Published:Updated:

ஆண்களுக்குப் பெண் குரலா..? 100% குணமாக்கும் சிகிச்சைகள்!

Puberphonia
Puberphonia ( Pixabay )

பொதுவாக 12 வயது வரை ஆண், பெண் இருபாலருக்கும் குரல் பெண் குரல் போல்தான் இருக்கும். 13, 14 வயதில் குரல் நாண் நீளம் அடையும்.

'சில ஆண்களுக்கு குரலில் பெண் தன்மை இருக்கும். 'கீச்சு கீச்சுனு பேசுறான்' என்பார்கள். இது ப்யூபர்போனியா (Puberphonia) எனப்படும் குரல் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை'' என்று சொல்லும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குமரேசன், ''இது 100 சதவிகிதம் சரிசெய்யக்கூடியதே. அதை அறியாமல், காலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்'' என்ற விழிப்புணர்வுத் தகவலைச் சொல்லி, பல ஆண்களின் தாழ்வு மனப்பான்மையைத் துரத்தி தன்னம்பிக்கை தருகிறார். ப்யூபர்போனியா பற்றி டாக்டர் விளக்கமாகப் பேசியதிலிருந்து...

Inferiority
Inferiority
Pixabay

''நுரையீரலிலிருந்து காற்று வருகிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படுகிறது. அதை நாம் வார்த்தையாக்கி வெளிப்படுத்துகிறோம். இதுதான் பேச்சு. குரல், நாண் இணையும் செயல்பாடு இருவகையில் நடக்கிறது. முதலாவது நரம்பு, தசை இயக்கத்தால் நடைபெறுவது. இரண்டாவது அடிவயிற்றிலிருந்து வரும் காற்றால் குரல் நாண் இயங்குவது.

பொதுவாக 12 வயதுவரை ஆண், பெண் இருபாலருக்கும் குரல் பெண் குரல் போல்தான் இருக்கும். 13, 14 வயதில் குரல் நாண் நீளம் அடையும். அப்போது குரல்வளை விரிவடைந்து குரல்வளையில் உள்ள ஒரு குருத்தெலும்பு தள்ளிக்கொண்டு வெளியே வரும். ஆண்களின் தொண்டையில் வெளிப்புறமாக நீண்டுகொண்டிருக்கும் இதை 'ஆடம்ஸ் ஆப்பிள்' என்பார்கள்.

Dr.Kumaresan
Dr.Kumaresan

ஆணும் பெண்ணும் பருவ வயதை எட்டும்போது அவர்களுக்கான பாலினச் சுரப்பிகள் வீரியம் அடைகின்றன. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகம் சுரக்கும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் அவர்களின் பாலின உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள், ஆண்களுக்கு அவர்களின் குரல் நாண்களிலும் ஏற்படும். அந்த மாற்றங்களால்தான் ஆண்களின் குரல் ஆழமானதாகவும் எதிரொலிப்போடும் மாற ஆரம்பிக்கும் (பெண்களுக்கு குரல் நாண் நீளவோ, விரிவடையவோ செய்யாது). 16 வயதிலும் ஆண்களுக்குப் பெண் குரல் இருந்தால் அது 'ப்யூபர்போனியா' என்று கருதப்படுகிறது.

ப்யூபர்போனியா என்பது ஒரு நோய் அல்ல. இது ஒரு மாறுபட்ட குரல் நிலைமை. அசாதாரண உச்சரிப்பு, தொண்டைக்கம்மல், மூச்சே குரலாக ஒலித்தல், சோர்வான குரல் இவையெல்லாம் ப்யூபர்போனியாவின் தன்மைகள். இந்த வாய்ஸ் டிஸ்ஆர்டர், உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் ஏற்படுகிறது.

ப்யூபர்போனியா ஒரு நோயல்ல. இதை ஒரே நாளில் சரி செய்துவிடலாம்.
டாக்டர் குமரேசன்

உயிரியல் காரணங்களாக, குரல்வளை தசை இறுக்கம், குரல்வளை சதைகள் மாறுபட்டு அசைவது, குரல்வளை குறைபாடு, குரல் நாண் சமச்சீரற்ற தன்மை, குரல் நாண் நரம்பு பாதிப்பு, தைராய்டு குருத்தெலும்பு இணையாதது என ஆறு காரணங்கள் இருக்கின்றன. ப்யூபர்போனியா பாதிக்கப்பட்ட ஆண்களின் குரல் நாணிலோ, குரல்வளையிலோ எவ்வித மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் சுருதியில் மாற்றம் தென்படும். இதற்குக் காரணம் உயர் சுருதி தொனி (High Pitch Tone) என்று பலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அதிர்வு (resonance) தான் காரணம்.

உளவியல் காரணங்களாக மனச்சோர்வு, உடலளவில் விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களில் தாமதம், குடும்பம், நண்பர்களால் மனநிலையில் ஏற்படும் மாற்றம், ஸ்ட்ரெஸ் ஆகியவை இணைகின்றன.

ப்யூபர்போனியா பிரச்னைக்கு பேச்சுப் பயிற்சி, அறுவை சிகிச்சை ஆகிய தீர்வுகள் உள்ளன.

பேச்சுப் பயிற்சியைப் பொறுத்தவரை, வெவ்வேறு விதமான பயிற்சிகள் தரப்படும். தேவையைப் பொறுத்து, சிலருக்கு ஓரிரு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், தொடர் சிகிச்சையை எடுத்துக்கொள்ள பலருக்கும் பொறுமை இல்லாமல், பாதியில் நிறுத்திவிடுகிறார்கள்.

Voice wave
Voice wave
Pixabay

மற்றொரு வகையில் வாய்ஸ் பிட்ச் அனலைசர் மூலம் பாதிக்கப்பட்டவரின் தொனியை உறுதிசெய்து, அவருக்குத் தொண்டைப் பகுதியின் அதிர்வலையை அதிகரிப்பதற்காக ஒரு சிறு முடிச்சு தொண்டையின் உட்பகுதியில் போடப்படும். அதை இழுத்துக்கொண்டே பேசும்போது, சம்பந்தப்பட்ட நபர் ஆண் குரலைப் பெறுவார். அதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் மருத்துவமனையிலேயே குரல் அதிர்வலையை அதிகரிக்கும் பயிற்சி தரப்படும். தொடர்ந்து 21 நாள்கள் வீட்டில் சில உபகரணங்களின் உதவியுடனும் ஆப் மூலமும் பயிற்சிசெய்ய ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

அதிகமாக இருக்கும் குரல் சுருதியைக் குறைப்பதற்காகக் குரல்வளைத் தளர்வு அறுவைசிகிச்சை (RelaxationThyroplasty) மற்றும் குரல் நாண் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை (Type III Relaxation Thyroplasty) செய்யப்படுகின்றன. ப்யூபர்போனியா பிரச்னை உள்ள பலர், இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை இருக்கிறது என்பதையே அறியாமல் இருக்கின்றனர். இனி தங்கள் குரல் குறைபாட்டை நினைத்து அவர்கள் கவலையுற வேண்டாம்.

‘நச்சுக்காற்றில் தொலைந்த வாழ்க்கை... ஓய்வில்லாமல் ஒலித்த குரல்!’- அப்துல் ஜப்பாருக்கு பத்ம ஸ்ரீ
பெண் குரல்
பெண் குரல்
Pixabay

ப்யூபர்போனியா... சில தகவல்கள்

* ப்யூபர்போனியா ஒரு நோயல்ல.

* இதற்கும் ஹார்மோன் சுரப்புக்கும் சம்பந்தம் கிடையாது.

* இந்தப் பிரச்னையை ஒரே நாளில் சரி செய்துவிடலாம்.

* குரல் நாணில் மாற்றம் செய்யாமல், வார்த்தைகளின் அதிர்விலேயே மாற்றம் ஏற்படுத்தி சரியான குரலைப் பெற முடியும்.

அடுத்த கட்டுரைக்கு