Published:Updated:

`ஆறாம் மாதத்தில் பிரசவம்; 340 கிராம் எடை; குடலில் துளை!' - உயிர்பிழைத்த அதிசயக் குழந்தை

பிறந்த ஆறு மாதங்கள்வரை அந்தக் குழந்தை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளது.

டந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டனில் கிம் பிரவுன் என்ற பெண்ணுக்கு சுமார் 340 கிராம் எடையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரவுன் கருத்தரித்த 24 வாரங்களிலேயே அதாவது ஆறாவது மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை அவரின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் எடுத்துவிட்டனர்.

குழந்தையுடன் ரியான் எவன்ஸ்
குழந்தையுடன் ரியான் எவன்ஸ்

ரியான் எவன்ஸ் - கிம் பிரவுன் என்ற தம்பதியர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதியில் பிரவுன் கருத்தரித்துள்ளார். கர்ப்பப் பரிசோதனையில் அவருக்கு "ப்ரீ-எக்லம்ப்ஸியா" என்ற குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. "ப்ரீ-எக்லம்ப்ஸியா" என்பது பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம். இது தாய்-சேய் இருவரையும் பாதிக்கும் என்பதால் வாரந்தோறும் பிரவுனுக்குத் தவறாமல் மருத்துவப் பரிசோதனை நடந்திருக்கிறது.

வழக்கம் போல 21-வது வாரப் பரிசோதனைக்கு பிரவுன் சென்ற போது, அவரின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டது. இதயத் துடிப்பும் குறையத் தொடங்கியிருக்கிறது. `இனி வயிற்றில் குழந்தை உயிருடன் இருந்தாலும் வளர வாய்ப்பில்லை' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வயிற்றில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்க பிரவுனின் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

குழந்தையின் கை
குழந்தையின் கை

சரியாக பிரவுன் கருத்தரித்த 24-வது வாரத்தில் அதாவது 6-வது மாதத்தில் அவரின் வயிற்றில் இருந்த 340 கிராம் மட்டுமே எடையுள்ள பெண் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர். ஆனால் அந்தக் குழந்தை பிழைப்பதற்கு ஐந்து சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

`டெஸ்ட் ரிசல்ட் வந்தால்தான் போர்டிங் பாஸ்!'- விமானத்தில் பெண்ணுக்கு நடந்த கட்டாய கர்ப்ப பரிசோதனை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறந்த ஆறு மாதங்கள்வரை அந்தக் குழந்தை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிறந்து மூன்றே வாரங்களில் மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் குடலில் ஒரு துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர். மூன்று மாதங்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் அதன் கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு `இசபெல்லா' என்று பெயர் சூட்டியுள்ள ரியான் எவன்ஸ் - கிம் பிரவுன் தம்பதியர் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையிலிருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது ஐந்து கிலோ உடல் எடையுடன் ஆரோக்கியமாக இருக்கும் இசபெல்லா உயிர் வாழக் கடந்து வந்த போராட்டங்கள் ஏராளம்.

குழந்தையுடன் ரியான் எவன்ஸ் - கிம் பிரவுன் தம்பதியர்
குழந்தையுடன் ரியான் எவன்ஸ் - கிம் பிரவுன் தம்பதியர்

இது பற்றி அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் கூறும்போது, `இசபெல்லா பிழைப்பதற்கு ஐந்து சதவிதம் மட்டுமே வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியதும் நாங்கள் நம்பிக்கை முழுவதையும் இழந்துவிட்டோம். ஆனால், எங்கள் குழந்தை ஒரு சிறிய போராளி. அவள் தன் போராட்டங்கள் அனைத்தையும் தாண்டி வந்துவிட்டாள்" என்று உணர்ச்சி ததும்பக் கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு