Published:Updated:

15 கேள்விகள்... 3 சுய பரிசோதனைகள்... முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ஆலோசனைகள்!

முதுமைக்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகளும் சுற்றுச்சூழல் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Falls prevention day
Falls prevention day ( Pixabay )

`உட்கார்ந்தால் எழுவதற்கும் எழுந்தால் உட்காருவதற்கும் இடுப்போடு நான் இன்னொரு உடன்படிக்கை செய்ய வேண்டியிருக்கிறது' - கவிஞர் சேவியர் என்பவர் எழுதிய இந்தக் கவிதை முதுமையில் வரும் பிரச்னைகள் பற்றிச் சொல்கிறது.

Elders
Elders
Pixabay

முதுமைப் பருவத்தில் ஒருவர் தடுக்கி கீழே விழாதவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஏதோ காரணத்தால் கீழே விழ நேர்ந்தால் அதன்பிறகான வாழ்க்கை மிகுந்த துன்பத்தைத் தரும். தள்ளாமையால் விழுதல் தடுப்பு விழிப்புணர்வு தினமாக (Falls Prevention Awareness Day) அனுசரிக்கப்படும் நாளில் முதியோர் தள்ளாமையால் கீழே விழுவதைத் தடுத்து நலமாக வாழ, சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

முதுமையில் தடுக்கி கீழே விழாமல் தற்காத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார். ``குழந்தை விளையாடும்போது கீழே விழுந்தால் வீறிட்டு அழும்; அங்கே யாராவது இருக்கிறார்களா என்று ஒருவித ஏக்கத்துடன் பார்க்கும். ஒருவேளை யாராவது இருந்தால் குழந்தையின் அழுகை அதிகரிக்கும். யாரும் இல்லாவிட்டால் எழுந்து மீண்டும் நடைபோடத் தொடங்கிவிடும். ஆனால், பெரியவர்கள் கீழே விழுந்தால் அவர்களுக்கு அவர்கள் மட்டுமே ஆறுதல்.

Falls prevention
Falls prevention
Pixabay

அப்படி கீழே விழுவதால் ரத்தக்கசிவோ, கைகால் எலும்புகளில் முறிவோ ஏற்படலாம். இதனால் சிலர் கோமா நிலைக்குப் போகலாம். சிலரது உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு தடவை கீழே விழுந்தவர்களுக்கு, நாம் மீண்டும் விழுந்துவிடுவோமா என்ற பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் அவர்களிடம் பதற்றம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிடுவார்கள்.

முதுமைக் காலத்தில் `இம்பேலன்ஸ்' விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நரம்புகள், மூட்டுகளில் நடக்கும் செயல்பாடுகள் தண்டுவடம் மூலம் மூளையைச் சென்றடையும். அதேபோல் கண், உட்காதின் செயல்பாடுகள் நரம்புகள் வழியாக மூளையைச் சென்று சேரும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சீராக இருக்கும்போது எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால், இந்தச் செயல்பாட்டின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சமநிலை பாதிக்கப்படும்.

குளியலறை மற்றும் உயரமான இடங்களில் கைப்பிடி இல்லாமலிருந்தாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. இதேபோல் பேசிக்கொண்டே நடப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட செய்கைகளைச் செய்வது, ரிங்டோன் கேட்டதும் அவசரமாக போனை எடுப்பது போன்றவற்றாலும் கீழே விழ நேரிடும்.
முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்

முதுமைக்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகளும் சுற்றுச்சூழல் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடு, எலும்புத் தேய்மானம், கழுத்து எலும்புத் தேய்மானம், மறதி நோய், பக்கவாதம், ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், கைகால் நரம்பு பாதிப்பு, மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

அதேபோல் வழவழப்பான, ஈரப்பதம் நிறைந்த தரைகள் மற்றும் மேடு, பள்ளம் நிறைந்த, உயரம் அதிகமான இடங்களில் நடக்கும்போது கீழே விழ வாய்ப்புள்ளது. மங்கலான வெளிச்சத்தில் நடக்கும்போதும் தேவையற்ற பொருள்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் இடையூறு ஏற்படுத்துவதால் கீழே விழுவார்கள். குளியலறை மற்றும் உயரமான இடங்களில் கைப்பிடி இல்லாமலிருந்தாலும் கீழே விழ வாய்ப்புள்ளது. இதேபோல் பேசிக்கொண்டே நடப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட செய்கைகளைச் செய்வது, ரிங்டோன் கேட்டதும் அவசரமாக போனை எடுப்பதாலும் கீழே விழ நேரிடும்.

Dr.V.S.Natarajan
Dr.V.S.Natarajan

முதியோர் கீழே விழாமல் தடுக்கச் சில பரிசோதனைகளை சுயமாகச் செய்து பார்க்க வேண்டியது அவசியம். முதலில் `ராம்பெர்க் டெஸ்ட்' (Romberg Test). இந்தப் பரிசோதனையின்போது ஒருவர் துணையுடன் இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைத்து, கண்கள் மூடியபடி நேராக நிற்க வேண்டும். சில விநாடிகள் கழித்து கண்களைத் திறந்து பார்த்து மீண்டும் கண்களை மூட வேண்டும். அப்போது தடுமாற்றம் ஏற்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தது `டேன்டெம் வாக்' (Tandem Walk). ஒரு நேர்க்கோட்டில் அடி மேல் அடி வைத்து நடக்க வேண்டும். அப்போது 10 அடி தூரத்தைத் தள்ளாடாமல் கடந்தால் அவருக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று பொருள். மூன்றாவது `Get up and Go' எனப்படும் எழுந்து நடக்கும் பரிசோதனை. முதலில் கைப்பிடி உள்ள நாற்காலியில் உட்கார வேண்டும். `Go' என்று சொன்னதும் 10 அடி தூரம் நேர்க்கோட்டில் தள்ளாடாமல் சென்று திரும்பிவந்து அதே இருக்கையில் அமர வேண்டும். இந்தப் பயிற்சியை 10 விநாடிகளுக்குள் செய்ய வேண்டும். நேரம் அதிகமானால் அவர் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Elders
Elders
Pixabay

யாரெல்லாம் கீழே விழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு ஒரு வினா விடையை அவர்களாகவே நடத்திக்கொள்ள வேண்டும்.

* ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறதா?

* அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறதா?

* மறதி நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

* பார்வைக் குறைபாடு உள்ளதா?

* காது கேட்கும் திறன் குறைவாக இருக்கிறதா?

* அதிக எண்ணிக்கையில் மாத்திரை எடுத்துக் கொள்பவரா?

* ஒரு வருடத்துக்கு முன்பாக கீழே விழுந்திருக்கிறீர்களா?

* முழங்கால், மூட்டுவலி, கழுத்துத் தேய்மானம் உள்ளவரா?

* தினம் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா?

* காலணியை மாற்றி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறதா?

* பாதத்தில் தொடு உணர்ச்சி குறைவாக உள்ளதா?

* கைத்தடி, வாக்கர் பயன்படுத்துகிறீர்களா?

* உங்கள் வீட்டில் போதிய வெளிச்சம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா அல்லது யாராவது சொல்லியிருக்கிறார்களா?

* குளியலறை வழவழப்பாக உள்ளதா?

* வீட்டில் உள்ள படிக்கட்டுகள் உயரமாக உள்ளனவா?

ELders
ELders
Pixabay

இவற்றில் பல கேள்விகளுக்கு `ஆம்' என்பது பதிலாக இருந்தால், அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் சிலவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நோய் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை எடுத்து நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கண் மற்றும் காது பிரச்னைகளை உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் அவற்றைக் குறைக்க சாத்தியம் உள்ளதா என்பதை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான காலணிகளை உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். `நடந்தால் நாடும் உறவாகும்; படுத்தால் பாயும் பகையாகும்' என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் முதுமையில் கீழே விழுவதைத் தடுக்கலாம்'' என்கிறார் டாக்டர் நடராஜன்.

Vikatan