கொரோனா வைரஸின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு மருத்துவ உலகம் திணறி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முதல் கால்வரை புதிது புதிதாகப் பல பிரச்னைகள் ஏற்பட்டுவிடுகிறது.
ஆரோக்கியமானவர்களுக்கு சர்க்கரைநோய், வாசனையை நிரந்தரமாக இழத்தல் என்ற வரிசையில் முடி உதிர்தலும் தற்போது இடம்பெற்றுள்ளது. பலரும் கொரோனாவுக்குப் பிறகுதான் முதல்முறையாக முடி உதிர்வு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நோய் பாதிப்புடன் வேலையிழப்பு, பொருளாதார சிக்கல் தொடர்ச்சியாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகளும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மனஅழுத்தத்தின் காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றுக்கும் முடி இழப்புக்கான தொடர்பு தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரும நோய்களுக்கான அமெரிக்கக் கழகம் இது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: முடி உதிர்தல் மரபணு, வயது, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படுகிறது. முடி வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன.
முடியில் 90 சதவிகிதம் வளர்ச்சி நிலையிலும், 5 சதவிகிதம் ஓய்வு நிலையிலும், 10 சதவிகிதம் உதிர்தல் நிலையிலும் இருக்கும். மன உளைச்சல், நோய்த்தாக்கம் ஏற்படும்போது 50 சதவிகிதம் முடி, உதிர்தல் நிலைக்குத் தள்ளப்படுகிறது. நோயின் தாக்கம் ஏற்பட்டு 3 முதல் 5 வாரங்களுக்குப் பிறகு திடீரென்று முடி உதிர்தல் ஏற்படுவதை நாம் உணரலாம். இது கொரோனா தொற்றுக்கும் பொருந்தும்.
முடி உதிர்வைத் தவிர்க்க நல்ல தூக்கம், மன அமைதி, சத்தான உணவு அவசியம்.சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
இதற்கு முன்பு முடி உதிர்வு பிரச்னை இல்லாதவர்கள்கூட, கொரோனா தொற்றுக்குப் பிறகு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். கோவிட்-19 நோயாளிகளுக்கு 'டெலோஜென் எஃப்ளுவியம் (Telogen Effluvium)' வகை முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையில் ஸ்கால்ப்பின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் முடி உதிர்கிறது. மன அழுத்தம், வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றால் பொதுவாக இவ்வகை முடி உதிர்தல் ஏற்படும்.
கொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது, சிலருக்கு ஏற்படவில்லை. இதற்கு அவர்களின் மரபணு காரணமாக இருக்கலாம். இதற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இது தற்காலிக முடி இழப்பாகவே இருக்கும் என்பதால் நான்கு முதல் ஆறு மாதங்களில் இந்நிலை சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம் பேசினோம்.
''கொரோனா தொற்றால் முடி இழப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள், தூக்கமின்மை மற்றும் வைரஸ் காய்ச்சல். மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு முக்கியக் காரணங்களாகலாம். இவற்றைத் தவிர ஹார்மோன் பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் வளரும் நிலையில் இருக்கும் முடிகளும் உதிர்தல் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
முடி உதிர்வைத் தவிர்க்க நல்ல தூக்கம், மன அமைதி, சத்தான உணவு அவசியம். கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முடி உதிர்வைப் பொறுத்தவரை வரும் முன் காப்பது மிக அவசியம். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வைட்டமின் மாத்திரைகள் முதல் லேஸர் சிகிச்சைகள்வரை உள்ளன.

முடி ஆரோக்கியத்துக்கான உணவு வகைகள்:
முந்திரி
பாதாம்
வால்நட்
கறிவேப்பிலை
பூசணி விதைகள்
ஆளி விதைகள்
சியா விதைகள்
கீரை வகைகள்
சிட்ரஸ் சத்து நிறைந்த பழங்கள்
பப்பாளி
கேரட்
பூசணிக்காய்
சீனிக்கிழங்கு
பயறு வகைகள்
முளைகட்டின பயறு

அசைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள், இந்த உணவுகளுடன் முட்டை, மீன், கோழிக் கறி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். உணவுகளுடன் மனநிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்வதும் முடி உதிர்வு பிரச்னையின் தீர்வுக்கு அவசியம். எனவே, உடல்நிலை, மனநிலை இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார் மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.