Published:Updated:

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் `காய்ச்சல் வார்டு'... ஒரு விசிட்!

காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளைத் தீவிரமாக கண்காணிப்பதற்காகவே தனியாக `காய்ச்சல் வார்டு’ ஏற்படுத்தி, தனி மருத்துவர்கள், செவிலியர்களையும் நியமித்துள்ளோம்.

Child hospital
Child hospital

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாள்களாக மழையும் வெயிலும் மாறி மாறி வருகின்றன. இந்தப் பருவநிலை மாற்றத்தால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Dengu
Dengu
pixabay

தற்போது காய்ச்சலின் தாக்கம் எந்தளவிற்கு உள்ளது; ஒரு நாளைக்கு எத்தனை குழந்தைகள் காய்ச்சலின் காரணமாக அனுமதிக்கப்படுகிறார்கள்; அவர்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பவற்றை அறிய, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் கே.ஜெயச்சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.

``மழைபெய்ய ஆரம்பித்தாலே கொசு உற்பத்தி அதிகமாகிவிடும். கொசுவால் ஏற்படக்கூடிய நோய்களும் தொற்றுகளும் அதிகரிக்கும். அந்தவகையில் தற்போது மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு 70 - 80 குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். தற்போது அது 100 - 120 ஆக அதிகரித்துள்ளது. இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 - 25 ஆக இருக்கிறது. இந்தக் குழந்தைகளில் பரிசோதனையின்போது கண்டறியப்படும் டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 8 - 10 ஆக(ஓரிரு வாரங்களில்) உள்ளது.

Child
Child
pixabay

வெளி நோயாளிகள் பிரிவில் நாளொன்றுக்கு 1,200 - 1,500 குழந்தைகள்(அனைத்துவிதமான நோய்களுக்கும்) வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 100 - 120 குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, காட்டுப்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் காய்ச்சலுடன் வரும் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்” என்றவரிடம் ``காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ற எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்களா?’’ என்று கேட்டோம்.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைத் தடுப்பதற்காக பொது சுகாதாரத்துறை விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. பொதுமக்களும் அவர்களோடு கைகோத்து தங்களைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொண்டாலே காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்!
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் கே.ஜெயச்சந்திரன்

``குழந்தைகள் நல மருத்துவமனையைப் பொறுத்தவரை தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளைத் தீவிரமாக கண்காணிப்பதற்காகவே தனியாக `காய்ச்சல் வார்டு’ ஏற்படுத்தி, தனி மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமித்துள்ளோம். காய்ச்சலைக் கண்டறிந்து தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்களையும் வைத்துள்ளோம். மேலும் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் தேவைப்பட்டால் அரசிடம் கேட்டுப் பெறுவோம். ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லை.

ICH  Director K.Jeyachandiran
ICH Director K.Jeyachandiran

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைத் தடுப்பதற்காக பொது சுகாதாரத்துறை, விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. பொதுமக்களும் அவர்களோடு கைகோத்து தங்களைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொண்டாலே காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்” என்றார் உறுதியாக.