Published:Updated:

``ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட உடனடி, நிரந்தர தீர்வுகள் என்னென்ன?’’ - மனநல மருத்துவர் பதில்

ஸ்ட்ரெஸ்
ஸ்ட்ரெஸ்

ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் தூக்கமின்மை, தலைவலி தொடங்கி பக்கவாதம், இதயம் செயலிழத்தல் வரை பிரச்னைகள் ஏற்படலாம்.

``மெல்லிய வெளிச்சமும் தூய காற்றும் நிரம்பியிருக்கும் விடியற்காலை எழுந்து, குறைந்தது 30 நிமிடங்களுக்கு வியர்க்க விறுவிறுக்க ரன்னிங், ஜாகிங் அல்லது வாக்கிங். பிறகு 30 நிமிடங்களுக்குச் சில உடற்பயிற்சிகள் அல்லது யோகாசனங்கள். ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறியபடியே சூப்போ, காபியோ அருந்திவிட்டு வீடு திரும்பியதும் தினசரி வேலைகளைத் தொடங்கினால்... ஆல் இஸ் வெல்!" - ஸ்ட்ரெஸ்ஸைத் தூக்கி வீச, மனநல ஆலோசகர் சிவகுமார் சொல்லும் டிப்ஸ் இது.

ஸ்ட்ரெஸ்
ஸ்ட்ரெஸ்

இந்தப் போட்டி யுகத்தில் மனதுக்கும் உடலுக்கும் தீராத நோய்களை வாரி வழங்கி வருகிறது, மனஅழுத்தப் பிரச்னை. மனித உடல் ஆற்றுகின்ற எல்லா வினைகளுமே ஹார்மோன் செய்கைகளின் விளைவுதான். இந்த மனஅழுத்தத்துக்கும் அதுவே காரணமாகிறது. உண்மையில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் மனிதனுக்கு நன்மை செய்வதாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவே ஓர் அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கான மருத்துவ விளக்கங்களோடு பல் மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான சிவகுமார் பேசினார்.

``பொதுவா, நடுநிலையில் இருக்கிற நம் உடலையும் மனதையும் செயலாற்ற வைக்கிறதுக்காக ஹார்மோன் இயங்குது. இதில் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் இயக்கம், நம் சிறுநீரகப் பையின் மேற்புறத்தில் அமைந்திருக்கு. ஸ்ட்ரெஸ், ரெண்டு விதம். அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress), க்ரானிக் ஸ்ட்ரெஸ் (Chronic stress). அக்யூட் ஸ்ட்ரெஸுங்கிறது, குறுகிய நேரத்தில் நமக்கு ஏற்படுறது. மூளை, தனக்கு ஏற்ற மாதிரி இதயத்தை வேகமா இயங்கவெச்சு, ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி, சுவாசத்தை வேகமாக்கும். இது உடனடியா சில நொடிகளில் நமக்குள் இயங்கி முடிவது. பின்னர் கொஞ்ச நேரத்தில நாம ரிலாக்ஸ் ஆகிட முடியும்.

ஸ்ட்ரெஸ்
ஸ்ட்ரெஸ்
பெற்றோர் குழந்தைகளுடன்  குவாலிட்டி டைம் செலவழிப்பது எப்படி? - மனநல மருத்துவரின் ஆலோசனைகள்

உதாரணத்துக்கு, நாய் துரத்தினா ஓடுறோமே... அப்போ நம்முடைய நோக்கம் வேறெதிலும் செல்லாம, ஓடுறதில் மட்டும் இருக்கும். அது ராத்திரி என்றாலும் கண் பார்வை ரொம்பக் கூர்மையாகும். கால்கள் வேகமா இயங்கும். இந்த நேரத்துல நமக்கு வேற எதுவும் பத்திகூட யோசிக்கத் தோணாது. ஒருவேளை, நாய் துரத்துறதுக்கு முன்னாடி பசி, தாகம் எடுத்துட்டு இருந்திருக்கும், சிறுநீர் கழிக்க இடம் தேடிட்டு இருந்திருப்போம். ஆனா, நாய்க்கு பயந்து ஓடும்போது இதெல்லாம் எதுவும் மனசுல இருக்காது. இப்படி இதுபோன்ற சூழல் ஏற்படுத்துற அதீதப் படபடப்பு ரொம்பவே இயல்பானது. பயப்படத் தேவையில்லை.

அடுத்ததா, க்ரானிக் ஸ்ட்ரெஸ். மனசுக்குள்ள ரொம்ப நாளா எதையாச்சும் நினைச்சுக்கிட்டு தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாகிறது, இந்த ரகம். இதுல குறிப்பிட வேண்டியதுன்னா, க்ரானிக் ஸ்ட்ரெஸ் கேடில்லை. ஆனா, இந்த ஸ்ட்ரெஸ் தொடர்ந்து நீடித்தால் பிரச்னை.

மூளையின் அட்ரினலின், நார்அட்ரினலின், கார்டிசோல் பகுதிகளில் கோபம், பயம், சோகம் போன்ற ஸ்ட்ரெஸ் உணர்வுகளைச் சுரக்கச் செய்யுது. இந்த உணர்வுகள் தவிர்க்க முடியாதவை; தவிர்க்கவும் கூடாதவை. ஆனா, அவற்றை அதிகரிக்கவிடாமல் குறைக்கணும். ஒரு விஷயத்தை முழு ஈடுபாட்டோடு செய்ய, நம் உடம்பையும் மனசையும் ஒரு நொடியில மூளை தயார்படுத்திடும். அதில் கவனமா இருக்க வேண்டியது நாமதான்.

மருத்துவர் சிவக்குமார்
மருத்துவர் சிவக்குமார்

ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் தூக்கமின்மை, தலைவலி தொடங்கி பக்கவாதம், இதயம் செயலிழத்தல் வரை பிரச்னைகள் ஏற்படலாம். ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க உடனடித் தீர்வும், நிரந்தரத் தீர்வும் உள்ளன. ரொம்பவும் மனஅழுத்தத்தோடு இருக்கும்போது, அதிலிருந்து மீள்றதுக்குச் சிறந்த வழி, நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்றதுதான். இசை, நடனம், டிரைவிங், சினிமா... இப்படி நமக்கு ரொம்பப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினா ஸ்ட்ரெஸ்ஸை க்ளியர் செஞ்சிடலாம். நிரந்தரத் தீர்வு என்றால், உடற்பயிற்சியும் தியானமும். இவை நம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவக்கூடியவை.

மொத்தத்தில் அதீத ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கிறவங்க அதிலிருந்து விடுபட, உங்களோட முழுக் கவனத்தையும், உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்துல முதல்ல திருப்புங்க. அதில் தொடர்ந்து ஈடுபடுங்க. ஸ்ட்ரெஸ்ஸுக்கு கெட் அவுட் சொல்லிடலாம்'' என்றார் டாக்டர்.

அடுத்த கட்டுரைக்கு