Published:Updated:

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

முதலுதவி
பிரீமியம் ஸ்டோரி
முதலுதவி

ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ரத்தம் வெளிவருவது கட்டுப்படும்படி அந்த இடத்தை அழுத்திப் பிடிக்கவும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ரத்தம் வெளிவருவது கட்டுப்படும்படி அந்த இடத்தை அழுத்திப் பிடிக்கவும்.

Published:Updated:
முதலுதவி
பிரீமியம் ஸ்டோரி
முதலுதவி

உடல்நலக் குறைவுகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு கை வைத்தியங்களைத் தெரிந்துவைத்திருப்பது, எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது போன்றவற்றின் வரிசையில் முக்கியமானது, சில அவசர உடல்நிலைகளுக்கான முதலுதவி பற்றி தெரிந்து வைத்திருப்பது. முதலுதவி பற்றிய அடிப்படை அறிவும் விழிப்புணர்வும் பெற்றிருப்பது, தனிநபருக்கு மட்டுமல்லாது சமூகத்துக்கும் உதவக் கூடியது. பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்கப்பெறும்வரை, அதற்கு முன்னதாகச் செய்யக்கூடிய முதலுதவி அவரின் உடல்நிலையை மோசமடையாமல் தவிர்ப்பது முதல் உயிரைக் காப்பதுவரை இன்றியமையாததாக அமையும். அப்படி, ஆபத்து தவிர்க்கப்பட்ட, உயிர் காக்கப்பட்ட முதலுதவிக் கதைகள் மருத்துவ வட்டாரத்தில் ஏராளம்.

காந்திமதி
காந்திமதி
ராகவி ரவிச்சந்திரன்
ராகவி ரவிச்சந்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயக்கம் முதல் எலும்பு முறிவு வரை பல்வேறு அவசர மருத்துவ நிலைகளுக்குக் கொடுக்க வேண்டிய முதலுதவி செயல்முறை களைப் பற்றி இந்த இணைப் பிதழில் விழிப்புணர்வூட்டுகிறார்கள், மதுரை மாநகராட்சி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் காந்திமதி மற்றும் திருவாரூர், கொருக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ராகவி ரவிச்சந்திரன்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

நாய் கடித்தால்... ஓடுகின்ற குழாய் தண்ணீர்!

* வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயோ, தெரு நாயோ... எது கடித்தாலும் சிலர் பயத்திலும் பதற்றத்திலும் கடித்த இடத்தில் மஞ்சள்தூள் வைப்பது அல்லது கழுவாமல் அப்படியே மருத்துவமனை செல்வது என்று இருப்பார்கள். இரண்டுமே தவறு.

* தெரு நாயாக இருந்தாலும், வீட்டு நாயாக இருந்தாலும், அவற்றின் வாயில் ரேபிஸ் தொடர்பான வைரஸ் இருக்க வாய்ப்புண்டு. எனவே, நாய் கடித்த இடத்தை ஓடுகின்ற குழாய் தண்ணீரில் உடனடியாக நன்றாகக் கழுவவும்.

* சோப் அல்லது ஆன்டி செப்டிக் திரவம் கொண்டு நன்றாக இரண்டு, மூன்று முறை தண்ணீரில் கழுவிய பின், கைவசம் ஆன்டி செப்டிக் ஆயின்மென்ட் இருந்தால் அப்ளை செய்யவும்.

* ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ரத்தம் வெளிவருவது கட்டுப் படும்படி அந்த இடத்தை அழுத்திப் பிடிக்கவும்.

* உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து நாய்க்கடி ஊசியும், TT (Tetanus Toxoid) ஊசியும் சேர்த்துப் போட்டுக்கொள்ளவும்.

* தொடர்ந்து, நாய்க்கடிக்குப் போட வேண்டிய தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றி ஊசி செலுத்திக்கொள்ளவும். கடித்த நாய் வெறி நாயாக இருப்பின் நகராட்சியிடம் தெரிவித்தால் மற்றவர்கள் பாதுகாக்கப் படுவார்கள்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

பாம்புக் கடி... கயிற்றால் இறுகக் கட்டலாமா?

* பெரும்பாலான பாம்புகள் விஷமற்றுதான் இருக்கும் என்பதால் முதலில் பதறக்கூடாது. விஷப் பாம்புகள் கடித்தாலும் பெரும்பாலும் பதற்றத்தைத் தவிர்ப்பதுதான் நல்லது. பாம்புக்கடியில் இதுதான் மிக முக்கியமான அறிவுரை. பாம்புக்கடிக்கு ஆளானவரை அமைதிப்படுத்தி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

* பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அவசரக் கால சிகிச்சை அளிக்கப்படும்.

* கடித்த பாம்பின் தோற்றத்தை மருத்துவருக்கு விளக்குவது, அவர் அந்தப் பாம்பை ஊகித்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். கடித்த பாம்பை ஒருவேளை அடித்து அது உயிரிழந்திருந் தால், அதைக் கையோடு எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்டலாம்.

* பாம்பு கடித்த இடத்தில் துணி, கயிற்றால் இறுக்க மாகக் கட்டுவது கூடாது. அந்த இடத்தில் வளையல், மோதிரம் என ஏதாவது இறுக்கமாக அணியப் பட்டிருந்தாலும் அவற்றை முதலில் அகற்ற வேண்டும்.

* பாம்பு கடித்த இடத்தைக் கீறிவிடுவது, அங்கு ரத்தத்தை உறிஞ்சுவது போன்றவற்றை செய்யக் கூடாது.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

மின் அதிர்ச்சி (Electric shock)... உடல் வெப்பநிலை குறையக் கூடாது!

* மின் அதிர்ச்சிக்கு ஒருவர் உள்ளானால் முதலில் செய்ய வேண்டியது, மின்சாதனங்களை அணைத்து அவர்மீது மின்சாரப் பாய்ச்சலை நிறுத்துவது.

* அடுத்ததாக, பாதிக்கப்பட்டவர் சீராக மூச்சு விடுகிறாரா, இதயத்துடிப்பு சீராக உள்ளதா, பேச முடிகிறதா என்று அனைத்தையும் உடனடியாகக் கவனிக்கவும்.

* அனைத்தும் சரியாக இருந்தால், அவருடைய உடல் வெப்பநிலை குறையாமல், உடல் சில்லிடாமல் பார்த்துக்கொள்ளவும். திரவ உணவுகள் கொடுக்கவும்.

*ஒருவேளை மூச்சு, இதயத்துடிப்பு சீராக இல்லை, பேச முடியாமல் மூர்ச்சையாகி இருக்கிறார் என்றால், உடனடியாக அவருக்கு CPR (Cardiopulmonary Resuscitation) முதலுதவியை மேற்கொள்ள வேண்டும்.

* அதைத் தொடர்ந்து, உடனடியாக இசிஜி போன்ற அவரச மருத்துவ உபகரணங்கள் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

CPR முதலுதவி... எப்படிச் செய்ய வேண்டும்?

* மின் அதிர்ச்சி, மாரடைப்பு போன்ற சூழல்களில் மயக்கத்தில் இருப்பவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவும். கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய ரத்தக்குழாயில் கை வைத்து, நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பார்க்கவும். இந்தத் துடிப்புகள் இல்லை என்றால், கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டிருக்கலாம். இதயத் துடிப்பை உடனடியாக மீட்டாக வேண்டும். அதற்கு CPR முதலுதவியை செய்யும் முன்பு, ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்ல வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் உள்ளங்கையை வைத்து, அதற்கு மேல் மற்றோர் உள்ளங்கையை வைத்து, நெஞ்சு நன்கு அழுந்துமாறு அழுத்த வேண்டும். 30 முறை நெஞ்சுப் பகுதியைத் தொடர்ந்து அழுத்த வேண்டும். பின்னர் வாய்வழியாக இரண்டு முறை சுவாசம் கொடுக்க வேண்டும். மீண்டும் நெஞ்சுப் பகுதியை 30 முறை அழுத்தி, இரண்டு முறை வாய்வழி சுவாசம் கொடுக்க வேண்டும்.

* இப்படி இரண்டு சுற்றுகள் முடித்த பின்னர், நாடித் துடிப்பு மீண்டிருக்கிறதா என்று மீண்டும் பார்க்க வேண்டும். மீளவில்லை என்றால் மீண்டும் செயல்முறையைச் செய்ய வேண்டும்.

* CPR முதலுதவி செய்முறை இன்று ஆன்லைன் பயிற்சி முதல் மருத்துவமனைகள் வரை கற்றுத்தரப் படுகின்றன... பயன்படுத்திக் கொள்ளலாம்.

விஷப்பூச்சிகள் கடித்தால்... சொறியக் கூடாது!

* ஏதேனும் பூச்சி கடித்துவிட்டால் அறிகுறிகள் வெளிப்படும் வரை அது விஷப்பூச்சியா, சாதாரண பூச்சியா என்று உடனடியாகத் தெரியாது. என்றாலும், அதன் கொடுக்கோ, உடலின் மற்ற பாகமோ உடலில் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். இருந்தால், சருமத்துக்கு சேதாரமில்லாமல் அதை அப்புறப்படுத்தவும்.

* உடனடியாக, கடிபட்ட இடத்தை சோப் கொண்டு கழுவவும். கை, கால் என உடலின் அந்த பாகத்தை தொங்கப்போடாமல் மேல்நோக்கி வைத்திருக்கவும்.

* மிக முக்கியமாகக் குளிர்ந்த துணியைக்கொண்டு அந்த இடத்தை சுற்றிவைக்கவும். எக்காரணம் கொண்டும் சொறியவோ, தேய்க்கவோ கூடாது.

* பூச்சிக்கடியால் மயக்கம், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை என்றும் ஏற்படலாம் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

கீழே விழுந்தால்... ஐஸ் பேக்!

* கீழே விழுந்தவுடன் உடனடியாகப் பெரியளவில் வீக்கம் ஏற்பட்டால், அது எலும்பு முறிவாக இருக்கலாம் என்பதால் அந்த இடத்தை கொஞ்சமும் அசைக்காமல், துளியும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்லவும்.

* சிறிய வீக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது முக்கியம்.

* ஒத்தடம் கொடுப்பதற்கு முன், வீக்கம் ஏற்பட்ட உடல் பகுதியை அசைக்காமல், தலையணை போல ஏதாவது ஒன்றின் மீது உயர்த்தி வைத்துக்கொள்ளவும்.

* குளிர்ந்த நீரில் நனைத்த துணியைக் கொண்டோ, ஐஸ் பேக் கொண்டோ ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

* வீக்கம் இருக்கும்வரை அடிபட்டுள்ள பகுதியை உயர்த்தி வைத்திருக்க வேண்டும்.

* வெகு தூரம் பயணம் செய்பவர்களுக்கு காலில் வீக்கம் ஏற்படும். ரத்த ஓட்டம் மேல்நோக்கி செல்லாமல் கால்களில் நீர் தேங்குவது அதற்கு காரணமாக இருக்கலாம். இவர்கள் கிரிப் பேண்டேஜை கால்களில் சுற்றிக்கொள்வது நல்லது.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

வலிப்பு... சாவி கொடுக்கக் கூடாது!

* வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு எப்போது, எந்த நேரத்தில் வலிப்பு ஏற்படும் என்பது தெரியாது. அதனால் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

* வலிப்பு ஏற்பட்டால் அவர்களின் பின் தலையில் உராய்வு ஏற்படாமல் தடுக்கவும். தலையணை வைத்து ஒருபுறமாகப் படுக்க வைத்தால் உராய் வதைத் தடுக்கலாம்.

* வாயின் அருகிலோ, உடலின் அருகிலோ கூர்மை யான பொருள்கள் இல்லாதவாறு அப்புறப் படுத்தவும்.

* சாவி, மற்ற இரும்புப் பொருள்களைக் கைகளில் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்பது மூடநம்பிக்கையே. உண்மையில் அந்த நிலையில் இரும்பு மற்றும் கூரான பொருள்களை அவர்கள் கைகளில் கொடுப்பது ஆபத்தை அதிகரிக்கவே செய்யும்.

* மூச்சு சீராக உள்ளதா என்று கவனிக்கவும்.

* முழு நினைவு திரும்பும்வரை, எந்த திரவ உணவும், தண்ணீர்கூடக் கொடுக்கக் கூடாது. சுயநினைவு இல்லாத நேரத்தில் வாயின் வழியாகக் கொடுக்கும் உணவு நிலைமையை மோசமாக்கும். எனவே, சுயநினைவு திரும்பிய பின்பு திரவ உணவில் ஆரம்பித்து மற்றவற்றை பொறுமையாகக் கொடுக்கலாம். சில நிமிடங்களில் சரியாகவில்லை என்றால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

தீக்காயங்கள்... குளிர்ந்த நீர்!

* பாதிக்கப்பட்டவரை உடனடியாகத் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அப்புறப் படுத்தவும்.

* புகையால் மூச்சு மூர்ச்சையாகி இருந்தால் CPR முதலுதவியை மேற்கொள்ளவும்.

* சுவாசிப்பதில் பிரச்னை இல்லையென்றால், உடலில் உள்ள வாட்ச், மோதிரம், இறுக்க மான உடை போன்றவற்றை அப்புறப் படுத்தவும்.

* குளிர்ந்த தண்ணீரை ஊற்றி தீக்காயத்தை குளிரச் செய்யவும். எரிச்சல் தணியும். பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

* சமையல் செய்யும்போதோ, வேறு ஏதேனும் பணியின்போதோ சிறிய அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டால், அந்தப் பகுதியை நன்றாகக் கழுவி, அதில் தேன், சோற்றுக் கற்றாழை அல்லது கைவசம் இருக்கும் மாய்ச்சரைஸரை அப்ளை செய்யலாம்.

* தீக்காயத்தின் தோலை உரித்துவிடுதல், கொப்புளங்களை உடைத்துவிடுதல் போன்ற வற்றை செய்யக் கூடாது.

* மூன்று வாரங்களுக்கு தீக்காயம் இருக்கும் என்பதால் வெயில்படாமல் இருக்கவும். வெளியில் செல்ல வேண்டும் என்றால், காட்டன் துணி கொண்டு மூடிக்கொண்டு செல்லலாம்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

வாந்திக்கு வைத்தியம்... திரவ உணவு!

* நிறைய காரணிகளால் திடீரெனப் பலருக்கும் வாந்தி பிரச்னை ஏற்படலாம். சாப்பிட முடியாது; சாப்பிட்டதும் செரிமானம் அடையாமல் வாந்தி ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். எனவே, வாந்தி நேரத்தில் திட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

* உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, சிட்ரஸ் அதிகம் உள்ள பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளவும்.

* திரவ உணவுகளையும், ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்ளவும்.

*செரிமானத்துக்குக் கடினமான உணவுகளைத் தவிர்க்கவும்.

* வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டால் உடலின் நீர்ச்சத்து இழப்பு அதிகமாகும் என்பதால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும்.

தும்மல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* தும்மலுக்கு முதலுதவி என்று எதுவும் இல்லை, தேவையும் இல்லை. என்றாலும், சில சூழ்நிலைகளைத் தவிர்ப்பதன் மூலம் தும்மலைத் தவிர்க்கலாம்.

* தும்மல் ஏற்படுவதற்கு அனைவருக்கும் ஒரே காரணம் இருப்பதில்லை. தூசு, வாசனை திரவியம், பூ, காரமான உணவு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் தும்மல் ஏற்படலாம். இதில் அவரவருக்கு உரிய காரணத்தை அறிந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

* முக்கியமாக சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தும்மல் வரும்போது மற்றவர் களிடமிருந்து இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

* தும்மும்போது எதிரில் யார் மேலும் நீர்த்திவலைகள் படாத வகையில் கைகளால் மூடியபடி, கீழே குனிந்து தும்மவும்.

வெட்டுக்காயம், ரத்தம், கட்டு!

* வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால், அந்தப் பகுதியை உயர்த்தி வைக்க வேண்டும்.

* காட்டன் துணியைக் கொண்டு வெட்டுப்பட்ட இடத்தைச் சுற்றி சற்று இறுக்கமாகக் கட்டுப்போடவும். இதனால் ரத்தக்கசிவைத் தடுக்கலாம்.

* ரத்தசேதம் அதிகம் இருந்தால், திரவ உணவுகள் அதிகமாகக் கொடுத்து நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* உடனடியாக மருத்துவமனை சென்று TT ஊசி, தையல் என்று தேவையைப் பொறுத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

லோ சுகர், மயக்கநிலை, இனிப்பு!

* ரத்த சர்க்கரை பிரச்னை உள்ளவர்களுக்கு, திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து லோ சுகர் ஆகும்போது, மயக்கம் ஏற்படும்.

* இப்போதெல்லாம் இளம் வயதிலேயே பலருக்கும் சர்க்கரை பிரச்னை உள்ளதால், அவர்கள் லோ சுகர் குறித்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* சீரான இடைவெளியில் சுகர் டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* லோ சுகரால் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக அவருக்கு இனிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

* இனிப்பு என்றால் அதை நீர்வடிவத்தில் கொடுக்க வேண்டும். அதாவது சர்க்கரை, வெல்லம் போன்றவற்றைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

* சிலர் சாக்லேட்டைக் கொடுப்பார்கள். பாதிப்புக்குள்ளானவர் அதைச் சாப்பிடும் அளவுக்கு சுயநினைவோடு இல்லையெனில், சாக்லேட்டை நீரில் கரைத்துக் கொடுக்கவும்.

* முதலுதவி கொடுத்த பின்னரும் மயக்கம் தெளியவில்லை எனில், மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.

அலர்ஜி... வெற்றிலை, மிளகு வைத்தியம்!

* ஏதேனும் பூச்சி கடித்தால் அல்லது உடம்பின் மீது பட்டாலோ, முதன் முறையாக ஒரு முகப்பூச்சு, டை பயன்படுத்தும்போது ஏதேனும் சாயத்தைக் கையாளும்போது உள்ளிட்ட புறச்சூழல் காரணங்களாலோ, உணவுகளாலோ சிலருக்கு திடீரென சருமத்தில் அலர்ஜி தோன்றலாம்.

* அலர்ஜிக்கு இதுதான் காரணம் என்று கண்டறிய முடிந்தால் அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதை, அதிலிருந்து விலகி இருப்பதை முதலில் செய்ய வேண்டும்.

* அலர்ஜி பிரச்னை வாடிக்கையாக உள்ளவர்கள், அதற்கென மருத்துவர் பரிந்துரைத்த க்ரீமை பயன்படுத்தலாம்.

* மற்றவர்கள் இரண்டு வெற்றிலை, ஐந்தாறு மிளகு சாப்பிடலாம்.

* அலர்ஜி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனை செல்லவும்.

* ஒருவேளை இரவு நேரங்களில் அலர்ஜி ஏற்பட்டால், வெற்றிலை, மிளகு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகும், அது தணியவில்லை என்றால், அவில் மாத்திரையை முதலுதவி சிகிச்சையாகச் சாப்பிடலாம். அப்படியும் தணியவில்லை என்றால் அலர்ஜி விஷப் பூச்சிகள் கடித்ததாலும் ஏற்பட்டிருக்கலாம் என்பதால் உயிருக்கு ஆபத்தாகலாம். 24 மணி நேர மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

நெஞ்சு வலி... இரண்டு காரணங்கள்!

* நெஞ்சு வலி ஏற்பட இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

* ஒன்று, செரிமானப் பிரச்னை. இரண்டாவது, இதயத்தில் ஏற்படும் வலி. இரண்டுக்குமான முதலுதவிகளைப் பார்க்கலாம்.

* செரிமானப் பிரச்னையால் ஏற்படும் நெஞ்செரிச்சல், நெஞ்சு வலிபோல உணர வைக்கலாம். காரமான உணவு எடுத்துக்கொள்பவர்கள், அடிக்கடி டீ, காபி அருந்துபவர்கள், நேரத்துக்கு சாப்பிடாதவர்கள், நாள்பட்ட அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு இதுபோன்ற நெஞ்சு வலி / நெஞ்செரிச்சல் ஏற்படும்.

* இதுபோன்ற வலி ஏற்படும் சூழ்நிலையில், அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும் ஜெலுசில் போன்ற ஆன்டசிட் (Antacid) டானிக்குகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

* அதற்குப் பின்னும் வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் செல்லவும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

இதய வலி... மாரடைப்பா?

* இதயத்தில் ஏற்படும் வலி, சில நேரங்களில் மாரடைப்பாக இருக்கலாம். அது மாரடைப்புக்கான வலி என்றால், இடதுபுறம் நெஞ்சுப் பகுதியில் மிக மிக அதிகமாக, தாங்க முடியாத அளவுக்கு பயங்கர வலியாக இருக்கும். யாரோ நம்மை அழுத்துவதுபோல உணர வைக்கும். நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் வலி தொடர்ந்து தோள்பட்டையிலும், முதுகிலும் பரவ ஆரம்பிக்கும். கூடவே அதிகமாக வியர்ப்பது, படபடப் பாக இருப்பது, வாந்தி உணர்வு, பய உணர்வு போன்றவையும் சேர்ந்து வெளிப்படும்.

* இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைவதே ஒரே தீர்வு.

* மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரையிலான கோல்டன் ஹவரில், Loading Dose எனக் கூறப்படும் மாத்திரைகளை (tab. Aspirin 325 mg -1, tab. Clopidogrel 150 mg- 2, tab. Atorvastatin 80 mg - 1) பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரைகளை சர்க்கரை நோயாளர்கள், ரத்த அழுத்த நோயாளர்கள் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது.

* ஒருவேளை அந்த நெஞ்சு வலி மாரடைப்பு இல்லையென்றாலும், இந்த மாத்திரைகள் போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீரில் மூழ்கினால்... இடதுபுறம் திருப்பி..!

* தண்ணீரில் மூழ்கியவரை எத்துணை விரைவாக முடியுமோ அத்துணை விரைவாக மீட்டு சமதளத்தில் படுக்க வைக்க வேண்டும்.

* இறுக்கமான உடைகளைத் தளர்த்த வேண்டும்.

* மூச்சு, இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். இவை இல்லை என்றால், CPR முதலுதவியை மேற்கொள்ள வேண்டும். அதற்கிடையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் ஆயத்தங்கள் நடைபெற வேண்டும்.

* ஒருவேளை மூச்சு விடுகிறார். ஆனால், சிரமப்படுகிறார் எனில், இடதுபுறமாகத் திருப்பிப் படுக்க வைக்க வேண்டும். அப்போது உள்ளே சேர்ந்த தண்ணீர், கசடு வெளியேறி மூச்சுவிடுவதில் உள்ள சிரமங்கள் குறையும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

மூக்கில் ரத்தம்... பதற்றம் வேண்டாம்!

* மூக்கில் ரத்தம் வருவதற்கு (Epistaxis) பல காரணங்கள் உண்டு. சிலருக்கு உடற்சூட்டால் வரலாம். மூக்கின் உள்ளே ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தாலோ, உள்ளிருக்கும் சில்லி மூக்கு உடைந்தாலோ ரத்தம் மூக்கில் இருந்து வெளியேறலாம்.

* பதற்றப்படாமல் ரத்தத்தைத் துடைத்து எடுத்துவிட்டு, மூக்கின் இரண்டு துவாரங்களையும் அழுந்தப் பிடித்தபடி, வாய் வழியாக மூச்சுவிடலாம். வாய் வழியாக ரத்தம் வந்தால் அதை வெளியேற்றி விடலாம்.

* இப்படியே குறைந்தது மூன்று நிமிடங்கள் வைத்திருந்தால் ரத்தம் வருவது குறையும்.

* ரத்தம் வருவது குறைந்தவுடன் மூக்கில் உள்ள கசடுகளை வெளியேற்று வதாக நினைத்து மூக்கை சிந்தக் கூடாது.

* ஐஸ் பேக்கை மூக்கின் மேல் வைக்கலாம். அல்லது ஒரு துணியில் ஐஸ்கட்டிகளைப் போட்டு மூக்கின் மேல் வைத்திருக்கலாம். ரத்தக் கசிவு குறையும்.

* விரைந்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து காரணத்தை அறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

* குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் வருவது எளிதில் சரிசெய்யக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமானால் மூக்கில் ரத்தம் வர வாய்ப்புள்ளது என்பதால், அவர்கள் விரைந்து மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

மயக்கம்... தண்ணீர் கொடுக்கக் கூடாது!

* உடம்பில் எனர்ஜி குறையும்போது, சாப்பிடாமல் இருந்தால்,

*வெயில் எனப் பல காரணங்களால் மயக்கம் ஏற்படலாம். மயக்கம் அடைந்தவர்களை முதலில் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.

* சுயநினைவு இல்லாமல், நாக்கை கடித்துக்கொண்டு உள்ளார்களா, வாயில் இருந்து நுரை ஏதும் வருகிறதா, வலிப்பா என்று கவனிக்கவும்.

* இவை எதுவும் இல்லாதபட்சத்தில், அவர்களது தலை அண்ணாந்தோ, மல்லாந்தபடியோ இல்லாமல் ஒருபுறமாகச் சாய்த்து வைக்கவும்.

* முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம். Pain stimulus என்று சொல்லப்படும், கூட்டப்படும் ஓர் அழுத்தத்தை அவர்களது நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து அழுத்தி உண்டாக்கவும்.

* முக்கியமான விஷயம், சுயநினைவின்றி மயங்கி விழுந்தவர்களுக்கு வாய்வழியே தண்ணீர், ORS கரைசல் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. இதனால் அவர்களுக்கு இன்னும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

* மூச்சு இல்லை, மயக்கம் தெளியவில்லை எனில் CPR சிகிச்சை மேற்கொள்ளவும்.

* முடிந்தவரை மருத்துவமனைக்கு விரையவும்.

* சுயநினைவு திரும்பிவிட்டால், எடுத்ததும் திட உணவுகளைக் கொடுக்காமல், திரவ உணவு கொடுத்து சிறிது நேரம் சென்ற பின் திட உணவுகளைக் கொடுக்கலாம்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

எலும்பு முறிவு... ஸ்கேல், கம்பு!

* எதிர்பாராத விபத்துகளில் அதிகம் வலி தரக்கூடிவற்றில் ஒன்று, எலும்பு முறிவு.

* உடனடியாக பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டால், அது எலும்பு முறிவாக இருக்கலாம். எனவே, அந்த இடத்தைக் கொஞ்சமும் அசைக்காமல், துளியும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்லவும்.

* எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தை சுளுக்கு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை என்று நினைத்து உதறுவது, தைலம் தேய்ப்பது என அசைக்கும்பட்சத்தில், ஓர் எலும்பின் மீது இன்னோர் எலும்பு மோதுதல், முறிந்த எலும்பு அங்கிருக்கும் நரம்புகளில் குத்தி அவற்றை சேதமாக்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அது ஆபத்தை அதிகமாக்கலாம்.

* எனவே, நேராக இருக்கும் ஸ்கேல் அல்லது ஒரு கம்புகொண்டு, எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அசைவு ஏற்படாத வகையில் துணிகொண்டு சேர்த்துக்கட்டி, மருத்துவமனை விரையவும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

வயிற்றுப்போக்கு... இந்தக் கரைசல் தயாரிக்கவும்!

* ஃபுட் பாய்சன் போன்ற உணவு காரணங்களால் மட்டுமல்லாமல், காய்ச்சல், உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

* குறுகிய இடைவெளியில், நீர் போன்று மலம் கழிப்பதுதான் வயிற்றுப் போக்கு.

* வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் முதலில் ஏற்படும் பிரச்னை, நீர்ச்சத்து குறைதல். அதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கடைகளில் கிடைக்கும் ORS கரைசலை வாங்கிவந்து சீரான இடைவெளியில் பருகக் கொடுக்க வேண்டும்.

* வீட்டிலேயே ORS கரைசல் செய்யும் முறை: கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர் - 1 லிட்டர், சர்க்கரை - 6 டீஸ்பூன் (1 டீஸ்பூன் = 5 கிராம்), தூள் உப்பு - அரை டீஸ்பூன்... இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது பருகக் கொடுக்கவும் (24 மணி நேரம் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். பிறகு புதிதாகத் தயாரிக்க வேண்டும்).

* விரைவாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

குழந்தைகள் மூக்கினுள் பொருள்களை நுழைத்துக்கொண்டால்..!

* குழந்தைகள் சுட்டித்தனமாக சில நேரங்களில் குச்சி, பேனா மூடி போன்ற பொருள்களை மூக்கினுள் நுழைத்துக் கொள்வது பலர் வீட்டிலும் நடந்திருக்கும். அப்படியான சூழ்நிலையில், அந்தப் பொருள் வெளியே தெரிகிறது, உருவிவிடக் கூடிய நிலையில் இருக்கிறது என்றால் முயற்சி செய்யலாம்.

* ஒருவேளை அது உள்தள்ளி இருக்கிறது, வெளியே எடுக்க சாத்தியமில்லை என்றால், அதை எடுக்க முயல வேண்டாம். அது, இன்னும் அப்பொருளை உள்ளே செல்ல வைத்துவிடலாம்.

* உடனடியாக காது, மூக்கு, வாய் மருத்து வரிடம் செல்லவும். அங்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, பொருளின் அளவு, அது இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்த பின்னர், முயற்சி மேற்கொள்ளப்படும்.

பொருள்களை விழுங்கிவிட்டால்..!

* குழந்தைகள் காயின், சிறு பிளாஸ்டிக் பொருள்கள் என எதையேனும் வாயினுள் போட்டு விழுங்கிவிட்டால், குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து முதுகில் தட்டுவது, வாழைப்பழம், தண்ணீர் போன்றவற்றை சாப்பிடக் கொடுப்பது என்று எதையும் செய்திடவே கூடாது.

* எத்துணை விரைவாக இயலுமோ அத்துணை விரைவாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

* உடனடியாக எக்ஸ்ரே எடுத்து, நிலைமையை அறிந்துகொண்டு, சிகிச்சை தொடங்கப்படும்.

* குறிப்பாக, சிறிய அளவிலான பேட்டரியை விழுங்கியிருந்தால் அது உடலின் உள்ளே வினைபுரியத் தொடங்கிவிடும் என்பதால் அதிக விரைவு காட்ட வேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

கண் எரிச்சல்... முதலில் கைகளைக் கழுவவும்!

* கண்ணில் ஏதேனும் வெளிப்பொருள்கள் விழுந்திருந்தால் கண் எரிச்சல், கண் அரிப்பு ஏற்படலாம்.

* இதற்குத் தீர்வு, கண்ணை சுத்தப்படுத்துவதுதான். அதற்கு முதலில், கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

* கண்களை மாசில்லாத தண்ணீர் கொண்டு நன்றாகக் கழுவவும். தூசு வெளியேறி பின் எரிச்சல், அரிப்பு குறையத் தொடங்கும்.

* மாறாகக் கண்ணில் எரிச்சல் குறையாமல், சிவந்து போவது, அரிப்பு அதிகமாவது என்று இருந்தால் மருத்துவமனை செல்லவும்.

* சிலருக்கு உடற்சூட்டாலும் கண் எரிச்சல் ஏற்படலாம். நீர்ச்சத்து உணவுகள், குளியல் என்று அவர்கள் உடற்சூட்டைத் தணிக்கும் வழிகளை நாடலாம்.

நெஞ்சுவலி... மயக்கம்... நாய்க்கடி... பாம்புக்கடி... விபத்து... நீங்களே செய்யலாம் முதலுதவி!

வயிற்று வலி... அப்பண்டிசைட்டிஸ் (Appendicitis) கவனம்!

* வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. சாப்பிடாமல் இருப்பது, அல்சர், உணவு செரிமான பிரச்னை என அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, அததற்குண்டான முதலுதவி களை மேற்கொள்ளலாம்.

* `ஒட்டுக்குடல் வலி' என்று சொல்லப்படும் அப்பண்டிசைட்டிஸ் (Appendicitis), உடனடியாகக் கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னை. வயிற்று வலிக்குக் காரணம் ஒட்டுக்குடல் வலி எனில், தொப்புளுக்குக் கீழே வலது பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கூடவே காய்ச்சல், வாந்தி உணர்வு போன்ற வையும் இருக்கும். இதற்கு எந்த முதலுதவியும் இல்லை என்பதால், இந்த அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக ஸ்கேன், ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவும்.

* எதிர்பாராத சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் நோய் மீட்பில் முக்கியப் பங்காற்றக்கூடிய முதலுதவி வழிமுறைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism