Published:Updated:

முகக் கவசம் முக்கியமா, இல்லையா?

முகக் கவசம் முக்கியமா, இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
முகக் கவசம் முக்கியமா, இல்லையா?

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

முகக் கவசம் முக்கியமா, இல்லையா?

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

Published:Updated:
முகக் கவசம் முக்கியமா, இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
முகக் கவசம் முக்கியமா, இல்லையா?
கொரோனாவுடானான இந்தப் போரில் தனிமனித இடைவெளியும் கை கழுவுதலும் தூய்மையைப் பேணுதலும் முக்கியமானவை. இது எல்லோருக்கும் தெரியும். இவற்றோடு முகக்கவசத்தையும் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பல ஊர்களில் முகக்கவசமின்றி நடமாடுவோர் கண்டிக்கப்படுகிறார்கள், சிலர் தண்டிக்கவும்படுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள நகரம் ஹாரிஸ். அதன் நீதியரசர் லினா ஹிடால்கோ ஏப்ரல் 22 அன்று ஓர் அவசர ஆணையைப் பிறப்பித்தார். பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடுபவர்கள் தண்டத்தொகை கட்டவேண்டும். அபராதம் அதிகமில்லை. ஆயிரம் டாலர்தான் (ரூ.76,500).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இதே அமெரிக்கா, கொரோனா படமெடுக்கத் தொடங்கிய ஜனவரி மாதத் தொடக்கத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளும் அப்படித்தான் நினைத்தன. உலக சுகாதார அமைப்பின் கருத்தும் அப்போது அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டன. இரண்டு காரணங்கள். ஒன்று அனுபவம். இரண்டு அறிவியல். இரண்டாவதை முதலில் பார்க்கலாம்.

முகக் கவசம் முக்கியமா, இல்லையா?
முகக் கவசம் முக்கியமா, இல்லையா?

கொரோனா வைரஸ் மனிதர்களுக்குள் இருக்கும் ‘ஏஸ்-2’(ACE2) என்கிற உயிரணுவுடன் இணைந்து பல்கிப் பெருகுகிறது. இந்த உயிரணு நுரையீரலிலும் குடலிலும் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதினார்கள். ஆனால் இது நாசித் துவாரங்களிலேயே தொடங்கிவிடுகிறது. இப்படி சொன்னவர் ஜெங் மின் எனும் அம்மையார். சீனப் பேராசிரியர். பிப்ரவரி முதற்கொண்டே அவர் இதைச் சொல்லிவருகிறார். அவர் அந்தக் கருதுகோளை எட்டுவதற்குப் போதுமான மாதிரிகளை பரிசோதிக்கவில்லை என்று ஆய்வுலகம் கருதியது. ஆய்வுலகத்திற்கு வேண்டிய தரவுகள் இப்போது கிட்டியிருக்கின்றன. ஏப்ரல் இறுதியில் ‘நேச்சர்’ மருத்துவ இதழில் வராடன் சுங்னாக் என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரின் தலைமையில் விஞ்ஞானிகள் நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியாகின. ஏராளமான மாதிரிகளைச் சோதனை செய்த கேம்பிரிட்ஜ் குழுவும் ஜெங் மின் எட்டிய அதே முடிவைத்தான் எட்டியிருக்கிறது. கூடவே இன்னொரு முடிவையும் ‘நேச்சர்’ கட்டுரை தெரிவிக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் அவர்களினின்றும் வெளியாகும் நீர்த்துளிகள் வாயிலாக வைரஸ் தொற்றும்; இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மேலதிகமாக கேம்பிரிட்ஜ் குழுவின் ஆய்வு, பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போதும் மூச்சு விடும்போதும் வெளியாகும் சுவாசத்துளிகளிலும் இந்த வைரஸ் இருக்கும்; இது மூன்று மணி நேரம் வரை காற்றில் தங்கியிருக்கக்கூடும்; அது சுவாசிப்பவர்களின் நாசிகளின் வழியாக உட்புகுந்துவிடக்கூடும் என்றும் எச்சரிக்கிறது. ஆக மூக்கும் வாயும் ஒருவருக்கு வைரஸ் வெளியேறும் பாதையாகவும், மற்றவருக்கு வைரஸ் உள்ளே புகும் பாதையாகவும் அமைந்துவிடுகின்றன. இந்த வெளிவாயிலையும் நுழைவாயிலையும் அடைக்க வேண்டும். முகக்கவசம் அந்தப் பணியைச் செய்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதற்கு யாதொரு அறிகுறியும் இல்லாமல் அதைச் சுமந்துகொண்டிருக்கலாம். அவரை அறியாமலேயே அதை வெளியேற்றலாம். இதை முகக்கவசம் தடுக்கிறது. இது அறிவியல் காரணம்.

அடுத்தது அனுபவம். ஆண்டு 2003. இடம் ஹாங்காங். சார்ஸ் எனும் வைரஸ் தொற்று காற்றில் கலந்து கிடந்தது. இப்போதைய கோவிட்-19இன் இதே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்ததுதான் சார்ஸ். அது கோவிட்-19ஐ விட வீரியம் மிக்கதாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களைக் காவு கொண்டது. அப்போது நான் ஒரு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணித்தலத்தில் வேலை பார்த்து வந்தேன். அந்த அலுவலகத்தில் சுமார் 40 பேர் பணியாற்றியிருப்போம். தலைமைப் பொறியாளர் ஆங்கிலேயர். நான் நீங்கலாக மற்றவர்கள் உள்ளூர் சீனர்கள். தலைமைப் பொறியாளரைத் தவிர அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தார்கள். ஆங்கிலேயரிடம் “நீங்கள் ஏன் முகக்கவசம் அணிவதில்லை?” என்று கேட்டேன். சில நாள்களுக்கு முன்னர் வரை மேற்குலகம் சொல்லிவந்த காரணத்தைத்தான் அன்று அவர் சொன்னார். ஆரோக்கியமானவர்கள் கவசம் அணிய வேண்டாம். நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் கவசம் அணிந்தால் போதுமானது. தனிமனித இடைவெளியும் முறையாகக் கை கழுவுதலும் தூய்மையுந்தான் முக்கியம் என்றும் சொன்னார் அந்த ஆங்கிலேயர்.

 மாஸ்க்கின் நோய்த்தடுப்பின் திறன்
மாஸ்க்கின் நோய்த்தடுப்பின் திறன்

அடுத்து, நான் சீனப் பொறியாளர்களிடம் ‘ஏன் அணிகிறீர்கள் முகக்கவசம்?’ என்று கேட்டேன். அவர்கள் ஒரே விதமாகப் பதிலளித்தார்கள். முகக்கவசம் அணிவது, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, அது பிறருக்காகத் தாங்கள் செய்ய வேண்டிய கண்ணியமான நடவடிக்கையும் ஆகும் என்றார்கள். தங்களை அறியாமல் வைரஸைச் சுமந்து கொண்டிருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவுவதை இந்த முகக்கவசம் தடுக்கக் கூடுமல்லவா என்று கேட்டார்கள். சார்ஸின் பாதிப்பிலிருந்து நகரம் முழுமையாக விடுபட்ட பிறகுங்கூட இருமல், காய்ச்சல் என்று எது வந்தாலும் ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கினார்கள். 17 ஆண்டுகளாக இது தொடர்கிறது. ஆகவே கொரோனா சீனாவில் வெளிப்படத் தொடங்கிய ஜனவரி மாதம் முதற்கொண்டே ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கிவிட்டார்கள். ஹாங்காங் மட்டுமல்ல, 17 ஆண்டுகளுக்கு முன்னால் சார்ஸால் தீண்டப்பட்ட தைவான், தென்கொரியா, வியட்னாம், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய கீழை நாடுகள் அனைத்தும் அப்போதும் முகக்கவசம் அணிந்தன; இப்போதும் அணிகின்றன.

எப்படியான முகக்கவசத்தை அணிய வேண்டும்? முக்கக்கவசத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாவது ‘என்-95’ கவசம் எனப்படுகிறது. இது முகத்தோடு ஒட்டிப்பொருந்தியிருக்கும். காற்றில் உலவும் எந்த நுண்மையான வைரஸும் இதைக் கடந்து உள்ளே போவது கடினம். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்தது, அறுவை சிகிச்சைக் கவசம் எனப்படுகிறது. இதில் மூன்று மடிப்புகள் இருக்கும். பொதுவாக அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாளர்களும் அணிவது. நோயாளிகளின் குருதி, உமிழ்நீர் போன்றவை இந்தக் கவசத்தைக் கடந்து உட்புகா. காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முதலான மக்களோடு கலந்து கடமையாற்ற வேண்டியவர்கள் இந்த வகைக் கவசத்தை அணிய வேண்டும்.

மூன்றாவது வகைதான் வீட்டுக் கவசம் எனப்படுகிறது. இது துணியாலானது. துவைத்துப் பயன்படுத்தக் கூடியது. எனில், நுண் துகள்களை வடிகட்டும் ஆற்றல் இதற்கு இல்லை. கோவிட்-19 தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நான்கில் ஒருவர் யாதொரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. இவர்கள் நாசியின் வழியாகவும் வாய் வழியாகவும், வெளியேறவும், அருகிருப்பவர்களுக்கு உட்புகவும் வாய்ப்புள்ள வைரஸை இந்த மூன்றாம் வகை முகக்கவசம் தடுத்து நிறுத்திவிடும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இதைத்தான் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் இப்போது பரிந்துரைக்கிறது. உலக சுகாதார அமைப்பும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டது; ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அமைப்பு முகக்கவசத்தை ஆதரிக்கிறது. முதல் இரண்டு வகை முகக்கவசங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் பொதுமக்கள் மூன்றாம் வகைக் கவசம் அணிந்தால் போதுமானது என்கிறார்கள். ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு முதலான ஐரோப்பிய நாடுகள், மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி யிருக்கின்றன. ஏனெனில், பொது இடங்களில் புழங்குகிறபோதுதான் வைரஸ் அதிகமாகப் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முகக் கவசம் முக்கியமா, இல்லையா?

யூன் க்வாக் யுங், ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர். நுண்ணுயிரியலாளர். கடந்த மாதம் அவரது ஆராய்ச்சிக் கட்டுரை ‘லான்செட்’ எனும் மருத்துவ இதழில் வெளியானது. அறுவர் அடங்கிய ஒரு ஹாங்காங் குடும்பம் கோவிட்-19இன் நதிமூலமான வூகான் நகருக்குச் சென்றது. ஐவருக்கு வைரஸ் தொற்றியது. தப்பியவர் ஒரு ஏழு வயதுச் சிறுமி. அவளை முகக்கவசம் காத்தது என்கிறார் யூன்.

அறுவை சிகிச்சைக் கவசத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழற்றிய பின்னர் பிளாஸ்டிக் பைகளில் வைத்து மூடியுள்ள குப்பைக் கூடைகளில் களைய வேண்டும். எனில், துணிக்கவசமே மக்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கவல்லது என்கின்றனர் வல்லுநர்கள். அதைப் பயன்படுத்துவதில் சில விதிகளை நாம் கைக்கொள்ள வேண்டும். முகக்கவசத்தில் ஒட்டியிருக்கும் வைரஸ் ஏழு நாள்கள் வரை தங்கியிருக்கும் என்று எழுதுகிறது ‘லான்செட்’ மருத்துவ இதழ். ஆகவே கவசத்தின் மீது கை வைக்கலாகாது. துணிக்கவசத்தை நன்றாகத் துவைக்க வேண்டும். சலவை இயந்திரமாயின் 60 பாகை வெப்பத்தில் இருக்க வேண்டும். கைகளில் துவைப்பவர்கள் குறைந்தபட்சம் அரை நிமிடம் சோப்பால் தேய்க்கவும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும் வேண்டும். கவசம் மூக்கையும் வாயினையும் தாடையையும் முழுமையாக மூடியிருக்க வேண்டும். முகத்தோடு நன்றாகப் பொருந்தியிருக்க வேண்டும். இடைவெளிகளை அனுமதிக்கலாகாது. கவசத்தைப் பின்புறமிருந்துதான் கழற்ற வேண்டும். முகக்கவசத்தை அணியும் முன்னரும் கழற்றிய பின்னரும் கைகளை சோப்பால் கழுவுதல் வேண்டும். எந்தக் காரணத்தினாலோ கவசம் ஈரமானால், தாமதிக்காமல் அதை மாற்ற வேண்டும்.

அதே வேளையில் முக்ககவசம் அணிவது ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை நல்கக்கூடும் என்றும் சில ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த மார்ச் மாத மத்தியில் ஜப்பானில் நடந்த செர்ரி மலர்த் திருவிழாவுக்கு மக்கள் வழமைபோல் குவிந்தனர். தனிமனித இடைவெளியைக் கைக்கொள்ளவில்லை. தாங்கள் தரித்திருந்த முகக்கவசம் காப்பாற்றும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. கண்காட்சி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைக் கூட்டியது.

கொரோனாவின் பாதிப்பு நாள்தோறும் முற்றிக்கொண்டே வருகிறது. உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை நெருங்குகிறது. மரணக் கணக்கு மூன்றே முக்கால் லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்தை எட்டிவிட்டது. பாதிப்பு: 2 லட்சத்தை நெருங்குகிறது; மரணங்கள் 5,600. இப்போது நாடெங்கும் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மேலதிகக் கவனம் தேவை. முகக்கவசம் முறையாக அணிவதும், சரியாகப் பயன்படுத்துவதும், சீராகப் பராமரிப்பதும் மிகுந்த பயன் தரும்.

கொரோனாவை நேரிடுவதில் தூய்மையும், தனிமனித இடைவெளியும், அடிக்கடி கை கழுவுதலும், ஒன்றுகூடல்களைத் தவிர்த்தலும் மிக முக்கியமானவை. இவைதான் இந்த யுத்தத்தில் வாளும் கேடயமுமாக விளங்கும். எந்த யுத்தத்திலும் ஆயுதங்கள் முக்கியம். கவசமும் முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism