Published:Updated:

`புகைப்பழக்கத்திற்கும் கொரோனாவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?' - சர்ச்சைக்குள்ளான மோசடி ஆய்வு

`என்ன, புகைப்பதால் கொரோனா வருவதைத் தடுக்க முடியுமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று உலக மக்கள் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

`புகை புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் குடிக்கும்’ என்று விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்வது ஒருபுறம் இருக்க, சங்கிலித்தொடர் போல புகைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் 23% குறைவாக இருப்பதாக சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாசம் குறித்த கட்டுரைகளை எழுதும் ஐரோப்பிய இதழ் ஒன்று (European Respiratory Journal) இந்த ஆய்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த முடிவுகள் வெளிவந்த அதே வேகத்தில் அந்த இதழால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Smoking
Smoking
Photo by Basil MK from Pexels

`என்ன, புகைப்பதால் கொரோனா வருவதைத் தடுக்க முடியுமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று உலக மக்கள் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஏற்கெனவே உலக மக்களில் பலர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை நாசமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்று வரும் பொறுப்பற்ற ஆய்வு முடிவுகள் மக்களை புகை என்னும் புதைகுழியில் மொத்தமாக விழவைத்துவிடாதா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இந்த ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் இருவரும், புகையிலை நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், தங்களது தனிப்பட்ட லாபத்துக்காக இதுபோன்ற முடிவுகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஜோஸ் எம்.மையர். இவர் புகையிலை தயாரிப்புத் தொழிற்சாலையில் அதிகத் தீங்கு விளைவிக்காத புகையிலையை(?) தயாரிக்கும் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கும் கன்சல்ட்டன்ட்டாகப் பணிபுரிகிறார்.

புகைப்பழக்கம்
புகைப்பழக்கம்

இந்த ஆய்வில் ஈடுபட்ட கொன்ஸ்ட்டான்ட்டினஸ் பவுலஸ் என்கிற மற்றொரு அராய்ச்சியாளர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த `நோ ஸ்மோக்' என்கிற தன்னார்வு அறிவியல் கண்டுபிடிப்பு மையத்தின் முதன்மைப் புலனாய்வாளராகப் பணியில் உள்ளார். இந்த மையம் இயங்குவதற்கே புகையிலை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றுதான் நிதியுதவி செய்துவருகிறது என்பது கசப்பான ஓர் உண்மை.

இவர்கள் இருவருமே புகையிலை நிறுவனங்களுடன் பணியாற்றும் தகவல்கள் வெளியானதும், இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதைத் தொடர்ந்து இது தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டது.

எதை நோக்கிச் செல்கிறது இந்த உலகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு