Published:Updated:

‘கொரோனா வைரஸை அழிக்க வீதிகளில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் பயனில்லை!’ - உலக சுகாதார நிறுவனம்

கிருமிநாசினி
கிருமிநாசினி

கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக மக்களை அச்சத்தின் விளிம்பில் நிறுத்தியிருக்கும் நிகழ் நூற்றாண்டின் பெருந்தொற்றாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகளின் அரசாங்கங்கள் வைரஸ் பரவலின் தாக்கத்தைக் குறைக்கப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகக் கையாண்டு வருகின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெரும்பாலான நாடுகளின் வீதிகளில் பல கோடி ரூபாய் செலவில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, உலக நாடுகளின் இந்தப் பயனற்ற செயலால் வைரஸை அழிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதோடு, பலவித சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

கிருமிநாசினி
கிருமிநாசினி

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தெருக்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளிப்பது அல்லது அவற்றைக்கொண்டு மேற்பரப்புகளைச் சுத்தம் செய்வது, கோவிட்-19 கொரோனா வைரஸ் அல்லது பிற நோய்க் கிருமிகளைக் கொல்ல பரிந்துரைக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், அழுக்கு மற்றும் குப்பைகளில் கிருமிநாசினிகளைத் தெளிக்கும் போது அவை செயலிழப்பதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் தெருக்களிலும், சாலையோரங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வரும் நிலையில், கோவிட்-19 கொரோனா வைரஸின் தேக்கமாக அவ்விடங்கள் விளங்கவில்லை என்பதால், கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தனிநபர்கள் மீது கிருமிநாசினிகள் தெளிப்பதை உலக சுகாதார மையம் எந்தச் சூழலிலும் பரிந்துரைக்கவில்லை. அவ்வாறு தனிநபரின் மீது தெளிக்கும் போது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கிருமிநாசினிகள் மனிதர்கள் மீது தெளிக்கப்படும் போது அவற்றில் உள்ள குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கண் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, மூச்சுக்குழாய் அழற்சி, இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், அந்நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பின், அவரது நீர்த் திவலைகள் மூலம் வைரஸ் பரவக் கூடிய திறன் குறையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

கிருமிநாசி
கிருமிநாசி

உட்புற இடைவெளிகளிலும், மேற்பரப்புகளிலும் வைரஸ் இருப்பின் அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிருமிநாசினிகளைத் தெளிப்பது பயனற்றதாகி விடுகிறது என உலக சுகாதார அமைப்பு ஓர் ஆய்வினை மேற்கோள்காட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டுமானால், நேரடியாகத் தெளிக்காமல் துணியில் நனைத்துப் பயன்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 கொரோனா வைரஸ் மேற்பரப்புகள் மற்றும் பொருள்களின் மீது படிந்து கொள்ளும் என்ற கூற்று நம்மிடையே நிலவி வந்தாலும், அவை ஆய்வக ஆராய்ச்சி ரீதியில் நிரூபணமானவையே தவிர, வெளி உலகில் அவை நிரூபிக்கப்படவில்லை. கோட்பாட்டு ரீதியாக சில பொருள்களின் மீது குறிப்பிட்ட காலம் வரை வைரஸ் தங்கியிருக்கலாம் என்றாலும் கூட, அவற்றின் காலம் ஆராய்ச்சி ரீதியில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு