Published:Updated:

குழந்தைகளை பாதிக்கும் ரத்தப்புற்றுநோய்..அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?#BloodCancerAwarenessMonth

#BloodCancerAwarenessMonth
#BloodCancerAwarenessMonth

கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, தண்டுவடத்தில் நுழையும் ஊசியின் வலி, சிகிச்சையால் முடியுதிர்வு என 12 வயதிலேயே அத்தனை சிரமங்களையும் தாங்கியது அந்தக் குழந்தை...

டோனி என்ற அந்த அழகிய குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில் ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவத் தொழில்நுட்பமோ சிகிச்சையோ பெரிதாக வளர்ச்சியடையாத காலகட்டம் அது. ஆனாலும் குழந்தையை எப்படியும் புற்றுநோயிலிருந்து காப்பாற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அந்தக் குழந்தையின் தாய் ஓடத்தொடங்கினார்.

புற்றுநோய்க்காகக் கண்டுபிடிக்கும் புதிய புதிய மருந்துகளையெல்லாம் பரீட்சார்த்த முறையாக டோனியிடம் முயன்றனர் மருத்துவர்கள். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, தண்டுவடத்தில் நுழையும் ஊசியின் வலி, சிகிச்சையால் முடியுதிர்வு என 12 வயதிலேயே அத்தனை சிரமங்களையும் தாங்கியது அந்தக் குழந்தை. 12 வயதில் ஒருமுறை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ரத்தப் புற்றுநோய்க்கான எந்தத் தடயமும் அந்தக் குழந்தையின் உடலில் தெரியவில்லை. பாதியிலே விட்ட பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தது அந்தக் குழந்தை.

#BloodCancerAwarenessMonth
#BloodCancerAwarenessMonth

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இன்றும் ஆரோக்கியமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் டோனி. இன்று அவரது வயது 40. ஆனால் தன் தாயைப் புற்றுநோய்க்கு பலிகொடுத்துவிட்டார் டோனி. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராகவும் தற்போது பணியாற்றுகிறார் டோனி. இது ரத்தப் புற்றுநோயை வெற்றிகரமாக வென்ற ஒருவரின் கதை.

புற்றுநோய்களில் 34 வகைகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் குழந்தைகளையும் வளரிளம் பருவத்தினரையும் பரவலாக பாதிப்பது ரத்தப் புற்றுநோய்தான். இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ரத்தப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

Vikatan

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ``இன்றைய மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் குழந்தைகளின் ரத்தப் புற்றுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக மாறி வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை சிகிச்சைகள் இருந்திருந்தால் இன்னும் பல குழந்தைகளைக் காப்பாற்றியிருப்பேன். அந்தக் குழந்தைகள் இன்னும் என் கண் முன்னால் நிற்கிறார்கள். 'ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை?' என்று என்னைக் கேட்பதுபோல் உள்ளது" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

குழந்தைகளை பாதிக்கும் புற்றுநோய்களில் ரத்தப்புற்றுநோயும் நிணநீர் மண்டல புற்றுநோயும் (Lymphoma) 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோரை பாதிக்கிறது. ஆனால், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்கிவிட்டால், ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் புற்றுநோய் மருத்துவ நிபுணர். டேவிட் பிரவீண்குமார்.

#BloodCancerAwarenessMonth
#BloodCancerAwarenessMonth

``நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள் வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும். அவற்றில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் உற்பத்தியானதும் உடலிலிருந்து சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு உற்பத்தி நிறுத்தப்படும். ஆனால் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செல்கள் இந்த சமிக்ஞைகளுக்குக் கட்டுப்படாமல் பெருகிக்கொண்டே இருக்கும். இதனால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படும். ரத்தப் புற்றுநோயை `அக்யூட்' (Acute), 'கிரானிக்' (Chronic) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதில், 'அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கிமியா' (Acute Lymphoblastic Leukemia - ALL) என்ற வகை புற்றுநோய்தான் குழந்தைகளிடம் மிகப்பரவலாகக் காணப்படுகிறது. இந்த வகை புற்றுநோய் உடலில் உற்பத்தியாகும் 'லிம்போசைட்' என்ற வெள்ளையணுக்களை பாதிக்கக்கூடியது. லிம்போசைட் வெள்ளையணுக்கள் நம் உடலை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும். ALL வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் வெள்ளையணுக்கள் சரியாக முதிர்ச்சி அடையாமல் உருவாகும். அதனால் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மை இருக்காது.

Dr.Praveen Kumar
Dr.Praveen Kumar

ரத்தப்புற்றுநோய்க்கான காரணிகளை அறுதியிட்டுக் கூற முடியாது. டவுண் சிண்ட்ரோம் உள்ளிட்ட சில மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தப்புற்றுநோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. பெண் கர்ப்பமாக இருக்கும்போது எக்ஸ்ரே உள்ளிட்ட கதிர் வீச்சால் பாதிக்கப்படுவது, பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் அதிகம் புழங்க நேரிடும் கர்ப்பிணிகள் ஆகியோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்தப்புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

Vikatan

காரணம் கண்டறிய முடியாத காய்ச்சல், எடை குறைதல், பசியின்மை, கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் கட்டி, எலும்பில் வலி, மூட்டு வலி , ரத்தக்கசிவு, எளிதில் காயம் ஏற்படுதல், பல் ஈறுகளில் பிரச்னை, விரைவில் சோர்வடைதல் போன்றவரை ரத்தப் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும்.

ரத்தப் பரிசோதனை, எலும்பு மஜ்ஜை மாதிரியைச் சேகரித்துச் செய்யப்படும் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். முதுகுத் தண்டில் எடுக்கப்படும் திரவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் ரத்தப்புற்றுநோய் முதுகுத்தண்டு, மூளை ஆகியவற்றை பாதித்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். 'இம்யூனோ டைபிங் அண்ட் சைடோஜெனிடிக் அனாலிசிஸ்' (Immunotyping and Cytogenetics Analysis) என்ற பரிசோதனையின் மூலம் ரத்தப் புற்றுநோயின் வகையை அறிய முடியும்.

#BloodCancerAwarenessMonth
#BloodCancerAwarenessMonth

இந்த நோய்க்கான சிகிச்சை அதன் வகைக்கேற்ப மாறுபடும். மருந்துகள் உட்கொள்வது, கீரோதெரபி ஆகியவை இதற்கான முக்கிய சிகிச்சைகள். நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றவர்கள், மீண்டும் அதன் பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தொடர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

'டார்கெட்டட் தெரபி' (Targeted Therapy) மூலம் புற்றுநோய் செல்கள் உள்ள பகுதியை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். இந்தச் சிகிச்சையில் பக்க விளைவுகள் குறைவு. கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும். இதன் மூலம் புற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

மேற்கொண்ட சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை (Stem Cell Transplant) தான் ஒரே தீர்வு. குழந்தையின் தொப்புள்கொடியிலிருந்து சேமிக்கப்படும் ஸ்டெம் செல்களின் மூலம் ரத்தப்புற்றுநோய்க்குச் சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும். குழந்தைப் பருவத்தில் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் பிற்காலத்தில் பிறரைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இது தொற்றுநோயும் அல்ல... பரம்பரை நோயும் அல்ல" என்கிறார் மருத்துவர் டேவிட் பிரவீண்குமார்.

ரத்தப்புற்றுநோயை சரியான சமயத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் குழந்தைகளின் வாழ்நாள் நீடிக்கும் என்பது உறுதி!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு