Published:Updated:

`ஒரு ரூபாய் செலவு இல்லை; 25 நாள் ரிஸ்க்கான சிகிச்சை!'- 12 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன்
சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன்

பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் இதை யாரும் வெளியே சொல்வதும் இல்லை, விளம்பரம் செய்வதும் இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக அளிக்கப்படுவதில்லை என்றும், அதில் பணி புரியும் மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்படுகிறார்கள் என்றும் அவ்வப்போது விமர்சனங்கள் எழும். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுவனுக்கு ரிஸ்கான முறையில் அறுவை சிகிச்சை அளித்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றனர் டாக்டர்கள் குழுவினர். கிட்டதட்ட இது அந்த சிறுவனுக்கு மறு பிறவி என்றும், இது போல் எத்தனையோ உயிர்களை ஆண்டு தோறும் காப்பாற்றி வருவதாகவும் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை

இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசினோம், ``கடந்த இருபது தினங்களுக்கு முன் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் வயிற்று வலிக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவனுக்குப் உடனடியாக மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சையைத் தொடங்கினர். அவனுக்குப் பரிசோதனை செய்த போது வயிறு வீங்கி இருந்தது, இதயத் துடிப்பும் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் மேலும் நீர்ச்சத்து குறைந்து மயங்கிய நிலையிலிருந்தான்.

பின்னர் அவனுக்கு சிகிச்சையின் மூலம் ரத்த அழுத்தத்தைச் சரி செய்தோம். மேலும் வயிறு வீங்கி இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய ஸ்கேன் எடுத்ததில் குடலில் அடைப்பு இருப்பதாகத் தெரிய வந்தது. அவங்க பெற்றோர் எப்படியாவது என் மகனைக் காப்பாற்றி எங்களிடம் கொடுங்க எனக் கண்ணீர் விட்டனர்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அவர்களிடம் அறுவை சிகிச்சையில் ஏற்படும் ரிஸ்க் அனைத்தையும் தெளிவாக எடுத்துக் கூறினோம். பின்னர் அறுவை சிகிச்சை தொடங்கியது. வயிற்றைக் கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. அப்போதுதான் அந்த சிறுவனுக்குக் குடல் அழுகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுகுடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அளவிற்கு அழுகி இருந்தது. இதனைக் கண்டு நாங்கள் சின்ன பையனுக்கு எப்படி இப்படி ஒரு பிரச்னை வந்தது என நினைத்துக் கொண்டே அழுகிய குடலை வெட்டி எடுத்துக் அப்புறப்படுத்தினோம். பின்னர் சிறுகுடலையும், பெருங்குடலையும் ஒன்றாகச் சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த சிறுவனுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டதே குடல் அழுகக் காரணமாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் அவனை ஐசியுவில் வைத்து இரவு பகலாகப் பயிற்சி மருத்துவரும், செவிலியர்களும் கவனித்துக் கொண்டனர். அந்த சிறுவனின் உடல் மெதுவாகத் தேறியது. 5 நாட்களுக்கு எந்த உணவும் கொடுக்கப்படவில்லை. பின்னர் 6 வது நாள் வயிற்றிலிருந்து கேஸ் வெளியேறிய பிறகு தண்ணீரும், இளநீரும் கொடுக்கப்பட்டது. சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மிகச் சிரமம் ஏற்பட்டது.

சிகிச்சை
சிகிச்சை

9 ஆம் நாள் இட்லி ,சாதம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. 11ஆம் நாள் மருத்துவர்கள் யாரும் எதிர் பார்க்காதது நடந்தது. அந்த சிறுவனுக்குத் தையல் போட்ட தொப்புள் பகுதியிலிருந்து இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடலில் தையல் பிரிந்ததால் இது போன்று ஏற்பட்டது. மலம் வயிற்று வழியாக மேலே வருவதைப் பார்த்து சிறுவனின் அம்மா கதறினார். அவரிடம் கவலை படாதீங்கம்மா நாங்க இருக்கோம் எனத் தேற்றினோம்.

அதன்பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்பு மூலம் சத்து மருந்து மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ மருந்துகள் செலுத்தப்பட்டது. இதனால் தொப்புள் வழியாக வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் நார்மலான நிலைக்கு வந்தான். அத்துடன் எல்லோரையும் போலவே மலம் கழிக்க ஆரம்பித்தான். அவன் உடலும் தேறியது.

இதையடுத்து அவன் வீட்டிற்கு அனுப்பபட்டான். கிட்டதட்ட அந்த சிறுவனுக்கு இது மறுபிறவி. 25 நாட்கள் அரசு மருத்துவமனையில் வமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனை என்பதால் அந்த பெற்றோருக்கு ஒரு ரூபாய்கூட செலவு இல்லை. இதே அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பைத் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகி இருக்கும்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை

அந்த பெற்றோர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்சார்ஜ் ஆகும் போது அந்த பெற்றோர் எங்கள் மகனை மீட்டுத் தந்ததற்கு எந்த வார்த்தைகளால் உங்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை எனத் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது எங்கள் கடமைதான் என அவர்களிடம் கூறி அனுப்பி வைத்தோம்.

இது போல் அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இதை யாரும் வெளியே சொல்வதும் இல்லை, விளம்பரம் செய்வதும் இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.

தனியார் மருத்துவமையில் சிகிச்சை அளிக்க முடியாது எஎனத்கைவிடப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் எத்தனையோ பேரை நாங்கள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு