Published:Updated:

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத `எக்ஸ்' வகை மாத்திரைகள்! ஆய்வும் விளக்கமும்! #Alert

`சிசுவின் உடலுறுப்புகள் சார்ந்த வளர்ச்சி கருவில் முதல் மூன்று மாதத்தில்தான் அமையும் என்பதால், அந்த நேரத்தில் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைக் கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.’

#MustKnowFact
#MustKnowFact

பெண்களுக்கு, மற்ற காலங்களைவிடவும் கர்ப்ப காலத்தில்தான் அதிக கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் இருக்கும். குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும். ஆனால், "உணவு மீதான அறிவுரைகளைவிட மருந்து மற்றும் மாத்திரைகள் மீதான வரைமுறைகளில் பெண்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்" என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் தொடங்கி 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஐ.க்யூ மற்றும் ஞாபக சக்தியைப் பரிசோதித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் குழந்தைகளின் அம்மாக்களிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. இரண்டையும் இணைத்து வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகள் Paediatric and Perinatal Epidemiology என்ற மருத்துவ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் 18 முதல் 32 வது வாரம் வரையான கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் உட்கொள்பவர்களின் குழந்தைகளுக்கு, வளரும்போது நடத்தை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அதீத சுறுசுறுப்புடன் இயங்குவது (Hyperactivity) மற்றும் ஏ.டி.ஹெச்.டி எனப்படும் கவனிப்பு பற்றாக்குறை கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

ADHD
ADHD

பொதுவான காய்ச்சல் மாத்திரையான பாராசிட்டமால் உட்கொள்வதுகூட வயிற்றிலுள்ள சிசுவை பாதிக்கும் என்பது, கர்ப்பிணிகளுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

கர்ப்பக்காலத்தில் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது எந்த அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும், எந்த வகை மருந்துகளையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் மனுலெட்சுமியிடம் கேட்டோம்.

மகப்பேறு மருத்துவர் மனுலெட்சுமி
மகப்பேறு மருத்துவர் மனுலெட்சுமி

"சிசுவின் உடலுறுப்புகள் சார்ந்த வளர்ச்சி கருவில் முதல் மூன்று மாதத்தில்தான் அமையும் என்பதால், அந்த நேரத்தில் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைக் கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, சிசுவின் உடலுறுப்புகளின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

ஆனால் இந்த ஆய்வில், 18 முதல் 32 வார கர்ப்பக்காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு நடத்தை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, மருத்துவர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.

Vikatan
இருப்பினும், கர்ப்ப காலத்தில் மூன்று மாதத்துக்குப் பிறகு கர்ப்பிணிக்குக் காய்ச்சல் வந்தால், முதல்நாளில் மட்டும், ஓரிரு வேளை பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் பாராசிட்டமால் தவிர, வேறெந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவரை அணுகுவதே சரியானது.

மருந்து, மாத்திரைகளின் தன்மை, பக்கவிளைவுகள் ஆகியவற்றைக் கொண்டு அவை ஏ, பி, சி, டி, எக்ஸ் எனப் பிரிக்கப்படுகின்றன. அதில், `பி' வகையைச் சேர்ந்த மருந்துகள் மட்டுமே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானவை. அதேபோல `எக்ஸ்' வகை மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றவை. மருத்துவர்கள் அந்த வகை மருந்துகளைக் கர்ப்பிணிகளுக்கு எப்போதும் பரிந்துரைக்க மாட்டார்கள்.

Tablets
Tablets

வளர்ந்து வரும் மருத்துவச் சந்தையில், ஒவ்வொரு மருந்தும் 40 வேறுபட்ட அளவில் (Dosage) விற்பனையில் இருக்கின்றன. ஆனால், இவற்றில் ஒன்றிரண்டு மட்டும்தான் கர்ப்பக்காலத்துக்கு உகந்தது. சில மருந்துகள், `எக்ஸ்' வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அதனால் கர்ப்பிணிகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒவ்வொரு முறையும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தானாகச் சென்று மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.

மருத்துவரின் பரிந்துரையின்றி கடைகளில் மருந்துகளைக் எளிதில் பெற்றுவிடலாம் என்பதால்தான், அதைக் கைவிடுமாறு தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்.

நாள்பட்ட பிரச்னை இருப்பவர்கள் 'ப்ரீ ப்ரெக்னன்சி'யிலேயே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்
மகப்பேறு மருத்துவர்

நாள்பட்ட நோய் பாதிப்புகளான சர்க்கரைநோய், தைராய்டு, இதயப் பிரச்னைகள், ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவை இருப்பவர்கள், எல்லா காலமும் மருந்துகள் உட்கொண்டே ஆக வேண்டும். இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும்பட்சத்தில் வழக்கமாக எடுக்கும் மருந்துகளைக்கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும்.

பரு போன்ற சரும பிரச்னைகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் ஐசோட்ரக்ஸ் (IsoDrugs) என்ற வகையின்கீழ் வரும் மருந்துகளை, கர்ப்பக்காலத்தில் மட்டுமல்ல... கர்ப்பத்துக்குத் தயாராகும்போதே நிறுத்திவிட வேண்டும். காரணம், அவை சிசுவின் உடல் வளர்ச்சியைத் தீவிரமாகப் பாதிக்கும்.

'டெரடோஜெனிக்' என்ற வகையின் கீழ் வரும் மருந்துகளையும் ஸ்டீராய்டு வகைகளையும் கர்ப்பக்காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

Joint pain
Joint pain

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், மூட்டுவலி, ரத்த நாளங்களில் பிரச்னை இருப்பவர்கள் கர்ப்ப காலத்துக்கு முன்பே மருந்துகள் பயன்பாடு குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்" என்கிறார் அவர்.

`குழந்தை ஜனிக்கும்போது..!' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04