Published:Updated:

திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவல்லி... கொரோனா சிகிச்சை மையத்தில் மூலிகை முகர்தல் சிகிச்சை!

கற்பூரவல்லி
கற்பூரவல்லி ( freepik )

கொரோனா சிகிச்சை மையத்தில் சுவாசிப்பதில் சிக்கல் இருந்த நோயாளிகளுக்காக, வாசனையும், நெடியும், மருத்துவ குணமும் மிக்க திருநீற்றுப்பச்சிலை மற்றும் கற்பூரவல்லி ஆகிய ’மூலிகைத் தேவதைகளை’ உடன் அழைத்துச் சென்றிருந்தோம்.

கோவிட்-19 வைரஸ் நுரையீரலை அதிகமாக பாதிப்பதால் நோயாளிகளுக்கு இருமல், சளி ஏற்படுகின்றன. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. சுவாசம் தொடர்பான இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய, திருப்பூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார் மற்றும் அவரின் குழுவினர், சித்த மருத்துவ முறையைப் பின்பற்றி வருகின்றனர். அது நல்ல பலனை அளிப்பதாகவும் கூறுகின்றனர்.

திருநீற்றுப்பச்சிலை
திருநீற்றுப்பச்சிலை

இதைப் பற்றி டாக்டர் விக்ரம் குமாரிடம் பேசினோம். '' 'சித்த மருத்துவத்தில் ’முகர்தல்’ என்பதும் முக்கியமான சிகிச்சை. அவ்வகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் சுவாசிப்பதில் சிக்கல் இருந்த நோயாளிகளுக்காக, வாசனையும், நெடியும், மருத்துவ குணமும் மிக்க திருநீற்றுப்பச்சிலை மற்றும் கற்பூரவல்லி ஆகிய ’மூலிகை தேவதைகளை’ உடன் அழைத்துச் சென்றிருந்தோம். அடுத்த சில மணி நேரத்தில், சித்த மருத்துவத்தின் இந்த முகர்தல் சிகிச்சை அவர்களுக்குப் பெருமளவில் கைகொடுத்தது. மேலும் நோயாளிகள் மூச்சு விடுவதில் உள்ள சிக்கல் இந்த மூலிகைகளின் பயனாலும், மூலிகை முகக் கவசத்தினாலும் குறைந்து வருகிறது'' என்றார்.

மேலும், ''திருநீற்றுப்பச்சிலை சுவாசக் கோளாற்றைச் சரிசெய்கிறது. இதன் விதை கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. மேலும் கற்பூரவல்லி சளி, இருமல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும். முகர்தலைக் காட்டிலும் இந்த மூலிகைகளை ஆவிபிடிப்பது சிறந்த பலனைத் தரும். ஆவி பிடிப்பதற்கான சரியான வசதிகள் இங்கு இல்லாத காரணத்தால் முகர்தல் மருத்துவத்தைச் செயல்படுத்துகிறோம்'' என்றார் மருத்துவர் விக்ரம் குமார்.

முகர்தல் சிகிச்சை
முகர்தல் சிகிச்சை
Corona Live Updates: தமிழகத்தில் 1.7 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 4,979  பேருக்குத் தொற்று

மூலிகை மாஸ்க் பற்றிக் கூறும்போது, ''திருநீற்றுப்பச்சிலை, நொச்சி, புதினா, உப்பு, கற்பூரம் கலந்த மூலிகையை நீராவி வடித்தல் முறையில் (steam distillation) வடிகட்டி, நவீன முறையில் தயாரிக்கப்பட்டது இந்த மாஸ்க். இதை சித்த மருத்தவர் பாஸ்கர் தயாரித்துள்ளார். இதை நோயாளிகள் மூன்று மணிநேரம் பயன்படுத்தினால் மூச்சுவிடுதல் சுலபமாகிவிடுகிறது'' என்றார்.

இன்றைய சூழலில் மருத்துவர்களுக்கு அதிகமாகக் கொரோனா பரவி வருவதால், தான் கபசுரக் குடிநீர் குடித்து வருவதுடன், மேலே கூறிய மூலிகைகளை ஆவிபிடிப்பதாகவும் கூறிய மருத்துவர் விக்ரம் குமார், இந்த முகர்தல் சிகிச்சையை ஊக்கப்படுத்தும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு. சுசி கண்ணமா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

நாம் சாதாரணமாக வீட்டில் வளர்க்கிற மூலிகைகள் பேரிடர் காலங்களில் மருந்தாவது சிறப்பு!

மூலிகை முற்றம்
மூலிகை முற்றம்

மூலிகைகளைப் போலவே, மூலிகை நறுமண எண்ணெய்கள் பயன்படுத்தப்படும் அரோமா சிகிச்சை பற்றி யோகா மருத்துவர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். ''நறுமண சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் எண்ணெயானது மூலிகைகளின் பாகங்களிலிருந்து நீராவி வடிகட்டுதல் முறைப்படி எடுக்கப்படும். இந்த நறுமண எண்ணெயை முகரும்போது மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும். மேலும் தலைவலி, மன அழுத்தம், மூச்சுவிடுவதில் சிரமம் சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும்.

சாதாரணமாக நாம் குளிக்கும்போதுகூட, அரோமா எண்ணெய்த் துளியை தண்ணீரில் சில சொட்டுகள் விட்டுக் குளிக்க நல்ல நறுமணத்தையும், மனதுக்குப் புத்துணர்வையும் தரும். யோகா பிரிவுகளில் எல்லாம் இந்த நறுமண சிகிச்சையைப் பயன்படுத்துகிறோம். நறுமண சிகிச்சையின் பயனை அறிந்தே அன்றே கொசுவை விரட்ட வேப்பெண்ணையைப் பயன்படுத்தினார்கள் முன்னோர்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு நொச்சி, தைல மரம் போன்ற மூலிகைகளின் எண்ணெய் விட்ட நீராவியை அவர்களின் முகம், தொண்டை மற்றும் மார்புப் பகுதிகளுக்குக் கொடுப்போம். இதனால் அவர்களுக்கு மூச்சுவிடுவதில் உள்ள பிரச்னை நீங்குவதோடு நெஞ்சுப் பகுதியில் உணரப்படும் இறுக்கத்திலிருந்தும் விடுதலை கிடைப்பதை உணர்வார்கள்.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

சில நோயாளிகளுக்கு, இந்த எண்ணெயைத் தூய்மையான பருத்திப் பந்துகளில் இரண்டு, மூன்று துளிகள்கள்வரை விட்டு முகர்ந்துபார்க்கக் கொடுப்பதும் உண்டு. இதனால் சுவாசக் குழாயில் உள்ள பிரச்னை நீங்கும். மேலும், இந்தக் கொரோனா காலத்தில் மனரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நறுமண சிகிச்சை மனதுக்கும் புத்துணர்வு தரும்'' என்கிறார் வெங்கடேஸ்வரன்.

அடுத்த கட்டுரைக்கு