவம் இயங்குவதற்கான சுதந்திரம் கிடைத்தால், ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் இன்னும் மேம்பட்ட வகையிலும், பயனுள்ள வகையிலும் இந்தக் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்” என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் மருத்துவர் சுனில் கிருஷ்ணன்.
அடுத்த கட்டுரைக்கு