சிறு வயதிலும், இளமைப் பருவத்திலும் உடல் பருமன் தவிர்த்து எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, பிற்காலத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் தவிர்ப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு காரணமும் இன்றி ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்ததோடு, சராசரி விந்தணு எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில், விரையின் அளவானது (Testicular volume), விந்தணுவின் எண்ணிக்கையோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதிய எண்டோக்ரைன் சொசைடிஸ் (Endocrine Society) ஆராய்ச்சியாளர்கள்,150 கிலோ உடல் எடையுள்ள 53 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுள்ளவர்களை இந்த சோதனைக்கு ஈடுபடுத்தினர்.
சோதனையின் முடிவுகளை, 61 ஒத்த வயதுள்ள ஆரோக்கியமான சிறுவர்கள் மற்றும் பதின்ம நபர்களோடு ஒப்பிட்டனர். அதில், சாதாரணமான உடல் எடையோடு உள்ளவர்களுக்கு, இன்சுலின் அளவு சரியாக சுரப்பதோடு விரையின் அளவு ஆரோக்கியமாக இருப்பதாகவும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இன்சுலின் அதிக அளவில் சுரப்பதோடு, விரையின் அளவு குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

எனவே, `சிறு வயதிலும், இளமைப் பருவத்திலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, பிற்காலத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கும்’ என, இந்த ஆய்வை மேற்கொண்ட இத்தாலியில் உள்ள கடானியா (Catania) பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குநரும், முன்னணி ஆராய்ச்சியாளருமான ரோசெல்லா கன்னரெல்லா (Rossella Cannarella) தெரிவித்துள்ளார். அட்லாண்டாவில் நடைபெற்ற வருடாந்தர விழாவில், எண்டோக்ரைன் சொசைடிஸ் (Endocrine Society’s) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.