Published:Updated:

வீட்டில் குடும்பத்தினருடன் செய்ய எளிய யோகப்பயிற்சிகள்! #YogaDay

யோகா
யோகா

இரண்டு யோகா பயிற்சிகளையும் ஆரம்ப காலத்தில் ஒரு நாளைக்கு 6 முறை செய்யலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2014-ம் ஆண்டு அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டது ஐ.நா சபை. அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

'வீட்டில் யோகா... குடும்பத்துடன் யோகா' என்ற கருத்து இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 'யோகா நம் அனைவரையும் பிணைத்துள்ளதால் இந்த நாள் ஒற்றுமையின் நாள்' என்று தெரிவித்துள்ளார்.

Yoga and Naturopathy expert S.Venkateswaran
Yoga and Naturopathy expert S.Venkateswaran

வீட்டில் செய்வதற்கு ஏற்ற யோகா பயிற்சிகள், குடும்பத்துடன் இணைந்து செய்வதால் கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்ட முக்கிய 6 ஆலோசனைகளை அளிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் எஸ். வெங்கடேஸ்வரன்.

பயனுள்ள நேரம்

Useful family time
Useful family time

குடும்பத்தினருடன் இணைந்து யோகப் பயிற்சிகள் செய்யும்போது உடல்நலன் சார்ந்த பயனுள்ள நேரமாக அது மாறுகிறது. குழந்தைகளுடன் இணைந்து யோகப் பயிற்சிகளில் ஈடுபடும்போது அந்த இடம் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையான (Fun) நிகழ்வாகவும் மாறிப்போகும். குழந்தைகளுக்கு யோகா மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் பெரியவர்கள் சற்று சுணங்கினால்கூட குழந்தைகளே அவர்களைப் பயிற்சிக்குத் தவறாமல் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

உடலையும் மனதையும் இணைக்கும்

Body & Soul
Body & Soul

நடைபயிற்சி செய்தாலோ, ட்ரெட்மில்லில் நடந்தாலோ பாடல் கேட்டுக்கொண்டோ, செல்போனில் பேசிக்கொண்டோதான் பயிற்சி செய்வோம். அதன் காரணமாக உடலும் மனதும் இணைந்து செயலாற்றாது. யோகப்பயிற்சிகள் உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும். அதனால் ஐம்புலன்களையும் நாம் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, பிற நிகழ்வுகள் நமது கவனத்தை திசை திருப்ப முடியாது.

முதுகுத்தண்டுக்கு நெகிழ்வு

spine flexibility
spine flexibility

வேறு எந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கை, கால், மூட்டுகள், நுரையீரல், இதயம் எனப் பல்வேறு உடலுறுப்புகளுக்கு பயன் கிடைக்கும். ஆனால் முதுகுத்தண்டுக்கு நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் உடற்பயிற்சி யோகா மட்டும்தான். முதுகுத்தண்டை நேராக வைத்து யோகப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் நுரையீரல் செயல்திறன் அதிகரிப்பதோடு, அனைத்து உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ஆசனங்கள் மட்டும் யோகா அல்ல!

Pranayama
Pranayama

ஆசனங்கள் மட்டும்தான் யோகா என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. உடலை வளைத்து கடினமாகச் செய்ய வேண்டும் என்பதால் பலர் இதை விரும்புவதில்லை. எளிய மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும். வீட்டிலிருந்தபடியே குடும்பத்தினருடன் பிராமரி பிராணாயாமம் மற்றும் பஸ்திரிகா பிராணாயாமம் ஆகிய இரண்டு பயிற்சிகளையும் செய்யலாம்.

பிராமரி பிராணாயாமம்

Pranayama
Pranayama

தலை, கழுத்து, முதுகுத்தண்டு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் நேராக அமர்ந்து கண்களை மூடிக்கொள்ளவும். ஆள்காட்டி விரல்களால் காதுகளை அடைக்கவும். சுவாசத்தின் மீது கவனம் செலுத்தவும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, மூச்சை வெளியிடு்ம்போது தேனீயின் ரீங்காரம் போன்று 'ம்' என்று சத்தமிட வேண்டும். இதன் மூலம் நெஞ்சுப்பகுதியின் அருகிலுள்ள தைமாஸ் எனப்படும் சுரப்பி தூண்டப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளையணுக்களின் உற்பத்தி நன்றாக இருக்கும். மேலும் கிருமிகள் நுரையீரலுக்குள் நுழைய விடாமல் மூச்சுக்குழாயிலேயே தடுத்துவிடும். நுரையீரல் செயல்திறனையும் அதிகரிக்கும்.

மண்டை ஓட்டுக்குள் சிறிய வெற்றிடம் இருக்கும். அதில் நீர் கோப்பதால் சைனஸ், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பிராமரி பிராணாயாமம் செய்வதால் அந்தப் பகுதியில் நைட்ரிக் ஆக்சைடு அதிகம் சுரந்து நீர்கோப்பதைத் தவிர்த்துவிடும்.

பஸ்திரிகா பிராணயாமம்

Yoga day
Yoga day
யோகா முதல் TJ’s பிராண்ட் வரை... கைதிகளை திகார் திருத்துவது எப்படி?

வசதியான நிலையில் உட்கார்ந்து கொண்டு வேகமாகவும் ஆழமாகவும் மூச்சை இழுத்துவிட வேண்டும். மூச்சை இழுக்கும்போது வயிறு வெளியே செல்ல வேண்டும். மூச்சைவிடும்போது வயிறு உள்ளே செல்ல வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நுரையீரல் செயல்திறன் மேம்படும். வைரஸ் தொற்றுகளிலிருந்து நுரையீரல் பாதுகாக்கப்படும்.

இரண்டு யோகா பயிற்சிகளையும் ஆரம்ப காலத்தில் ஒரு நாளைக்கு 6 முறை செய்யலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு