Published:Updated:

கொரோனா தலைவலி, ஒற்றைத்தலைவலி... என்ன வித்தியாசம்?

தலைவலி
தலைவலி

சிலருக்கு ஒற்றைத்தலைவலி மிகக் கடுமையாக ஏற்படும்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அதை தொடர்புபடுத்துவதால் அச்சம் அதிகமாகிறது.

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில், சிலர் தலைவலியால் அவதிப்படும்போது, 'இது கொரோனா அறிகுறியோ' என்ற பயம் அவர்களுக்குத் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஆனால், உறங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றம், அதிக நேரம் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது, உடற்பயிற்சியின்மை, வீட்டுக்குள் அடைந்துகிடப்பதால் ஏற்படும் மன அழுத்தம், வேளை தவறி சாப்பிடுவது என தலைவலி பல காரணங்களால் ஏற்படலாம். சிலருக்கு ஒற்றைத்தலைவலி மிகக் கடுமையாக ஏற்படும்போது, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அதை தொடர்புபடுத்துவதால் அச்சம் அதிகமாகிறது.

கொரோனா விளைவு
கொரோனா விளைவு
ஒற்றைத்தலைவலி மற்றும் கோவிட்-19 வைரஸின் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தலைவலி குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துகிறார், நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.

''ஒற்றைத்தலைவலி என்பது, மைக்ரேன் (Migraine) என்று அழைக்கப்படும். இது, சிறு வயதிலிருந்தே இருக்கலாம். ஒற்றைத்தலைவலியால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர். ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் இந்த வலி துடிக்கவைக்கும் (Throbbing).

ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன் சில அறிகுறிகளை உணரமுடியும். 'கெட்ட வாடை வருகிறது' என்று கூறுவர். கண்களில் பளிச் பளிச்சென்று வெளிச்சம் தோன்றியதாகக் கூறுவர். மேலும், வேலையில் நாட்டம் குறைவது, கோபம் போன்றவை ஏற்படும். இதற்கிடையில், துடிக்கும் தலைவலி ஏற்படும். சம்பந்தப்பட்டவர் சில நேரங்களில் வாந்தியெடுப்பார்.

தலைவலி
தலைவலி

ஒற்றைத்தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு மரபு காரணமாக இருக்கலாம். மேலும் மன அழுத்தம், வேலைப்பளு, பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனவே, ஒருவருக்கு ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது என்றால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்க்கைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் தலைவலியின் தீவிரத்தைக் குறைக்க, யோகா, தியானம் ஆகியவை கைகொடுக்கும்... முயலலாம். மருத்துவ ஆலோசனையுடன் மருந்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் ஒற்றைத்தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்'' என்ற டாக்டர், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் தலைவலி பற்றி விளக்கினார்.

''காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற கோவிட்-19 வைரஸ் நோய் பாதிப்பின் மற்ற அறிகுறிகளுடன் ஒப்பிடும்போது, தலைவலி பலருக்கும் அரிதாகவே ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் நுரையீரல், தொண்டைப் பகுதி, சைனஸ் பகுதி ஆகியவற்றையே பெரும்பாலும் தாக்குகிறது. கொரோனா வைரஸ் மூளையைத் தாக்குவது மிக அரிது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்குத் தலைவலி முக்கியப் பிரச்னையாக வெளிப்பட்டது.

கொரோனா
கொரோனா
`லாக்டௌன் நாள்களில் தலைவலி...என்ன காரணம்?'  - நரம்பியல் மருத்துவர் சொல்லும் யோசனை

கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்காது. நுரையீரலைத் தாக்கி, ரத்த ஓட்டம் குறையும்போது மூளையில் சில பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். ரத்தக்கசிவு இருந்தால் திடீரென கடுமையான தலைவலி இருக்கும். இதைத் தொடர்ந்து நோயாளி பெரும்பாலும் சுயநினைவை இழந்துவிடுவார்.

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் நிலையில், தலைவலி மெதுவாகத் தொடங்கும். ஒரு பக்கம் கைகால் செயலிழத்தல், முகம் செயல் இழத்தல் ஆகியவை ஏற்படும். சிலருக்கு கொரோனா வைரஸால் மூளைக்காய்ச்சல் (Meningitis) ஏற்படலாம்'' என்ற டாக்டர்,

நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்
நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்

''தலைவலி என்றாலே கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ என்று பதற்றமடையாமல், தலைவலி உண்டாக்குவதற்கான எந்தச் சூழலில் உங்களை நீங்கள் உட்படுத்திக்கொண்டீர்கள் என்று முதலில் சிந்தித்துப் பார்க்கவும். தூக்கமின்மை, ஸ்க்ரீன்டைம் முதல் மைக்ரைன்வரை காரணங்களைப் பரிசீலிக்கவும். அவற்றை நிவர்த்திக்கவும். ஒருவேளை காரணத்தை அறியமுடியாத, எந்த முடிவுக்கும் வரமுடியாத சூழலில், அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்'' என்று அறிவுறுத்துகிறார், டாக்டர் பாலமுருகன்.

அடுத்த கட்டுரைக்கு