Published:Updated:

கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வார்டு! -நெல்லையில் சிறப்பு அதிகாரி தகவல் 

சிறப்பு அதிகாரி கருணாகரன் மற்றும் ஆட்சியர் ஷில்பா
சிறப்பு அதிகாரி கருணாகரன் மற்றும் ஆட்சியர் ஷில்பா

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், படுக்கைகள், மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் இருக்கின்றன. தனியார் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக கைத்தறித்துறை இயக்குநர் கருணாகரன் மற்றும் காவல்துறை ஏ.டி.ஜி.பி-யான மகேஷ் அகர்வால் ஆகியோரைத் தமிழக அரசு நியமித்துள்ளது. 

சிறப்பு அதிகாரி கருணாகரன்
சிறப்பு அதிகாரி கருணாகரன்

அதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளின் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. அதில், நெல்லை சரக டி.ஜ.ஜி பிரவீன்குமார் அபினவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, காவல்துறை ஆணையர் தீபக் தமோர், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கருணாகரன் ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நோய்த்தொற்று உள்ளவர்கள் 55 பேர் உள்ளனர். ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், படுக்கைகள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
சிறப்பு அதிகாரி கருணாகரன் ஐ.ஏ.எஸ்

நெல்லை அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், மருந்துப் பொருள்கள், படுக்கை வசதிகள் ஆகிய அனைத்தும் தயாராக உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் .

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், டவுன், கோடீஸ்வரன்நகர், பேட்டை, பாளையங்கோட்டை, களக்காடு, பத்தமடை , வள்ளியூர் ஆகிய 8 இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதால் அந்த இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

அதிகாரிகளுடன் ஆலோசனை
அதிகாரிகளுடன் ஆலோசனை

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என 160 பேரிடம் சோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 140 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் 200 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில் 97 பேருக்கு நெகடிவ் என்றே முடிவு வந்திருக்கிறது. மற்றவர்களின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். 

ஆட்சியர் ஷ்ஹில்பா பிரபாகர்சதீஷ்
ஆட்சியர் ஷ்ஹில்பா பிரபாகர்சதீஷ்

நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா பகுதியில் கர்ப்பிணிகளுக்காகச் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல டயாலிசிஸ் செய்பவர்களுக்காகவும் சிறப்பு வார்டு அமைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு