Published:Updated:

கொரோனா கால தற்கொலைகள்... காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்!

Coronavirus
Coronavirus

கொரோனாவால் க்வாரன்டீனில் இருப்பவர்கள், வீட்டுக்குள் இருந்தபடியே வாழ்வதற்கான உதவியைச் செய்ய வேண்டியது சுற்றத்தாரின் கடமை. அது கிடைக்காதபட்சத்தில் சிலர் தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எங்கோ, யாருக்கோ என்று கேள்விப்பட்டுக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, இப்போது நம்மை நேரடியாக நெருங்க ஆரம்பித்திருக்கிறது. நோய்த்தாக்க அச்சம், லாக்டெளன் காரணமாக உறவுகளைப் பார்க்க முடியாத சூழல், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், மற்றவர்கள் படுகிற துன்பங்களைப் பார்ப்பதால் வருகிற மன அழுத்தம், வேலையிழப்பு காரணமாகக் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் என, இந்த நூற்றாண்டில் முதன்முறையாக உலகமே இப்படியான துன்பனுவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு காரணத்தால், ஒரு சிலர் தற்கொலை முடிவுவரை சென்றுவிடுவது துயரம்.

மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்
மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்

லாக்டௌன் நேரத்தில் தற்கொலைக்குத் தள்ளும் நெகட்டிவ் எண்ணங்களை எப்படித் தவிர்ப்பது, தற்கொலை எண்ணங்கள் மேலெழும்புவதற்கான அறிகுறிகள், மனநல மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியதன் முக்கியத்துவம், மன அழுத்தத்துக்கும் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும் உள்ள தொடர்பு காரணமாகத் தேவைப்படும் மாத்திரைகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.

கொரோனா நமக்கும் வந்துவிடுமோ என்ற பயம்...

'பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா வந்துவிட்டது. அடுத்து நமக்கு வந்துவிடுமோ' என்ற பயம். 'வந்துவிட்டால் நம் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்' என்ற பாசத்தவிப்பு, 'கொரோனா வந்துவிட்டால் மற்றவர்கள் கேலிசெய்வார்களோ, புறக்கணிப்பார்களோ' என்ற அச்சம்... இதுபோன்ற சூழ்நிலைகளின் அழுத்தம் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அளவுக்குச் செல்ல, சிலர் தற்கொலை முடிவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

corona fear
corona fear
pixabay

உதவி கிடைக்காததால்...

கொரோனாவால் க்வாரன்டீனில் இருப்பவர்கள், லாக்டௌனால் தொடர்பு அறுபட்டவர்கள், வீட்டுக்குள் இருந்தபடியே வாழ்வதற்கான உதவியைச் செய்ய வேண்டியது சுற்றத்தாரின் கடமை. அது கிடைக்காதபட்சத்தில் சிலர் தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். 60 வயதுப் பெண்மணி அவர். டாக்டர், இன்ஜினீயர் பிள்ளைகள் எல்லாம் எங்கெங்கோ இருக்க, தன் பெரிய வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். லாக்டௌனால் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளுக்கு வந்துகொண்டிருந்தவர்களால் வர இயலவில்லை. உடல்நிலை சரியில்லாமல்போன அவரால், தனக்கான உணவைத் தயாரிக்க இயலவில்லை. இத்தனை பிள்ளைகள் இருந்தும், இவ்வளவு சொத்து இருந்தும், பசிக்குச் சாப்பிட சாப்பாடில்லாமல் கிடந்த மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றுவிட்டார்.

போதைப் பழக்கத்தை விடமுடியாமல்...

மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் அவை கிடைக்காதபட்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

domestic violence
domestic violence
pixabay

குடும்ப வன்முறைகள்...

லாக்டெளன் காரணமாகத் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்கிற கணவன், மனைவியிடையே வாய்த் தகராறு ஆரம்பித்து, அது குடும்ப வன்முறையாக மாற ஆரம்பித்துவிட்டது. உடல்ரீதியான வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

மனம்விட்டுப் பேச முடியாததால்...

தன் வீட்டுப் பிரச்னையை நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து மன அழுத்தத்தில் இருந்து மீள்கிற வழக்கம் நம் குடும்பங்களில் இயல்பாக நடக்கிற ஒன்று. இதைத் தற்போது செய்யவே முடியாத நிலை. போனில் முழுமையாகப் பகிர முடியாது. அப்படியே பகிர்ந்துகொண்டாலும் அதுவே குடும்பத்தில் இன்னமும் பிரச்னைகளை அதிகப்படுத்துவது என பல நெகட்டிவ் விஷயங்களின் மன அழுத்தமும் ஒன்று சேர்ந்துகொண்டு `சாவதே மேல்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

financial problem
financial problem
pixabay

கடன்களும் பொருளாதாரச் சிக்கலும்...

'வேலையையும் சம்பளத்தையும் நம்பி வாங்கிய லோன்களுக்கு இஎம்ஐ-யையும், கடன்களுக்கான வட்டியையும் எப்படிக் கட்டுவது, பேங்கிலிருந்து ஆள்கள் வந்துவிட்டால் என்ன பதில் சொல்வது, மானம் போய்விடுமே...' - இந்த அச்சங்களின் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

எதிர்காலத்தில் குழப்பம்...

அடுத்து என்ன படிக்க வேண்டும், எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும், என்னவாக வேண்டும் என்பதில் கனவுகளுடன் இருந்த மாணவர்கள், அதை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பது தெரியாமல் டிப்ரஷனில் விழுகிறார்கள். இதில் சில பிள்ளைகள் தற்கொலை முயற்சிவரை செல்கிறார்கள் என்பதை மனநல மருத்துவர்கள் எங்கள் கள அனுபவத்தில் பார்த்துவருகிறோம். கவனம் பெற்றோரே.

old age
old age
pixabay

மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால்...

பொருளாதார உதவி முதல் தங்களைக் கவனித்துக்கொள்வதுவரை மற்றவர்களைச் சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிலருக்கு, இந்த லாக்டௌனில் அந்த உதவிகள் தடைப்பட்டுவிடுகின்றன. அதைக் கேட்டுப் பெற முடியாத விரக்தியிலும், மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கும் இந்த வாழ்வு பிடிக்காமலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

தற்கொலைக்கான அறிகுறிகள்...

* ‘நான் வாழறதே வேஸ்ட்’ என்பது போன்ற வார்த்தைகளில், தங்களின் தற்கொலை எண்ணத்தை நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

* அதுவரை பிடித்த உணவு, இசை போன்றவற்றை திடீரென பிடிக்கவில்லை என்பார்கள்.

* தூக்கம் வராமல் தவிப்பார்கள்.

* தனக்குப் பிடித்தமான, விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

* மத்திம வயதில் இருப்பவர்கள் திடீரென உயில் எழுதுவார்கள்.

suicide
suicide
pixabay
சோஷியல் டிஸ்டன்சிங் & பிசிக்கல் டிஸ்டன்சிங்... என்ன வித்தியாசம், எது அவசியம்? மருத்துவர் விளக்கம்!

நெருக்கமானவர்களுக்குத் தீவிர மன அழுத்தம் இருந்தால்... நாம் செய்யக்கூடாதவை என்னென்ன ?

ஒருவர் தீவிர மன அழுத்தத்தில் தன் பிரச்னைகளைக் கூறும்போது, ‘உனக்குக் கீழே இருப்பவர்களைப் பார், உன் பிரச்னை எல்லாம் பெரிதல்ல’ என்று தத்துவம் பேசுவது கூடாது.

ஒருவர் எப்போதும் குழப்பமான மனநிலையிலும், துயரமான சொற்களுடனும் இருந்தால், `அவன் இப்படித்தான் சும்மா எதையாவது உளறுவான்’ என்று கண்டுகொள்ளாமல் இருப்பதும் கூடாது.

மனநல மருத்துவரின் கவுன்சலிங் தேவைப்படும் ஒருவருக்கு, அவர் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாமல், நீங்களே பேசி அவரைச் சரிசெய்துவிட முடியும் என்று எண்ணுவது தவறு. முறையான உளவியல் கவுன்சலிங் அவருக்குத் தரப்பட வேண்டும்.

தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* தற்கொலைக்கான எண்ணம் வருகிறது என்றால், நெருக்கமானவர்களிடம் இது குறித்துத் தெரிவித்துவிடுங்கள்.

* நெருக்கமானவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் தற்கொலை எண்ணம் வந்தால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அல்லது ஓரளவுக்குப் பழக்கமானவர்களிடம் உதவி கேட்கலாம்.

* மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மனநல மருத்துவரை நாட வேண்டும்.

* கொரோனா காரணமாகத் தற்கொலை எண்ணம் வருகிறது என்றால், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கொரோனா வந்துவிட்டால் சிகிச்சையெடுத்துக்கொள்வதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர, சிகிச்சை குறித்த அச்சமோ, மற்றவர்கள் தங்களைப் புறக்கணிப்பார்களோ என்ற மனக்குழப்பமோ கூடாது.

hormone and suicide
hormone and suicide
pixabay
மாஸ்க் அவசியம்... எந்த மாஸ்க் சரி... கிளவுஸ் தேவையா..? சந்தேகங்களுக்கு மருத்துவ விளக்கம்

உடலில் சுரக்கிற ஹார்மோன்களுக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ?

இருக்கிறது. மூளையில் இருக்கிற செரட்டோனின் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் சிலருக்குத் தற்கொலை எண்ணம் தலைதூக்கலாம். சில குடும்பங்களில் தற்கொலை அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், மரபு. இதை பயோ சைக்கோ சோஷியல் (Biopsychosocial) பிரச்னை என்று சொல்வோம்.

தற்கொலையும் மருத்துவமும்...

தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு கவுன்சலிங் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், அடிக்கடி தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு மருந்துகளும் தேவைப்படும்.

அடுத்த கட்டுரைக்கு