Published:Updated:

`பாராசிட்டமால் போட்டுட்டு தூங்குங்க..!' டெங்குவுக்கு சிகிச்சை சொன்ன முதல்வர்

Dengue
Dengue

`டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் 500 மி.கி பாராசிட்டமால் மாத்திரைக்குப் பதில் 650 மி.கி. மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.’

அரசியல்வாதிகளின் அலப்பறைகளைத் தனி சேனல் தொடங்கி ஒளிபரப்பலாம் என்ற அளவுக்கு நாள்தோறும் கன்டென்ட்டை அள்ளிக்கொடுக்கிறார்கள். தங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி போகிற போக்கில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பலரின் விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகிவிடுகின்றன. அதிலும் குறிப்பாக நோய்கள், மருத்துவம் பற்றி அரசியல்வாதிகளின் அரைகுறை பேச்சுகளையெல்லாம் தொகுத்து புத்தகமே போடலாம்.

Politicians
Politicians

பிரதமர் மோடி டிஸ்லெக்ஸியா குறித்து உளறியது முதல், `திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத்தளர்ச்சி வந்துவிடும்’ என்று சொன்ன நம்ம ஊர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரை மருத்துவம் தொடர்பாக தாறுமாறான கருத்துகளை மக்களிடையே தெரிவித்துவிடுகின்றனர். இதுபோன்ற பேச்சுகள் விமர்சனங்களுள்ளாவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் மத்தியில் தவறான புரிதலையும் ஏற்படுத்திவிடும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், இதுவரை 4,800 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- மாநில அரசு

இந்த வரிசையில் தற்போது 'ஹிட்' அடித்திருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் த்ரிவேந்திர சிங். பருவமழை வடஇந்தியாவில் கோர தாண்டவமாடியதால் பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சாதாரண காய்ச்சல் முதல் டெங்குவரை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. உத்தரகாண்ட் மாநிலமும் இதற்குத் தப்பவில்லை. இதுவரை 4,800 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங், டெங்குவை குணமாக்குவது தொடர்பாக முக்கியமான ஒரு செய்தியைத் தன் மாநில மக்களுக்கு வழங்கியுள்ளார். அவர் குறிப்பிட்டது இதுதான் -

`டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் 500 மி.கி பாராசிட்டமால் மாத்திரைக்குப் பதில் 650 மி.கி. மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். உடன், போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை முழுவதுமாகக் குணப்படுத்த இந்த இரண்டுமே போதுமானது.'

டெங்கு காய்ச்சலுக்கு ஒட்டுமொத்த மருத்துவ உலகமே தீர்வை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, இதழியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கும் த்ரிவேந்திர சிங் அதற்கான தீர்வைச் சொல்லியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Dengue
Dengue

இதே முதல்வர் சில நாள்களுக்கு முன்னர், 'பசுக்கள் ஆக்ஸிஜனை சுவாசத்தின் மூலம் வெளியேற்றும். அதனால் பசுக்களுக்கு மசாஜ் செய்தால் சுவாசப் பிரச்னைகள் குணமாகும். காசநோய் பிரச்னை இருப்பவர்கள் பசுக்கள் இருக்கும் பகுதியில் வாழ்ந்தால் நோய் முற்றிலும் குணமாகிவிடும்' என்று அதிர வைத்தார்.

டெங்குவுக்கு சிகிச்சை உண்டா?

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் டெங்கு என்ற நோய்க்கான சிகிச்சை என்ற தலைப்புக்குக் கீழ், `டெங்கு காய்ச்சலுக்கென்று எந்த பிரத்யேக சிகிச்சையும் இல்லை' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது
WHO on Dengue Treatment
WHO on Dengue Treatment

டெங்குவால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் மூட்டுவலியைக் குறைக்க பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று ஓய்வு, நீராகாரம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் த்ரிவேந்திர சிங் தெரிவித்துள்ளபடி, `மாத்திரையின் அளவில் செய்யப்படும் இப்படியான மாற்றங்கள், டெங்குவை குணப்படுத்த உதவுமா?' என்று பொது மருத்துவர் அர்ஷத் அகிலிடம் கேட்டோம்.

மருத்துவர் அர்ஷத் அகில்
மருத்துவர் அர்ஷத் அகில்

"மாத்திரைகளை,`அனைவருக்கும் இந்த அளவு' எனக்கூறி பொதுவாக வகைப்படுத்த முடியாது. நபருக்கேற்ப, அவரின் உடல் நலத்துக்கேற்ப, வயதுக்கேற்ப அளவுகள் மாறுபடும். உதாரணமாக குழந்தைகளுக்கு 250 மி.லி-தான் கொடுப்போம். அவர்கள் கூடுதலான அளவு எடுத்துக்கொண்டால் சிக்கல் அதிகமாகுமே தவிர குறையாது. பாராசிட்டமால் டெங்குவுக்கான தீர்வு எனச் சொல்வதும் தவறு. காரணம், டெங்கு ஏற்படுத்தும் மிகமுக்கியமான பிரச்னை என்பது ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது. தட்டணுக்களை அதிகரிக்க இதுவரையில் நம்மிடம் மாத்திரைகள் ஏதும் இல்லை. தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாவிட்டால் டெங்குவைச் சரிசெய்ய முடியாது. பாராசிட்டமாலால் தட்டணுக்களை அதிகப்படுத்த முடியாது.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஓர் அலெர்ட் #DoubtOfCommonMan
டெங்குவுக்குச் சில முக்கியமான அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக அதீத உடல் சோர்வு, உடல் உறுப்புகளில் ரத்தக்கசிவு, மிகத் தீவிரமான முதுகுவலி போன்றவை.

இவை ஒவ்வொன்றையும் சரிசெய்யும்பட்சத்தில், உடல் இயல்பு நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பும். தட்டணுக்கள் எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கும். அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்த பிறகும், தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லையென்றால், இறுதி நிலையாக செயற்கையாக அவை ஏற்றப்படும் (Platelet Transfusion).

அதிகபட்சம் இரு தினங்களுக்கு மேலும் காய்ச்சல் குறையவில்லை எனும்போது தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.
மருத்துவர்

தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் காய்ச்சலுக்கான மாத்திரைகள் மூலம் பிரச்னை சரிசெய்யப்படும். சிலருக்கு காய்ச்சல் குணமான பிறகும் கூட, அடுத்தடுத்த நாள்களில் ஏதேனுமொரு பக்கவிளைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கலாம். அவரவரின் உடல்நிலை, நோய் எதிர்ப்புத்திறனைப் பொறுத்துதான் இது அமையும். காய்ச்சல் குணமாகி குறைந்தபட்சம் 10 நாள்களாவது நோயாளி மருத்துவரிடம் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்துக் கடைகளில் தாங்களாகவே மாத்திரைகளின் பெயரைச் சொல்லி கேட்டு வாங்கி சிலர் உட்கொள்வர். மாத்திரையின் அளவைக்கூட கேட்டு வாங்கிப் பெறும் சிலரும் இருக்கின்றனர். காய்ச்சல் மாத்திரையில் பாராசிட்டமால் 650 உட்கொள்பவர்கள், அதிகபட்சம் இரு தினங்களுக்கு இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. அதற்கு மேலும் காய்ச்சல் குறையவில்லை எனும்போது தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். வலி நிவாரண மாத்திரைகள், காய்ச்சல் காலத்தில் ஏற்படும் பக்கவிளைவுகளை அதிகப்படுத்தும் என்பதால், அவற்றைச் சாப்பிடக் கூடாது.

Fever Tablets
Fever Tablets

தற்போதைய சூழலில், தமிழகத்தில் டெங்கு மட்டுமன்றி டைபாய்டு, மலேரியா போன்று நீர் வழியாகப் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவிவருகின்றன. தலைவலி, தலை பாரம், உடல்வலி, மூட்டுவலி, தசைவலி போன்றவை, இவை அனைத்துக்குமான முக்கியமான அறிகுறிகளாக இருக்கின்றன. இவை தெரியவரும்போது, இருதினங்களுக்குள் மருத்துவரை அணுகிவிடவும். சுயமருத்துவத்தைத் தவிர்த்துவிடுங்கள்" என்றார்.

பின் செல்ல