Published:Updated:

கிரீன் டீ தெரியும்... கிரீன் காபி தெரியுமா? - சர்வதேச காபி தினம்! #InternationalCoffeeDay

Green Coffee
Green Coffee ( pixabay )

ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும் என்றாலும், காபி -யின் கேஃபீன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.

காபி...

அதன் சுவை நாக்கில் படுவதற்கு முன்பாகவே அதன் மணம் மூக்கின் வழியாக மூளையை அடைந்து, நமக்கு புத்துணர்ச்சியைத் தந்துவிடக்கூடிய ஒரு பானம். காலை எழுந்தவுடன், முன்பகலில், மதியம், பின்மதியம், மாலை, இரவு என உலகெங்கிலும் உணவைவிட அதிக வேளை உட்கொள்ளப்படக்கூடிய ஒரு பானமாய் இருக்கிறது. உலகெங்கிலும், ஒவ்வொரு நாளும், 200 கோடி கப் காபியைப் பருகுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மேலும், அதிகப்படியாக விற்று வாங்கக்கூடிய பொருள்களில், உலக அளவில் பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக இருப்பதும் இந்தப் பானம்தான் என்று கூறப்படுகிறது.

Coffee Nuts
Coffee Nuts
pixabay

காபி, தனது சுவை மற்றும் மணத்தால் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளதற்கு இன்னொரு காரணம், சூடாகவும் குளிர்ச்சியாகவும் பரிமாறக்கூடிய ஒரு பானம் என்பதுதான். இப்படி, பன்முகத் தன்மைகொண்ட இந்த காபியில் என்னதான் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், அதன் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் அறிவோம் வாருங்கள்...

Coffea arabica என்ற தாவரப்பெயர் கொண்ட காபி செடியின் நன்கு பழுத்த காபி பழங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கொட்டைகளைப் பதமாக வறுத்த பொடிதான், இந்த காபி.

Coffee
Coffee
pixabay

எத்தியோப்பியா, மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இதன் பிறப்பிடமாக அறியப்படுகின்றன. எத்தியோப்பிய நாட்டில், காஃவா (Kaffa) என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள், அங்கு வளர்ந்த ‘பூன்னா' செடிகளை உண்ட தங்களின் ஆடுகள், அதிக வேகத்துடனும் ஆட்டத்துடனும் உலவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் விழித்திருந்ததையும் கண்டு வியந்து, அந்த ஆடுகள் உண்ட செடியின் பழங்களைத், தாங்களும் உண்டு உற்சாகம் அடைந்தனராம். இப்படித் தோன்றியதுதான் காபி என்கிறது வரலாறு.

மேலும், அரேபிய நாட்டின் சூஃபி துறவிகள், தங்களின் வழிபாடுகளுக்காக விழித்திருக்கவேண்டி, முதன்முதலாக காபி பயன்படுத்தினர் என்றும் அறியப்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பா சென்றடைந்த காபி, ஆரம்ப நாள்களில், சாத்தானின் கறுப்பு கசப்பு பானம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், காபி படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து, "The most favorite drink of Civilized World" என்ற நிலையை அடைந்திருக்கிறது.

Coffee
Coffee
pixabay

காபி இவ்வளவு விரும்பப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அதிலுள்ள கேஃபீன் (Caffeine) என்ற பொருளை ஊட்டச்சத்து நிபுணர்கள் கைகாட்டுவதுடன், நாம் அன்றாடம் பருகும் ஒரு டம்ளர் (200ml) காபியில் 80 - 120mg வரை, கேஃபீன் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.

காபியைப் பருகிய 5 -10 நிமிடங்களுக்குள், அதில் உள்ள கேஃபீன் மூளை நரம்புகளின் அடினோசின் (Adenosine) என்ற தாதுப்பொருளின் அளவைக் குறைப்பதுடன், டோப்பமைன் அளவைக் கூட்டுவதால், அது நம் மனதிற்கு புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகிறது.

மேலும், அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுவதன் மூலமாக மூளைக்கு மட்டுமல்ல, நமது தசைகளுக்கும் புத்துணர்ச்சியைத் தர வல்லது காபி என்கிறது, விஞ்ஞான ஆய்வு.

Vikatan

முக்கியமாக, மன அழுத்தத்தைக் குறைத்து, விழிப்புத் திறனையும் கூட்டுவதால், பரீட்சை நேரங்களில் மாணவர்களால் இது வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும் என்றாலும் காபியின் கேஃபீன், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.

அல்சர், குடல்புண், பற்சிதைவு, எலும்புத் தேய்மானம், அதிக கொலஸ்ட்ரால், ரத்தச்சோகை, இருதய வால்வுகளின் வீக்கம் என காபி உண்டாக்கும் நீண்டகால பக்கவிளைவுகளுக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது இந்தக் கேஃபீன் என்பதும், காபி பிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி.

இதெல்லாம் இப்படியிருக்க, இப்போது என்ன புதிதாக கிரீன் காபி என்கிறீர்களா..? அதையும் தெரிந்துகொள்வோம்...

2012-ம் ஆண்டு, அமெரிக்காவின் மிகப் பிரபலமான டாக்டர் ஆஸ் நிகழ்வில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த "காபியின் நிறம் பச்சை!"

Coffee
Coffee
pixabay

நாம் உபயோகிக்கும் இந்த காபி கொட்டைகள், நன்கு பழுத்த காபி பழங்களின் கொட்டைகள் ஆகும். இந்தக் கொட்டைகளை நாம் நேரடியாக உபயோகிக்காமல், அதன் மணம் மற்றும் சுவைக்காக கொட்டைகளை வறுத்துப் பொடிசெய்து உபயோகித்துவருகிறோம். இப்படி வறுக்கும்போது, காபி கொட்டைகளில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் அழிந்துவிடுவதால், சில நன்மைகளை இழக்கிறோம் என்றும், அவற்றை பச்சையாகவே பயன்படுத்தும்போது ஏற்படும் நன்மைகள் அதிகமாய் இருக்கிறது என்றும் முதன்முதலில் விளக்கியது இந்த ஆய்வு.

அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பச்சை நிற காபிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன.

பச்சை நிற காபி கொட்டைகளில் அதிகம் காணப்படுகிறது, க்ளோரோஜெனிக் அமிலம். (Chlorogenic Acid) பல்வேறு நன்மைகளைத் தருவதுடன், நம் உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகப்படுத்துகிறது. மேலும், இந்த கிரீன் காபி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. செல்களுக்கும் தசைகளுக்கும் ஆக்சிஜன் அளவைக் கூட்டி, புத்துணர்ச்சியைத் தருகிறது. இவை மட்டுமன்றி, பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, கலோரிகளையும் குறைப்பதால் உடற்பருமனைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது, இந்த கிரீன் காபி.

Doctor sasithra damodaran
Doctor sasithra damodaran

மேலும், ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு நோய், புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் கிரீன் காபியின் க்ளோரோஜெனிக் அமிலம், அனைத்திற்கும் மேலாக, கல்லீரலின் கிளைக்கோஜன் அளவைக் குறைத்து, சர்க்கரை நோய்க்குப் பெரிதும் பயனளிக்கிறது.

காலை, மாலை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பரிந்துரை செய்யப்படும் இந்த கிரீன் காபியின் சுவை பிடிக்காத காபி ரசிகர்களுக்கு, இது மாத்திரை வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரீன் காபியின் நன்மைகளை ஊர்ஜிதப்படுத்த, இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளபோதும், கறுப்பு காபியைவிட, பச்சை நிற காபியின் நன்மைகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது என்கிறது, இதுவரை வந்துள்ள ஆய்வின் முடிவுகள்.

Vikatan

ஆக, உடற்பருமன் கலோரி விஷயங்களுக்காக, கசப்புடன் கிரீன் டீ குடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காஃபி பிரியர்களே... சீக்கிரமே நீங்கள் உங்களுக்குப் பிடித்த காபிக்கு, அதாவது இந்தக் கிரீன் காஃபிக்கு மாறிவிடலாம்.

இனிய காபி நாளாகட்டும்!

அடுத்த கட்டுரைக்கு