Published:Updated:

கொரோனா இல்லை... ஆனால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது... ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்!

பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்

தமிழகத்தில் பரவும் பன்றிக்காய்ச்சல் - பதறவும் வேண்டாம், பயமும் வேண்டாம்!

கொரோனா பாதிப்புகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில், பிரச்னையின் தீவிரம் சீனாவைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா தொடங்கி தென்கொரியா வரை, உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் கொரோனா நோயாளி தற்போது ஒருவர்கூட இல்லை, பாதிக்கப்பட்டிருந்த மூவரும் பூரண குணம்பெற்றுவிட்டனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

கொரோனா
கொரோனா

இருப்பினும், இந்த நற்செய்தியை நம்மால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், இந்தியாவில் கொரோனாதான் இல்லையே தவிர, ஹெச்.1.என்.1. எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தற்போது மிகத் தீவிரமாகவே இருக்கிறது.

கடந்த ஜனவரியில் இந்தியாவில் பரவத்தொடங்கிய பன்றிக்காய்ச்சல், பிப்ரவரி 16 வரையிலான கணக்குப்படி இதுவரையில் 884 பேரை பாதித்துள்ளது. இடைப்பட்ட ஒன்றரை மாதக் காலத்தில் பன்றிக்காய்ச்சலால் 14 பேர் இறந்தும் உள்ளதாக நம் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல்
கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

அறிவிப்பைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், `கொரோனாவைத் தடுப்பதில் காட்டியதைப்போல, பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதிலும் நாம் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்' எனப் பேட்டியொன்றில் கடுமையாகக் கூறியிருந்தார்.

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் தமிழகத்தின் நிலை என்ன, பிரச்னையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இங்கு நோயாளிகளின் எண்ணிக்கை என்ன, இறப்பு ஏதும் உள்ளதா என்பன குறித்துப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி

"தற்போதைக்கு, தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் சார்பில் கொரோனாவுக்கான விழிப்புணர்வு தரப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலும், கொரோனாவை போன்றதொரு தொற்றுப் பிரச்னைதான் என்பதால், அதற்கெனத் தனியாக விழிப்புணர்வு ஏதும் தரப்படவில்லை.

இன்றைய தேதிக்கு, பன்றிக்காய்ச்சல் என்பது பருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் பாதிப்பு என்றாகிவிட்டதால், காய்ச்சலைக் குறைப்பதற்கான மாத்திரை இருப்பும் போதுமான அளவில் நம்மிடம் இருக்கிறது. இதுவரையில் தமிழகத்திலும் ஆங்காங்கே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உறுதிசெய்யப்பட்ட நபர்கள், மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். பதற்றம் அடையும் நிலையை நாம் எட்டவில்லை என்பதால், மக்கள் பயம்கொள்ளாமல் இருக்கலாம்.

நிலை எதுவாகினும், மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது மட்டுமே இப்போதைக்கு போதுமானதாக இருக்கும்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
பன்றிக்காய்ச்சல் அறிகுறி
பன்றிக்காய்ச்சல் அறிகுறி
``தடுப்பு மருந்துகள் உதவாது... பயணங்களைத் தவிர்த்திடுங்கள்!" - கொரோனாவுக்கு மருத்துவரின் அட்வைஸ்

காய்ச்சல், இருமல், வறண்ட தொண்டை, தீவிர உடல்வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தெரியவருபவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். தொற்றுப் பிரச்னையால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள்தாம். ஆகவே, இப்படியான பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தொற்றுப் பிரச்னைகளைப் பொறுத்தவரை, மற்றவர்களைவிட இவர்கள் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.

பன்றிக்காய்ச்சல் ஏற்படத்தொடங்கிய முதல் ஐந்து நாள்களுக்குள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பிரச்னையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பதால், அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் இருப்பது முக்கியம்" என்றார் அவர்.

தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியனிடம், தொற்றுப்பிரச்னைகளை எப்படி முன்கூட்டியே தவிர்ப்பது என்பது குறித்து கேட்டோம்.

தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்
தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்

"ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகை தொற்றுப்பிரச்னை பரவும். அந்த வகையில், இந்தப் பருவத்தில் பன்றிக்காய்ச்சலும், மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பிரச்னையும் தீவிரமாகப் பரவி வருகின்றன. தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு விதத்தில் பரவும் என்பதால், ஒவ்வொன்றின் தடுப்பு முறைகளும் மாறுபடும். ஆக, எந்தத் தடுப்பு முறையையும் பொதுப்படுத்த முடியாது.

வேண்டுமானால், `நம்மை நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது' மற்றும் `பருவநிலைக்கேற்ப தடுப்பூசி போட்டுக்கொள்வது' என இவை இரண்டையும் தொற்றுத் தடுப்புக்கான பொதுவான விஷயங்களாகக் குறிப்பிடலாம். ஏனெனில் சுய சுத்தத்தோடு இருந்தால், தொற்றுக்கிருமிகள் நம்மை நெருங்காது. அதோடு தடுப்பு மருந்தும் உடன் எடுத்துக்கொள்வோமாயின், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இயல்பாகவே நாம் பாதுகாக்கப்பட்டுவிடுவோம்.

தடுப்பூசி
தடுப்பூசி

இதில் தடுப்பூசியைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் `ஃப்ளூ வாக்சின்' என்ற தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயம். இந்த மருந்துகள் யாவும், 70 சதவிகிதம் பிரச்னையைத் தடுத்துவிடும் என்பதால், யாரும் இவற்றை தவிர்க்க வேண்டாம். முதியோர்கள் எனில் நிமோனியா, அக்கி, ஃப்ளூ போன்றவற்றுக்கும் குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துவ அறிவுரையோடு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ள விலங்குகளோடு நெருங்கிப் பழகாமல் இருப்பது, நன்கு சமைக்கப்பட்ட உணவை மட்டும் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, அசைவ உணவுகளை சேமித்து வைக்கும்போதும், சமைக்கும்போதும் சுத்தத்தோடும் சுகாதாரத்தோடும் இருப்பது போன்றவற்றையெல்லாம் கூடுதலாகப் பின்பற்றுவது நல்லது.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு
பன்றிக்காய்ச்சல் தடுப்பு

ஏற்கெனவே காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள், இருமல், தும்மலின்போது வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்வது, அடிக்கடி கைகளைக் கழுவது, பாதிப்புகளின்போது சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் இருப்பது, ஒருமுறைக்கு மேல் ஒரு டிஷ்யூ பேப்பரை உபயோகப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டியது அவசியம்" என்கிறார் அவர்.

மற்றவர்களைவிட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், முதியோர், வாழ்வியல் பிரச்னை இருப்பவர்கள் போன்றோருக்கு தொற்று வாய்ப்பு அதிகம். ஆகவே அவர்கள், சிறு உடல் உபாதையைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது
தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்
கடந்த பத்து வருடங்களில், இந்தியா மற்றும் தமிழக அளவில் பன்றிக்காய்ச்சல் எத்தனை பேரை பாதித்துள்ளது, பன்றிக்காய்ச்சலால் எவ்வளவு இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கான தரவுகள் இங்கே...
பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்
அடுத்த கட்டுரைக்கு