Published:Updated:

தொற்று அபாயம், மரண பயம், பதற்றம், கோபம்... காவல்துறையினரின் உளவியல் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்!

தேவையில்லாமல் சுற்றியவரை கண்டிக்கும் காவல்துறை
தேவையில்லாமல் சுற்றியவரை கண்டிக்கும் காவல்துறை

"கொரோனா வந்ததுல இருந்து என் பிள்ளை அவன் குழந்தையைக்கூட தூக்குறதில்ல. தனியா தூங்கி, தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டு, வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருக்கான்."

மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனைகளுக்குள் கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்க, வெளியில் காவல்துறையினரும் தூய்மைப் பணியாளர்களும் கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் காவல்துறையினரின் பணி கால நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. இரவு, பகல், மழை, வெயில், டாஸ்மாக், மார்ச்சுவரி என்று பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா உலகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னாலும், ஊர் உலகமே பண்டிகை, விழா என்று கொண்டாடிக்கொண்டிருக்கும்போதும் காவல்துறையினர் பணியில்தான் இருப்பார்கள்.

இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களாக வருவதால் அபராதம் விதிக்கும் விருதுநகர் காவல்துறை
இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களாக வருவதால் அபராதம் விதிக்கும் விருதுநகர் காவல்துறை

"அவர் சாப்பிட்டாரா இல்லையான்னு தெரியாது. வண்டியில வெச்சிருக்கிற தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிக்க நேரமிருக்குமான்னும் தெரியாது. இவ்வளவு ஏங்க, அவர் நிக்கிறதுக்கு மர நிழல் கிடைக்குமான்னுகூட நான் கவலைப்பட்டிருக்கேன்" என்கிறார் போலீஸ்காரரின் மனைவி ஒருவர்.

"கொரோனா வந்ததுல இருந்து என் பிள்ளை அவன் குழந்தையைக்கூட தூக்குறதில்ல. தனியா தூங்கி, தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டு, வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருக்கான்" என்கிறார் போலீஸ்காரரின் அம்மா ஒருவர். இதே நிலைமைதான் பெண் போலீஸாருக்கும்...

யூனிஃபார்மை போட்டுக்கொண்டு வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால் 'நாமதான் பப்ளிக்குக்கு பாதுகாப்பு' என்ற எண்ணம் வந்துவிடும்.
`எங்கள் மீதான பார்வை மாறியிருக்கிறது!’ - கொரோனா களப்பணியில் அசத்தும் வாணியம்பாடி திருநங்கைகள்

"கொரோனா கொடுத்திருக்கும் மரண பயமும், தனக்குப் பின் தன் குடும்பம், குழந்தைகள் நிலைமை என்னவாகும் என்ற மனஅழுத்தமும் உங்களைப் போலவே எங்களுக்கும் உண்டு. ஆனால், யூனிஃபார்மை போட்டுக்கொண்டு வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால் 'நாமதான் பப்ளிக்குக்கு பாதுகாப்பு' என்ற எண்ணம் வந்துவிடும். அந்த எண்ணத்திலேயே கொரோனா பயமெல்லாம் போய்விடும்" என்கிறார் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இந்த லாக்டெளன் நேரத்தில் காவல்துறையினருக்கு வரக்கூடிய உளவியல் பிரச்னைகள், அவற்றை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும் என்று உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனிடம் கேட்டோம்.

"லாக்டெளன் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா வேடம் போட்டது, ஆடிப்பாடியது, தெரு நாடகங்கள் போட்டது, மீறி வந்தவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு வீட்டுக்கு அனுப்பியது என்று காவல்துறையினரின் பணிகளை நான் வியப்புடன் பார்த்து வருகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றவர் தொடர்ந்தார்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

’’காவல்துறையினருக்கு மனஉளைச்சல் வருவதற்கு பொதுவான காரணம், நேரம் காலமில்லாத அவர்களுடைய வேலையின் தன்மைதான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வேலை முடிந்து செல்லும்போது வீட்டுக்குக் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும், அம்மாவுக்கு மருந்து வாங்கிச் செல்ல வேண்டும் என்பது போன்ற பர்சனல் கடமைகள் இருக்கின்றன.

நேரத்துக்குச் சாப்பிட முடியாதது, அதிகமான உடலுழைப்பு காரணமாகச் சோர்ந்துபோவது ஆகியவற்றால் அவர்களிடம் கோபப்படுகிற இயல்பு அதிகமாக இருக்கலாம். வெளியில் அடக்கப்படுகிற இந்த இயல்பு, வீட்டில் வெடிக்கலாம். இதற்கு சிம்பிளான தீர்வு, பசியெடுக்கிற நேரத்தில் பிஸ்கட் போல ஏதாவது சாப்பிடுவதுதான்.

அவர்கள் தெருவில் நின்று வேலைபார்க்கும்போது, யார் மூலம் கொரோனா தொற்றும் என்பதே தெரியாத பதற்றத்தில் இருப்பார்கள். பாதுகாப்பின்மையாகவும் உணர்வார்கள். இதற்குத் தீர்வு, மேலதிகாரிகள் தங்கள் கீழ் வேலைபார்ப்பகளின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதுதான். சோர்வாகத் தெரிபவர்களிடம் ஆறுதலாகப் பேசுவது, குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது போன்றவற்றை அதிகாரிகள் செய்யலாம்.

`இந்த கொரோனா எப்போ போகும், நாம எப்போ நிம்மதியா வீட்டுக்குப் போவோம்' என்ற எண்ணம் காவல்துறையினருக்கு தற்போது வர ஆரம்பித்திருக்கும்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
``குழந்தையின்மைப் பிரச்னை  லாக்டௌனில் தானாகச் சரியாகிறது... எப்படி?!'' - மகப்பேறு மருத்துவர்

அடுத்து, ’நம்மால் நம்முடைய குடும்பத்துக்கு கொரோனா தொற்று வந்துவிடுமோ’ என்ற அச்சம் காவல்துறையினரிடம் அதிகமாக இருக்கும். அதனால், இதுகுறித்த முழு மருத்துவ வழிகாட்டுதல் வழங்குவதோடு, உளவியல் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

காவல்துறையினரின் குடும்பத்தினரும் இந்த நேரத்தில், வழக்கமான குடும்ப பிரச்னைகளைத் தங்கள் வீட்டு காக்கி யூனிஃபார்மிடம் சொல்லாமல் இருப்பது நலம். முக்கியமாக, உங்கள் வீட்டுப் பெண் காவல்துறையில் வேலைபார்க்கிறவராக இருந்தால், இந்த லாக்டெளன் நேரத்தில் அவருக்கு வீட்டு வேலைகளில் ஓய்வு கொடுக்கலாம்.

'இந்த கொரோனா எப்போ போகும், நாம எப்போ நிம்மதியா வீட்டுக்குப் போவோம்' என்ற எண்ணம் காவல்துறையினருக்கு தற்போது வர ஆரம்பித்திருக்கும். 'என்ன உழைச்சாலும் நமக்கு என்ன நன்மை நடந்துவிடப்போகிறது' என்கிற சலிப்பும் சிலருக்கு வந்திருக்கும். இந்த இரண்டுக்கும் தீர்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது டியர் காவல்துறையினரே... நீங்கள் பொதுமக்களுக்கு செய்த சேவையை நீங்களே மனதுக்குள் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மீது உங்களுக்கு வருகிற சுயமரியாதையே உங்கள் மனச்சோர்வை விரட்டிவிடும்.

Lockdown and Police department
Lockdown and Police department

கொரோனா பொதுமக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு, பகல் பார்க்காமல் தெருவில் நின்று எங்களைப் பாதுகாத்த வீரர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த மொத்த சமூகமும் கடமைப்பட்டிருக்கிறது. ஆல் தி பெஸ்ட்" என்று முடித்தார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

அடுத்த கட்டுரைக்கு