Published:Updated:

தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று! - காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை பிரிவு
தீவிர சிகிச்சை பிரிவு

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது.

சீனாவைத் தாக்கத் தொடங்கி இந்தியாவரை வந்துவிட்டது, கொரோனா! எல்லா நாடுகளிலும் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன. உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே கடுமையான அச்சம் நிலவி வருகிறது. எனினும், சீனாவில் கடந்த வாரங்களைவிட பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஐந்து நாள்களுக்குப் பிறகு, இறந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஐ தொட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலர் சஞ்சீவ குமார், ``ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர், இரானில் இருந்து லடாக் வந்த இரண்டு பேர் என மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க சோதனை மையங்கள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

தாஜ்மகாலை மூடச் சொன்னது முதல் பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு தற்காலிகத் தடை வரை...  கொரோனா அப்டேட்ஸ்!

தமிழர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் இவர்தான். 45 வயதாகும் இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தற்போது இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் கடைசியில்தான் சென்னையிலிருந்து ஓமனுக்குச் சென்றுள்ளார். மீண்டும் சென்னை திரும்பியவர் காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் மார்ச் 5-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

அங்கு அவரது மாதிரிகள் எடுத்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ரிசல்ட் இன்று வர அதில் வைரஸ் தொற்று பாசிட்டிவ் எனக் காட்ட கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 வயதுடைய அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு