Published:Updated:

``மருத்துவர்கள் தள்ளி நின்று சிகிச்சை அளிப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' - மரு. சுதா சேஷய்யன்

India Virus Outbreak
India Virus Outbreak ( AP / Dar Yasin )

முதலில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, பின்பு அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது. இவை அனைத்தையும்விட முக்கியம் மருத்துவர்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனா பாதிப்பு, அதைத் தாண்டி அதிகரிக்கும் பயம் மற்றும் பதற்றம்... நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா என்ற குழப்பத்துடனும் பீதியுடனும் நாள்களைக் கடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உலக அளவிலான கொரோனா தாக்குதலில் இந்தியாவின் நிலை என்ன... மக்களின் இந்த பயம் தேவைதானா... அடுத்து என்ன செய்ய வேண்டும்..? இப்படிப் பல சந்தேகங்களை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனிடம் கேட்டோம்.

corona
corona

``கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புது வைரஸ் SARS-COV-2, இந்த வைரஸ் தொற்றால் ஏற்பட்ட புது நோய் COVID - 2019. புதிய நோய் என்பதால் இதைப் பற்றி மருத்துவ உலகமே இப்போதுதான் புதிய தகவல்களைத் தெரிந்துவருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் வருகின்றன.

ஒரு நாடு பாதிக்கப்பட்ட விதத்திலேயே மற்ற நாடுகளும் பாதிப்படைய வேண்டிய அவசியமில்லை. சில நாடுகள் நோய் பாதிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே, பாதிப்பு எண்ணிக்கையில் உச்சத்தை அடைந்திருக்கலாம். அதே நிலைதான் நம் நாட்டுக்கும் என்று சொல்ல முடியாது.

கோவிட் 19 வைரஸின் இன்குபேஷன் காலம் 2 வாரங்கள் ஆகும். முதல்கட்ட அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாக வாய்ப்புள்ளது. பின்பு, இரண்டு மூன்று வாரங்கள் கழித்து அது குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் வைரஸ் கட்டுப்பாடு சிறப்பான முறையில் உள்ளது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் பாதிப்பு உள்ளவர்களையும், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுபவர்களையும் தனிமைப்படுத்துவதில் நாம் சிறப்பாகச் செயல்படுவதால் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு நமக்கு பாதிப்பு ஏற்படாது.

COVID-19
COVID-19

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்துக்கும் நோயை எதிர்கொள்வதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டு, தேவையான மருத்துவ உபகரணங்கள் என நோயை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளது.

`கொரோனாவைத் தீவிரப்படுத்தும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள்!'- எச்சரிக்கும் மருத்துவர்

மேலும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நடத்தப்படும் பரிசோதனைகளில் ஒருவருக்கு லேசான அறிகுறி இருந்தால்கூட, அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டு வகைகளில் பரவலாம். ஒன்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள், அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடமிருந்து பரவுவது (Imported transmission). மற்றொன்று நம் இடத்திலேயே பலர் பாதிக்கப்பட்டு ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுவது. இது சமுதாயத் தொற்று (Community Transmission). நாம் தற்போது முதல் வகையில்தான் இருக்கிறோம். அதனால் இந்நோய் கிராமப்புறங்களைத் தாக்குவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு குறைவு.

டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்

இந்த நோய் உலக அளவில் அனைவருக்குமே புதிது. இந்த நோய் நம் நாட்டில் பரவுவதைத் தடுக்க நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நோயைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

சின்ன அறிகுறி இருந்தால்கூட அது மற்றவர்களுக்குப் பரவக் கூடாது என்று விலகி இருக்க வேண்டும். 3 அடி தள்ளி இருக்க வேண்டும். கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த நோயால் மருத்துவர்களுக்கு ஏற்படும் சவால்கள் கொஞ்சமல்ல.

முதலில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது. பின்பு, அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது. இவை அனைத்தையும்விட முக்கியம் மருத்துவர்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது. நோயாளிகள் சில அடிகள் தள்ளி நின்று சிகிச்சை எடுத்துக்கொள்வதில் ஒத்துழைக்க வேண்டும். இது மருத்துவர் நோயாளி இருவருக்குமே தர்மசங்கடமானதுதான். நோயாளியின் அருகில் சென்று சிகிச்சை அளிப்பதையே மருத்துவர்கள் விரும்புவர். ஆனால், இப்போதைய நிலையில் நோயாளிகள் எதார்த்தத்தைப் புரிந்து மருத்துவர் தள்ளி நின்று சிகிச்சை அளிப்பதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள்
மஞ்சள்

இதுவரை இந்நோய்க்கு தடுப்பு மருந்து எதுவுமில்லை. தடுப்பூசி மருந்து வெளிவர ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என்று கூறப்படும் நிலையில், இந்திய மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை என்று சொல்லப்படும் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள், மிளகு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். வேப்பிலைகளை வீட்டில் வைத்தால் காற்று சுத்தமாகும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதுபோல நிலவேம்புக் கஷாயம் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். இத்தகைய இயற்கை முறைகளைப் பின்பற்றுவதில் தவறு இல்லை. இவற்றில் பக்க விளைவுகளும் கிடையாது.

கொரோனா: எச்சரிக்கை உணர்வு அச்சமாக மாறினால் சமாளிப்பது எப்படி? - மனநல மருத்துவர் ஆலோசனை #FightCovid19

மக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான செய்திகளைக் கண்டு அஞ்சுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களை பீதியடையச் செய்யும் தவறான தகவல்களைப் பகிரக் கூடாது.

சளி, இருமல், காய்ச்சல் மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். மருத்துவர்கள் யாருக்கெல்லாம் பரிசோதனை தேவை என்பதை முடிவு செய்வார்கள்.

Corona
Corona
Freepik

கொரோனாவால் இறந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படாது. நெடுங்களம் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் திருஞானசம்பந்தர் பாடல் பாடி அவர்களைக் குணப்படுத்தியதாக தேவாரத்தில் கூறப்படுகிறது. ஆக இதுமாதிரி பெரும் நோய்கள் பழங்காலத்திலும் இருந்திருக்கின்றன. மக்கள் அச்சப்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் கொரோனாவை வெல்வது சாத்தியமே'' என்று நம்பிக்கை அளிக்கிறார் மருத்துவர் சுதா சேஷய்யன்.

அடுத்த கட்டுரைக்கு