Published:Updated:

`இது நிச்சயம் யாரையும் கொல்லப்போவதில்லை!’- கொரோனாவுக்கு ட்ரம்ப் சொல்லும் `கேம் சேஞ்சர்’ மருந்து

கொரோனாவுக்கு மருந்து
கொரோனாவுக்கு மருந்து ( pexels )

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீனாவில் முதன்முதலில் லோபினாவிர்(lopinavir) என்னும் ஹெச்.ஐ.வி மருந்து கொடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ், பெரும்பாலான மக்களுக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது நிமோனியா உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

கோவிட்  - 19
கோவிட் - 19
pexels

உலகம் முழுக்க 170 -க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா நோய் பரவியிருந்தாலும் எந்த நாட்டிலும் கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவே 12-18 மாதங்கள்வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில், ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 30% என்ற கணக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பத்தாயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் ஏற்கெனவே பரிசோதனை மருந்தாகக் கொடுக்கப்பட்டு வரும் எபோலா மருந்து ரெமெடிசிவிர்தான்(remdesivir), அமெரிக்காவின் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் கொடுக்கப்பட்டுவருகிறது.

டிரம்ப்
டிரம்ப்

இந்நிலையில் முன்பே கண்டுபிடிக்கப்பட்டு மலேரியா நோய்க்குக் கொடுக்கப்பட்ட ஆன்டி-மலேரியல் மருந்தான குளோரோகுயின்(chloroquine) கொரோனா வைரஸுக்குச் சரியான சிகிச்சையாக இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்புவதாக டிரம்ப், வெள்ளை மாளிகையில் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீனாவில் முதன்முதலில் லோபினாவிர்(lopinavir) என்னும் ஹெச்.ஐ.வி மருந்து கொடுக்கப்பட்டது. லோபினாவிர் ஆன்டி-வைரல் மருந்து COVID-19 க்குச் சிறந்த பலன் எதையும் தரவில்லை என்பதை சமீபத்திய மருத்துவப் பரிசோதனைகள் நிரூபித்துள்ளன.

மருத்துவ ஆராய்ச்சி
மருத்துவ ஆராய்ச்சி
pexels

தற்போது, கோவிட்-19 சிகிச்சைக்காக உலகளவில் நான்கு ஆன்டிவைரல் மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் வைரஸ்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் ஒரு வகையான எபோலா டிரக்(Ebola drug), ரெமெடிசிவிர் மற்றும் குளோரோகுயின்(chloroquine) மருந்துகள் அடக்கம்.

இது குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவரான(The United States Commissioner of Food and Drugs) ஸ்டீஃபென் ஹான், 'புதிய மருந்துகளை அங்கீகரிப்பதில் மிக எச்சரிக்கை கொண்ட எஃப்.டி.ஏ., பொதுவாக ஒரு நீண்ட செயல்முறை மூலம் பல ஆண்டுகள் கழித்தே அங்கீகரிக்கும்.

ஸ்டீஃபென் ஹான்
ஸ்டீஃபென் ஹான்
nypost.com

கொரோனாவுக்கு வேறு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பலன் தரும் எனச் சில ஆராய்ச்சிகள் மூலம் நம்பப்படும் மருந்துகளைப் பயன்படுத்த எஃப்.டி.ஏ அனுமதிக்கிறது' என்று ஆரம்பித்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

'COVID-19க்குச் சிகிச்சையளிப்பதில் குளோரோகுயின் மருந்து நம்பிக்கைக்குரியதாக இருக்கலாம் என்று மருத்துவத் தகவல்கள் தெரிவித்தால், அதற்கான தேவை மக்கள் மத்தியில் நிச்சயம் அதிகரிக்கும். கொரோனாவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு குளோரோகுயின் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்படும்.

சிகிச்சை
சிகிச்சை
freepik

இந்த மருந்து ஏற்கெனவே மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவுக்கு இதுதான் மருந்து எனத் தீர்மானிக்கப்படாத நிலையில் மருத்துவர்கள் அதை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க முடியும். இந்த முறைஆஃப்-லேபிள் (off-label) முறை எனப்படுகிறது.

குளோரோகுயின் பரவலாக எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. மற்றும் இதற்கு ஆஃப்-லேபிளையும் பயன்படுத்தலாம். இதற்கான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தகவல்களைக் கண்டறிய முறையான ஆய்வை மேற்கொள்வது அவசியம். நோயாளிகளுக்குத் தகுந்த நேரத்தில் சரியான மருந்தை சரியான அளவில்தான் தருகிறோமா என்பதை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார் ஸ்டீஃபென் ஹான்.

மேலும், 'குளோரோகுயின் கோவிட்-19ஐ நிச்சயம் முழுமையாகக் குணப்படுத்திவிடும் சிறந்த சிகிச்சையாக இருக்கக்கூடும் என்ற தவறான நம்பிக்கையை வழங்க விரும்பவில்லை' என்ற ஸ்டீஃபென் சொன்னாலும், அதே சமயத்தில், ``இந்த மருந்து நீண்ட காலமாக உள்ளது.

முறையான ஆய்வை மேற்கொள்வது அவசியம்
முறையான ஆய்வை மேற்கொள்வது அவசியம்
freepik

கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படவில்லை என்றாலும், அது யாரையும் நிச்சயம் கொல்லப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மருந்து கேம் சேஞ்சராக இருக்கும். அல்லது இல்லாமலும் போகலாம்” என்றிருக்கிறார் ட்ரம்ப்.

உலக சுகாதார அமைப்பு, லேசான நோய் உள்ளவர்கள் சுமார் இரண்டு வாரங்களில் குணமடைவதாகவும் கடுமையான நோய் உள்ளவர்கள் குணமடைய மூன்று முதல் ஆறு வாரங்கள்வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு