Published:Updated:

`ஆரோக்கியமானவர்கள் முகமூடிகளை அணிய வேண்டாம்!‘ - காரணம் சொல்லும் மருத்துவர்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வைரஸால் பாதிக்கப்படாதவர்கள் முகமூடிகளை அணிய வேண்டாம் என்று சில நாட்டுச் சுகாதார அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் சீனாவைத் தாண்டி பிற நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு அமெரிக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், ஐக்கிய அரபு நாட்டில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குக் குறைந்த அளவே எதிர்ப்புச் சக்திகள் இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிற நாட்டினர் ஐக்கிய அரபு நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

அதேபோல் வைரஸால் பாதிக்கப்படாத மக்கள் யாரும் முக கவசம் (ஃபேஸ் மாஸ்க்) அணிய வேண்டாம் என அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் குழந்தைகள் அணிய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முகமூடிகள் சுவாசக் குழலுக்கு அழுத்தம் கொடுத்து பிற்காலத்தில் இதனால் பல சுவாசப் பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிவிப்பையே பல நாட்டு அமைச்சகங்களும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

முகமூடி அணிந்தவர்கள்
முகமூடி அணிந்தவர்கள்

``ஒரு சராசரி ஆரோக்கியமான நபருக்கு முகமூடி தேவையில்லை அவர் நிச்சயம் முகமூடியை அணியக் கூடாது” என்று அமெரிக்காவின் லோவா பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு நிபுணர் எலி ப்ரென்சிவிச் (Eli Perencevich) தெரிவித்துள்ளார். ``ஆரோக்கியமான ஒரு நபர் முகமூடி அணிவதால், அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் அதைத் தவறாக அணிந்துகொண்டுள்ளனர். மேலும், முகமூடி அடிக்கடி தங்கள் முகத்தைத் தொடுவதால் பல்வேறு தொற்றுநோய்கள் அதிகரிக்கக்கூடும்.

உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும். உங்கள் வைரஸ் பிறருக்குப் பரவாமல் இருப்பதற்காக மட்டுமே முகமூடிகள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகமூடிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தினமும் கைகளை சோப் பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும். இது நிச்சயம் வைரஸிலிருந்து ஆரோக்கியமான ஒருவரைக் காப்பாற்றும்” என ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

சோப்பின் மூலம் வைரஸை அழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியல் பேராசிரியர் டாக்டர். கரென் பிளம்மிங் அதற்கான விளக்கத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ``எல்லோரும் ஏன் கை கழுவுவதை வலியுறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அனைவருக்கும் அது மிகச் சாதாரணமானதாகத் தெரிகிறது. ஆனால், சோப் உண்மையில் நம் வீடுகளில் நாம் அனைவரும் வைத்திருக்கும் ஓர் அற்புதமான ஆயுதம்.

ஏனென்றால், கொரோனா வைரஸ் ஒரு `உறையிடப்பட்ட’ (enveloped) வைரஸ் ஆகும், அது வெளிப்புறத்தில் லிப்பிட் சவ்வு அடுக்கைக் கொண்டுள்ளது. அடிப்படையில், இது ஒரு கொழுப்பு அடுக்கால் சூழப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவினால் இந்த க்ரீஸ் கொழுப்பு அடுக்கைச் சோப்பு கரைத்து வைரஸைக் கொல்லும் திறன் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் மாஸ்க் அணிய வேண்டாம் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு