Published:Updated:

மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு மறைவற்ற மாஸ்க்... இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்!

உதடு மறைவற்ற மாஸ்க்குகள்
உதடு மறைவற்ற மாஸ்க்குகள்

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த மாஸ்க் பயன்பாட்டால் மிகுந்த இன்னலுக்குள்ளாகி இருக்கின்றனர்.

கோவிட்-19 வைரஸுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக மற்றும் தனிமனித விலகல் வலியுறுத்தப்படுகிறது. மாஸ்க், கிளவுஸ், சானிட்டைசர் போன்றவை தற்காப்புக் கவசங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, மாஸ்க் இப்போது அத்தியாவசியப் பொருளாக ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

Mask
Mask

வருடக்கணக்கில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனாவோடு வாழப் பழகும் முயற்சியில் மக்கள் அனைவரும் வீட்டைவிட்டுக் காலடி எடுத்து வைத்தாலே மாஸ்க் அணிந்துகொள்கின்றனர். அந்தளவுக்கு அது இன்றிமையாததாகிவிட்டது.

ஆனால், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகக்கவச பயன்பாட்டால் மிகுந்த இன்னலுக்குள்ளாகி இருக்கின்றனர். பொதுவாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்கள் பேசும்போது உதட்டசைவை வைத்தே அவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதே போல் வாய் பேச இயலாதவர்கள் தங்களின் உதடு அசைவின் மூலம் மட்டுமே தாங்கள் பேச நினைப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும்.

Corona virus
Corona virus

இந்த மாற்றுத்திறனாளிகளின் நிலைமை இப்படியிருக்க, தற்போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய சூழலில், உதட்டசைவை நோக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அறுந்துபோயிருக்கிறது. மற்றவர்கள் பேசுவதை அறிய முடியாமலும், தாங்கள் நினைப்பதை வெளிப்படுத்த முடியாமலும் பெரும் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த முகக் கவச பயன்பாட்டின் காரணமாக அவர்களால் பாதுகாவலர், பயிற்சியாளர்கள் என யாருடனும் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை.

மாற்றுத்திறனாளிகளின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, செவித்திறன் குன்றியோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்காக பிரத்யேக முகக்கவசங்கள் தயாரித்திருக்கிறது. முதற்கட்டமாக 81,000 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு செவித்திறன் குறைபாடுள்ள மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், பெரியவர்கள் உட்பட சுமார் 13,500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், லிப் ரீடிங் செய்வதற்கு ஏதுவாக இந்த முகக்கவசத்தின் வாய்ப்பகுதி மட்டும் ஒளிபுகும் தன்மை கொண்ட ட்ரான்ஸ்பரன்ட் ஷீட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மற்றவர்களின் உதட்டசைவை அவர்களாலும், அவர்களின் உதட்டசைவை மற்றவர்களாலும் அறிந்துகொள்ள இயலும். அதே நேரம் அவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தப் பிரத்யேக முகக்கவசம் தமிழ்நாட்டில் அரசுத்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் செயலாளர் விஜயராஜ் குமார் ஆகியோரின் முன்னெடுப்பால், இந்த முயற்சி இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இந்தப் பிரத்யேக முகக் கவசங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காதுகேளாதோர் பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் குன்றிய மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கும் விதமாகத் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸை தொடர்புகொண்டு பேசினோம். "நார்மல் முகக்கவசங்களை செவித்திறன் குன்றிய மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்போது அவர்களின் கருத்துப் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கான பிரத்யேக முகக் கவசங்களை நாங்கள் வடிவமைக்க விரும்பினோம். முதலில் திருச்சியில் ஒருவர் எங்களிடம் ஒரு முகக்கவச மாதிரியை முன்வைத்தார். அந்த யோசனை நன்றாகயிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த முகக்கவசத்தை வடிவமைக்கத் தனி கமிட்டி ஒன்றை உருவாக்கினோம்.

ஜானி டாம் வர்கீஸ்
ஜானி டாம் வர்கீஸ்

முதற்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதே இந்த முகக் கவச வேலைகள் தொடங்கிவிட்டன. மாநில அரசிடம் எங்கள் திட்டத்தை முன்வைத்து முறையாக அனுமதி வாங்கி மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின் பேரில், இந்த உதடு மறைவற்ற முகக் கவசத்தை வடிவமைத்துள்ளோம். திருச்சி நபரின் டிசைனை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், பலதரப்பட்ட டிசைன்களை ஒப்பிட்டு தற்போது இந்த முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த வகை முகக் கவசங்களை திருப்பூரில் உள்ள தனியார் உற்பத்தியாளர் ஒருவரின் உதவியோடு தயாரித்திருக்கிறோம். முதற்கட்டமாக 81,000 உதடு மறைவற்ற முகக் கவசங்களை செவித்திறன் குன்றிய, வாய் பேச இயலாதோர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 13,500 பேருக்கு தற்போது வழங்கி இருக்கிறோம்.

சாதாரண முகக் கவசம் துணியால் ஆனது. ஆனால் இந்தப் பிரத்யேக முகக் கவசம் துணி மற்றும் பாலி புரோப்லின் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அணிந்துகொள்பவர் சிரமமின்றி சுவாசிக்க ஏதுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஒருமுறை பயன்படுத்திவிட்டு, கிருமி நீக்கம் செய்யும் வகையில் வாஷ் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

லாக்டௌனில் மருத்துவமனை செல்லவியலாத சர்க்கரை நோயாளிகள்... மருத்துவரின் அலர்ட்கள்!

தற்போது இந்த முகக் கவசத்தை நாங்கள் பைலட் புராஜெக்ட் முறையில் செயல்படுத்தி இருக்கிறோம். இதைப் பயன்படுத்தவிருப்பவர்களிடம் கருத்துகள் பெற்று இதை மெருகேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முகக்கவசம் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் வரவேற்பைப் பொறுத்தே அடுத்தகட்ட உற்பத்தி குறித்து நாங்கள் முடிவெடுக்க இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு