Published:Updated:

நாற்பதுகளை வதைக்கும் `மிட்லைஃப் க்ரைசிஸ்' - தீர்வு என்ன? #LifeStartsAt40

நாற்பது வயதிற்கு மேல் மக்கள் சந்திக்கும் மனநல பிரச்னைகளும் தீர்வுகளும் பற்றி விவரிக்கிறார், மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பரபரப்பாகச் சுற்றித் திரிந்தவர், `வயசாகிடுச்சுப்பா...’ என்று சொன்னால் அவர் நாற்பதைத் தொட்டுவிட்டார் என்று பொருள். நாற்பதுகளில்தான், உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். உடல்நலம் குறித்த கவலையே மனநிம்மதியைக் கெடுக்க ஆரம்பிக்கும். மனரீதியாகவும் சிக்கல்கள் உருவாக ஆரம்பிக்கும். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் உளவியல்ரீதியாகச் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

மனநல பிரச்னைகள்
மனநல பிரச்னைகள்

``40 வயதிற்குமேல் `மிட்லைஃப் க்ரைசிஸ்' (Midlife Crisis) என்பது வரும். மனதை நிலையாக வைத்துக்கொள்ள முடியாது. நாற்பது வயதில் வாழ்க்கை அலுவலகம், வீடு என்று இயந்திர கதியில் சுழலும். சுற்றியிருப்பவர்களோடு பழக நேரம் இல்லாமல் `வேலை விட்டால் வீடு', `வீடு விட்டால் வேலை' என்றே நாள் கழியும். `இத்தனை வருடமா வாழ்க்கையில் எடுத்த முடிவுகளெல்லாம் சரியா, இல்லையா' என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். வங்கியில் வாங்கிய லோன், குழந்தைகளின் படிப்பு, உடல்நலம் என எல்லா பக்கத்தில் இருந்தும் அழுத்தம் கூடும். அதனால், வீட்டில் எல்லோரிடமும் எரிச்சலோடு பேசுவார்கள். 'இருக்கும் எல்லா பிரச்னைகளையும் எப்படிச் சமாளிப்பது' எனத் திண்டாடுவார்கள். அந்த வயதில்தான் முடி கொட்ட ஆரம்பிக்கும், உடம்பில் வலிகள் தோன்றும். குறிப்பாகப் பெண்களுக்கு 'மெனோபாஸ்' இந்த வயதில்தான் ஏற்படும். எல்லாமுமாகச் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு வெறுமையையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.

பொதுவாக, மிட் லைஃப் க்ரைசிஸில் மாட்டிக்கொள்ளும்போது, பிரச்னைகளினால் உருவாகும் அழுத்தத்தை வீட்டில் இருப்பவர்களின் மேல் காட்டிவிடுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைகள், 'வெளியே கூட்டிப் போங்கள்', 'இதை வாங்கித் தாருங்கள்' என்று கேட்கும்போது அவர்களிடம் எரிந்துவிழுவார்கள். மிக எளிதாகச் சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் இதன் மூலம் மிகப் பெரிதாக உருவெடுத்துவிடக் கூடும்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

எனவே, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, அலுவலக டென்ஷன்கள் எதுவானாலும் அதை வீட்டு வாசலுக்கு வெளியே விட்டுவிட வேண்டும். வீட்டினுள் நுழையும்போது புது மனிதனாக மாற முயலவேண்டும். அப்போதுதான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்டி நெஸ்ட் சின்ட்ரோம் (Empty nest syndrome):

அம்மா, அப்பா, பிள்ளைகள் எனக் கலகலவென இருக்கும் வீடு, பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணம் காரணமாக அவர்களைப் பிரிய நேரும்போது, பெற்றோர் ஒரு தனிமை உணர்வை அடைவர். அப்போது ஏற்படுகின்ற தனிமையின் ஏக்கம் மன அழுத்தத்தைத் தரும். இதை, 'எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம்' என்று சொல்வார்கள். இத்தகைய சூழலைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருகாலத்தில் அவர்களும் இந்தச் சூழலை அவர்களின் பெற்றோருக்கு வழங்கியிருக்கலாம். அப்போதைய காலகட்டத்தை விட இப்போது இதை அணுகுவது மிக எளிது. இப்போது இருக்கிற தொழில்நுட்ப உலகில், பிரிவு பெரும் பாதிப்பாக இருக்காது. 'வீடியோ கால்' போன்ற தொடர்பு சாதனங்கள் நம் மனம் விரும்பும் உறவோடு அருகிருக்கும் உணர்வை நமக்கு வழங்கும்.

மனநல பிரச்னைகள்
மனநல பிரச்னைகள்

பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுவதுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாறிவரும் சமூகத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தக் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக்கொண்டு இருந்தாலும், தனிப்பட்ட முறையில் வாழ்வை ரசிக்கத் தவறிவிடக் கூடாது. தினமும் நண்பர்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இசை கேட்பது, கடற்கரையில் நடப்பது போன்ற பிடித்தமான சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கத் தொடங்க வேண்டும்.

வயதாகிறது என்ற வருத்தம் தேவையற்றது. ஒரு சிலருக்கு சிறு வயதில் நமக்குப் பட்டம் விடுவது பிடிக்கும் என்றால், வயதை நினைத்துத் தயங்கத் தேவையில்லை. தாராளமாக அதைச் செய்யலாம். மனம் விரும்புவதைச் செய்யும்போது கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். வாழ்க்கையும் மீண்டும் வண்ணமயமாக மாறும்.

நம்பிக்கை
நம்பிக்கை

முறையான உணவு, சரியான உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தினைக் கட்டுக்குள் வைக்கலாம். இன்றைய நவீன மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்துகளும் சிகிச்சைகளும் வந்துவிட்டன. உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டாலே போதும் 'இளமை' திரும்புதேன்னு ஜாலியாகப் பாடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு