Published:Updated:

புத்தம் புது காலை : தமிழ்ச்செல்வி, ராக்கி... உயிர்காக்கும் மருத்துவ தேவதைகளுக்கு நன்றி! #nursesday

தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி

''நாங்கள் ஓயப்போவதில்லை. கோவிட் நோயை ஒழித்து கடைசி நபரும் மகிழ்வுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறும்வரை நாங்கள் ஓய்வதாயில்லை!"

இன்று சர்வதேச செவிலியர் தினம். உலகமே கொரோனாவோடு போராடும் இன்றைய சூழலில், போர் வீரர்களைப்போல லட்சக்கணக்கான செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிவருகிறார்கள். இவர்களின் தியாகங்களை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.

நோயாளிகளின் பிணி தீர்ப்பதில் மருத்துவரின் பங்கு ஒரு மடங்கு என்றால், செவிலியர்களின் பங்குதான் மூன்று மடங்காக உள்ளது. மருத்துவப்பட்டம் வாங்காமல் மருத்துவரின் பணியை செவ்வனே செய்யும் இந்த மறைமுக மருத்துவர்களுக்கு ஈடாக நாமென்ன செய்துவிட முடியும்?

"என் பெயர் தமிழ்ச்செல்வி. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கோவிட் டியூட்டியை, சென்றவருடம் ஏப்ரல் முதல் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், விஐபிகள் உட்பட ஆயிரக்கணக்கான கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையில் உதவியிருந்த போதிலும், அந்த முதல் கோவிட் நோயாளியை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.


அறுவைசிகிச்சைப் பிரிவின் சிறப்பு செவிலியரான எனக்கு முதன்முதலாக கோவிட் டியூட்டி போடப்பட்டபோது சிறிது கலக்கமாகத்தான் இருந்தது. ஆனால், அதை மாற்றியது அந்த 74 வயது பெரியவர்தான். புற்றுநோயாளியான அவருக்கு கோவிட் தொற்றும் ஏற்பட, தான் பிழைக்க மாட்டோம் என்றே அந்தப் பெரியவர் நம்பத் தொடங்கியிருந்தார் . தன்னைப் பாதித்திருந்த புற்றுநோய் மற்றும் கொரோனாவைவிட, தனது குடும்பத்தைப் பிரிந்து ஆறுதல் சொல்லவும் ஆளில்லாத மன அழுத்தம் அவரை பெருந்துயரத்தில் தள்ளியிருந்தது.

நல்லகண்ணுவுடன், தமிழ்ச்செல்வி
நல்லகண்ணுவுடன், தமிழ்ச்செல்வி

மருந்துகளை ஏற்கவும் மறுக்கத் துவங்கியிருந்த அவரிடம், அன்பாகப் பேசி, ஆறுதல் சொல்லி உணவு மற்றும் மருந்துகளை ஏற்றுக்கொள்ள வைத்து, அவர் குணமடைந்து வீடுதிரும்பிய நாளை என்னால் எப்போதும் மறக்கவேமுடியாது. கோவிட் பணியிலிருக்கும் நாங்கள் அனைவருமே PPE கிட் அணிந்து, பார்க்க எந்த வித்தியாசமும் இல்லாமல்தான் இருப்போம். ஆனாலும், என்னை சரியாகக் கண்டுபிடித்து, சைகையால் தன்னருகே அழைத்து, கைகூப்பி அவர் எனக்கு நன்றி சொல்லிச் சென்றது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ கோவிட் நோயாளிகள், எத்தனையோ நன்றியுணர்வுகள், எத்தனையோ உயிரிழப்புகள், எவ்வளவோ கண்ணீர்கள்.... இறந்தவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இவ்வளவு செய்தும் காப்பாற்ற முடியவில்லையே என்கிற பெருந்துயரம் எங்களை சூழ்ந்துகொள்ளும். அதேநேரம் பாதிக்கப்பட்டவரோடு கடைசி நிமிடங்களில் இருக்க முடியாமல், அவர்களின் கடைசி வார்த்தைகளைக் கேட்க முடியாமல், கடைசியாக ஒருவாய் தண்ணீர்கூட கொடுக்க முடியாமல், வெளியில் நின்றபடி கதறியழும் உறவினர்களின் குற்ற உணர்ச்சியைப் பார்க்கையில் மனம் இன்னும் உடைந்துவிடும். இத்தனை கொடுமையிலும், செவிலியர்கள் நாங்கள் வருடம் முழுவதும் வீட்டிற்குப் போகாமல், வாரவிடுப்பு எடுக்காமல், கோவிட் நோயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று இளைப்பாறுவதற்குள் இதோ இரண்டாம் அலை வந்துவிட்டது.


முதல் அலையைப் போல இல்லை இரண்டாம் அலை. இந்த இரண்டாம் அலையில் எவ்வளவு கவனமாக இருந்தும், எனக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டது. என்னைப் போல, இதுவரை இந்த மருத்துவமனையில் மட்டுமே முன்னூறுக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், சில செவிலியரின் உயிரிழப்பும் ஏற்பட்டதுதான் தாங்க முடியாததாக இருக்கிறது. ஆனாலும், நாங்கள் ஓயப்போவதில்லை. கோவிட் நோயை ஒழித்து கடைசி நபரும் மகிழ்வுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறும்வரை நாங்கள் ஓய்வதாயில்லை"

தமிழ்ச்செல்வியின் வார்த்தைகள் நமக்கு நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அளிக்கும்போதே, கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ராக்கி ஜானின் வரிகள் நம்மை கலங்கச் செய்கின்றன.

ராக்கி ஜான்
ராக்கி ஜான்

புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் டியூட்டியிலிருந்த ராக்கிக்கு, தனது சொந்த ஊரில், பாட்டி கோவிட்டால் மரணமடைந்த செய்தி வருகிறது. தாயில்லாத தன்னை சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கிய பாட்டியின் முகத்தை இறுதியாக ஒருமுறையாவது பார்த்துவிடலாம் என்று திருவனந்தபுரத்திற்குப் புறப்பட எத்தனித்த ராக்கிக்கு, அன்று மதியம் கோவிட் ஐசியூவில் குவிந்த நோயாளிகளின் எண்ணிக்கையப் பார்த்து வேதனையாகிறது.

விடுப்பைத் தவிர்த்து தனது பணியைத் தொடர்ந்த ராக்கி, "ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துமடியும் இந்தத் தருணத்தில், என்னால் இங்கிருந்து ஊருக்குப் புறப்பட மனம் ஒப்பவில்லை... எனது பாட்டிக்கு செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக இதை நான் பார்க்கிறேன்" என்றார் ராக்கி ஜான்.


தனது குட்டிக்குழந்தைகள் இருவரையும் கணவர் கவனித்துக்கொள்ள, விடாத பணியால் தனது உடல்நலிந்து, எடைமெலிந்த போதிலும், மனவலிமையுடன் தனது முன்களப் பணியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ராக்கி ஜான். உண்மையில் தமிழ்செல்வியும், ராக்கியும் பானைச்சோற்றின் ஓரிரு பருக்கைகள் மட்டுமே.

தமது வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு, எந்தவிதத் தயக்கமும், பயமும் இன்றி யாரென்றே தெரியாதவருக்குப் பணிபுரியும் இந்த கைவிளக்கேந்திய கோவிட் வாரியர்களுக்கு, செவிலியர் தினமான இன்று ஒருகணம் நின்று, ஒரு சிறிய அங்கீகாரம், ஒரு சிறிய பாராட்டு, ஒரு சிறிய புன்னகையுடன் நமது நன்றியைச் செல்வோம்.


நன்றி சிஸ்டர்ஸ்!


#செவிலியர் தினம்

அடுத்த கட்டுரைக்கு