Published:Updated:

உடல்நலக் குறைபாடு இருந்தால் வர வேண்டாம்!- ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்

``உடல் நலக் குறைவுள்ள நபர்கள் யாரும், நீதிமன்றத்துக்கு வர வேண்டாம்" என அறிவித்ததுள்ளது உச்ச நீதிமன்றம்.

உலகெங்கும் கொரோனா பயம் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மெதுவாகப் பரவத்தொடங்கியுள்ளது. இதற்கான சமீபத்திய உதாரணமாக, கடந்த இரண்டு வாரங்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக நேற்றைய தினம் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில், மூன்று பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாகவும், இருவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், பன்றிக்காய்ச்சல் தடுப்புக்கான நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்

இந்த ஐவரோடு சேர்த்து, மேலும் ஒரு நீதிபதிக்கும் பாதிப்பு இருப்பதாக, நீதிபதி சந்திக்சௌத் கூறியுள்ளார். அறிக்கையில் எந்த இடத்திலும் நீதிபதிகள் பெயரேதும் குறிப்பிடப்படாததால், யாருக்கெல்லாம் பாதிப்பு உள்ளதென இதுவரையில் வெளிப்படையாகத் தெரியவரவில்லை. நேற்று விடுப்பிலிருந்த ஐந்து நீதிபதிகள் (பூபன்னா, ஹேமந்த் குப்தா, இந்திரா பானர்ஜி, நாகேஷ்வர் ராவ், அப்துல் நசீர்) ஆகியோருக்குத்தான் பாதிப்பு இருக்குமென யூகிக்கப்பட்டுவருகிறது.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பானது, தொற்றுபாதிப்பு என்பதால், நீதிமன்றத்தில் மேலும் மேலும் பாதிப்பு பரவுவதைத் தடுக்க, இந்தியாவின் தலைமை நீதிபதி அரவிந்த் பாப்டே தலைமையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மாஸ்க் அணிந்தபடி பங்குபெற்றது, அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி
நீதிபதி

கூட்டத்துக்குப் பிறகு, நீதிபதி அருண் மிஷ்ரா சார்பில் ``உடல் நலக் குறைவுள்ள நபர்கள் யாரும், நீதிமன்றத்துக்கு வர வேண்டாம்" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் யாவும் சுகாதாரத்துறை சார்பில் பார் கவுன்சில் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.

Vikatan

நீதிபதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்கும் வழக்கு விசாரணை இன்னும் சில தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு