Published:Updated:

``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல!"- மருத்துவர் கு.சிவராமன்

மக்களிடையே சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இம்மருத்துவத்தைத் தொடர்ந்து பின்பற்றச் செய்வதும்தான் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

மனித இனம் பெற்ற அறிவுத்திறனில் முக்கியமானது மருத்துவ அறிவு. பிற அறிவுகள் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவற்றைப் பற்றி ஆராய்ந்து பெற்றவை. மருத்துவ அறிவு மனிதன் தன்னைப்பற்றி ஆராய்ந்து கண்டது.

``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல!"- மருத்துவர் கு.சிவராமன்

உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. தமிழர்களுக்கான தனித்துவமிக்க, சிறப்புமிக்க மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். பண்டைய இலக்கியங்களில் இலைமறைகாயாகப் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அது, சித்த மருத்துவத்தின் தொன்மையை உணர்த்தும்.

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் இந்த தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்
Pinterest

மக்களிடையே சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இம்மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றச் செய்வதும்தான் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்.

சித்த மருத்துவ தினம் குறித்து பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறும்போது, ``ஒரு துறை வளர வேண்டுமானால் அத்துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், தொழில்முனைவோர், அத்துறையில் ஆராய்ச்சி செய்வோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடிக் கலந்துரையாடுவது அவசியம். அதுபோன்ற கலந்துரையாடல்கள்தான் துறையின் வளர்ச்சிக்கும் சமூகத்தில் அத்துறையை எளிதில்கொண்டு சேர்க்கவும் உதவும்.

மருத்துவர் கு.சிவராமன்
மருத்துவர் கு.சிவராமன்
ஜாதிக்காய், வசம்பு, அமுக்கரா சூரணம்...  தூக்கமின்மைக்கு விடைகொடுக்கும் சித்த மருத்துவம்!

சமூகத்தில் சித்த மருத்துவத்தை ஒரு மூலிகை மருத்துவமாக எடுத்துச் செல்வதைக்காட்டிலும், வாழ்வியல்முறைகளைக் கூறும் மருத்துவமாக எடுத்துச் செல்வதுதான் சிறப்பானதாக இருக்கும். சித்த மருத்துவ மாணவர்கள், சித்த மருத்துவம் மட்டுமே பயிலாது சித்த மருத்துவம் சார்ந்த பிற துறை அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள், படிக்கும் காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, பிற்காலத்தில் பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்" என்றார்.