Published:Updated:

`வீட்டில் பிரசவம் வேண்டவே வேண்டாம்!' - ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால், ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி மகப்பேறு மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.

மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்புதான். இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்கிற ஃபார்வர்டு மெசேஜ்களால் ஈர்க்கப்பட்டு, பெண்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சில கணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியைச் சேர்ந்த அழகம்மாள், கணவர் விஜயவர்மனின் பேச்சை நம்பி, கருத்தரித்த நாளிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்ததோடு, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வதற்கும் சம்மதித்து இருக்கிறார். விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வருபவர். அவருடைய ஆலோசனையின்படிதான் இப்படியொரு ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்கள் விஜயவர்மனும் அழகம்மாளும்.

Is Delivery at home safe?
Is Delivery at home safe?

விளைவு, சிசு இறந்து அழுகிய நிலையில் வயிற்றிலேயே இருந்திருக்கிறது. ஸ்கேன் செய்யாததால் இது எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறார் அழகம்மாள். இந்த நிலையில் நேற்று அழகம்மாளுக்கு வயிற்றுவலி ஏற்பட, சிசு பாதி வெளியேறிய நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதிக ரத்தப்போக்கு காரணமாக, வழியிலேயே அழகம்மாள் இறந்துவிட்டார். இவர் பி.எஸ்ஸி நர்சிங் படித்தவர் என்பதுதான் உச்சகட்ட வேதனை. இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்னால், திருப்பூரில் ஒரு தம்பதியர் வீட்டிலேயே பிரசவம் செய்ய முயல, அழகம்மாள் போல அந்த இளம் தாயும் அதிகப்படியான ரத்தப்போக்கினால் உயிரை இழந்தார்.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால், ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர் சொல்வதைக் கேளுங்கள்.

* பிரசவம் நடக்கும் இடம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தாய்க்கும் சேய்க்கும் தொற்றுநோய்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு மருத்துவமனைகள் மட்டுமே சரியான இடமாக இருக்க முடியும்.

* பிரசவ வலி அதிக நேரம் இருந்தால், அந்த வலியை அதிகப்படுத்த டிரிப்ஸ் போட்டு, சீக்கிரம் டெலிவரியை முடிக்க வேண்டும். இல்லையென்றால், தாய்க்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிடும்.

* கர்ப்பப்பையின் வாய் நிமிடத்துக்கு நிமிடம் விரிந்துகொண்டே வந்து திறக்கும். அதை மருத்துவர்தான் சரியாகக் கண்காணிக்க முடியும்.

Pregnancy
Pregnancy
`ஃபிட்னஸூக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை?!' - கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன?

* குழந்தை வெளியே வருவதற்கு முன்பே பனிக்குடத்தின் நீர் முழுவதும் வெளியேறிவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறும் ஆபத்து ஏற்படலாம்.

* தாயின் உறுப்பைவிடக் குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், குழந்தையை வெளியே எடுக்க முடியாது. இதற்கு மருத்துவரின் உதவி கட்டாயம் தேவை.

* குழந்தையின் தலை வெளியே வரமுடியாமல் உள்ளேயே மாட்டிக்கொள்ளலாம். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெண்ணுறுப்பை நோக்கிக் கீழே இறங்கவேண்டிய தலை, கர்ப்பப்பையின் பக்கவாட்டிலோ, மேற்புறமாகவோ நின்றுவிட்டால், பிரசவம் சிக்கலாகிவிடும்.

* குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி சரியாக வெளியே வந்துவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், உடனடியாக மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து நஞ்சுக்கொடியை வெளியே எடுக்க வேண்டும். இதை வீட்டில் எப்படிச் செய்ய முடியும்?

* குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பையைச் சுருங்கிவிட்டதா என்று செக் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

மகப்பேறு மருத்துவர் வாணி ஷயாம் சுந்தர்
மகப்பேறு மருத்துவர் வாணி ஷயாம் சுந்தர்

* பிரசவத்தின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால், அதைத் தடுக்கும் மருந்தை டிரிப்ஸில் கலந்து தாய்க்கு ஏற்றி, அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும். டிரிப்ஸுக்குக் கட்டுப்படவில்லை எனில், கர்ப்பப்பையின் வாயில் சின்ன தையல் போட்டோ, சிறிய ஆப்ரேஷன் செய்தோ தாயைக் காப்பாற்ற வேண்டும். டிரிப்ஸ், தையல், ஆபரேஷன் இதெல்லாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும்போது செய்ய முடியாது.

* குழந்தை பிறந்ததும் அதைக் கவனித்துக்கொள்ளவும், ஏதாவது பிரச்னை என்றால் காப்பாற்றவும், குழந்தைகள் நல மருத்துவர் அருகில் இருக்க வேண்டும். ஒரு தாய்க்குப் பிரசவம் நடக்கும்போது, மேலே சொன்ன அத்தனை உதவிகளும் அருகே இருக்க வேண்டும். இல்லையென்றால், அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடலாம்.

அடுத்த கட்டுரைக்கு