Published:Updated:

சாக்ரடீஸ், சேரமான் இரும்பொறை, கோப்பெருஞ்சோழன் - தற்கொலைகளின் வரலாறு சொல்லும் செய்தி!

தமிழர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள். அதனால்தான் கண்ணகி மதுரையை எரித்துவிட்டுத் தன்னையும் அழித்துக்கொண்டாள். கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் காணா நட்பு நாம் அறிந்ததே.

suicide
suicide ( pixabay )

எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற கோஷம் ஓங்கி ஒலிங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 2,30,000 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், அத்தனை உயிர்களையும் நாம் நினைத்தால் காப்பாற்ற முடியும். தற்கொலைகள் குறித்து வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன.

சாக்ரடீஸ்
சாக்ரடீஸ்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் எஸ்.நம்பி வரலாற்றில் தற்கொலைகள் பற்றிப் பேசினார்.

``மனித வாழ்வில் இறப்பு என்பது ஒரு துன்பியல் நிகழ்வு. அதிலும் தற்கொலை என்பது அதன் உச்சம். தற்கொலை என்பது இன்று நேற்று உருவான பழக்கவழக்கம் இல்லை. அது பழம்பெரும் காலம்தொட்டே காணப்பட்டது. இன்று ஊடகங்கள் வாயிலாக அதுகுறித்துப் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

suicide
suicide
pixabay

கிரேக்க அறிஞரான சாக்ரடீஸ் அவருக்கு அளிக்கப்பட்டது விஷம் என்று தெரிந்தும் அதைக் குடித்தார். அப்படியென்றால் அது தற்கொலைதான். ரோம் நகரின் மார்க் ஆண்டனி, கிளியோபாட்ரா ஆகியோரும் தற்கொலையில் தங்களை மாய்த்துக்கொண்டவர்களே.

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

தமிழ்ச் சமுதாயத்திலும் இதுபோன்ற பல உதாரணங்களைக் கூறலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்திலும் தற்கொலை இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சேரமான் இரும்பொறை செங்கலன் என்ற சோழ மன்னனால் சிறைப்படுத்தப்படுகிறான். சிறையில் சேரமானுக்கு தாகம் எடுக்கவே சிறைக்காவலனிடம் தண்ணீர் கேட்கிறான். அவன் கொடுக்க மறுக்கிறான். பின்பு கடைசியாக ஒரு தகரக் குவளையில் கீழே கிடக்கும் தண்ணீரை எடுத்துக்கொடுக்கிறான். அதைக்கண்டு மனம்நொந்த சேரன் நீர் அருந்தாமல் இருந்து நான்கு நாள்களில் தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

மனநல மருத்துவர் எஸ்.நம்பி
மனநல மருத்துவர் எஸ்.நம்பி

தமிழர்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள். அதனால்தான் கண்ணகி மதுரையை எரித்துவிட்டுத் தன்னையும் அழித்துக்கொண்டாள். கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் காணா நட்பு நாம் அறிந்ததே. கோப்பெருஞ்சோழன் தன் மகன்களால் துரத்திவிடப்பட்டதை நினைத்து மனம் வருந்தி சமண மதக் கோட்பாட்டின்படி வடக்கிருந்தார். இதை அறிந்து பிசிராந்தையார் நேரில் வந்து சோழ மன்னனின் மனதை மாற்ற முயன்றும் முடியவில்லை. வடக்கிருந்து கோப்பெருஞ்சோழன் உயிரிழந்தார். தற்போது தீக்குளித்தல் கலாசாரம் நோய்போலப் பரவிக்கிடக்கிறது. காந்தி இறந்தது முதல் மொழி எதிர்ப்புப் போராட்டம்வரை அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீக்குளிப்பது என்பது ஓர் அரசியல் கலாசாரமாக உள்ளது. இந்தப் போக்கும் கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.