Published:Updated:

7000 பக்கங்கள், 5 தொகுதிகள்; சித்த மருத்துவத் தகவல்களை மீட்டெடுத்த சாம்பசிவம் பிள்ளைக்கு அஞ்சல் தலை!

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

200 பக்கத்தில் ஒரு நூலைத் தொகுத்து மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்போது, ஏழாயிரம் பக்கங்கள் அடங்கிய ஓர் அகராதியை தனி மனிதன் ஒருவர் படைத்திருக்கிறார். அதற்காக அவர் எந்த அளவு உழைத்திருக்க வேண்டும்!

சாம்பசிவம் பிள்ளை
சாம்பசிவம் பிள்ளை

சித்த மருத்துவ அகராதி... ஐந்து தொகுதிகள், ஏழாயிரம் பக்கங்கள், கிட்டத்தட்ட லட்சம் வார்த்தைகளைக் கொண்ட சித்த மருத்துவம் சார்ந்த தகவல்கள் மிகப்பெரிய பொக்கிஷமாக நம்மிடையே இருக்கிறது. மாபெரும் சாதனையான இந்த அகராதியைப் படைத்தது ஒற்றை மனிதரின் முயற்சி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்பவரின் உழைப்பில் உருவானது இந்தப் புத்தகம்.

தபால் தலை வெளியீட்டுக்கான அறிவிப்பு
தபால் தலை வெளியீட்டுக்கான அறிவிப்பு

ஒரு நொடியில் பல்லாயிரம் பக்கங்களைப் புரட்டும் ’எந்திரன்’ ரோபோ போல, சென்ற நூற்றாண்டில் எந்திரனாகச் செயல்பட்டு மிகப்பெரிய அகராதியை உருவாக்கிய ஒரு மாமனிதர்தான் இந்த டி.வி.சாம்பசிவம் பிள்ளை. பல ஆண்டுகள் தன்னலம் பாராமல் தன் உழைப்பைக் கொடுத்து இந்த அகராதிக்கு உயிர் கொடுத்துள்ளார். 200 பக்கத்தில் ஒரு நூலைத் தொகுத்து மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்போது, ஏழாயிரம் பக்கங்கள் அடங்கிய ஓர் அகராதியை தனி மனிதன் ஒருவர் படைத்திருக்கிறார். அதற்காக அவர் எந்த அளவு உழைத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர் அல்ல. காவல் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர். சித்த மருத்துவம் மற்றும் தமிழ் மொழியின்மீது இருந்த ஆர்வம் காரணமாக எண்ணிப்பார்க்க முடியாத உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு மூலிகைக்கு வேறு பெயர்கள், வழக்குப் பெயர்கள், வகைகள், மருத்துவப் பயன்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முறை என எண்ணிலடங்கா குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.
விக்ரம் குமார்

மருத்துவத்தைக் கற்றுத்தேர்ந்த மருத்துவர்களே மருத்துவம் குறித்த தகவல்களை திரட்டித் தொகுப்பதே சாதாரண விஷயமல்ல. ஆனால் மருத்துவராக இல்லாமல், சித்த மருத்துவம் சார்ந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு தகவல்களை திரட்டியிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார்? எந்த அளவு சிரத்தை எடுத்து, எவ்வளவு களப்பணி ஆற்றி அந்த அகராதியை சாத்தியமாக்கியிருப்பார்? பிரமிக்க வைக்கும் ஆளுமையாகத் தெரிகிறார் சாம்பசிவம் பிள்ளை.

மூலிகை
மூலிகை

ஒரு மூலிகைக்கு வேறு பெயர்கள், வழக்குப் பெயர்கள், வகைகள், மருத்துவப் பயன்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முறை என எண்ணிலடங்கா குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். மூலிகைகள் மட்டுமன்றி பறவைகள், அவற்றின் வாழ்வியல், சித்த மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், நோய்க் குறிகுணங்கள், பரிபாஷைகள் மற்றும் இயற்கை என இன்னும் பல விஷயங்களைச் சொல்லும் அகராதி இது. ஒரு சித்த மருந்து என்று எடுத்துக்கொண்டால், அதன் பயன் என்ன, அது செயல்படும் விதம் எப்படி என உணர்ந்து தனது அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த அகராதியைத் தொகுக்க அவர் பாரம்பர்ய வைத்தியர்களிடமிருந்து மருத்துவத் தகவல்களைத் திரட்டியிருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் கிடைத்த ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து தொகுத்திருக்கலாம். எது எப்படியோ இந்த அகராதி மாபெரும் சாதனை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆம்... ஏழாயிரம் பக்கங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாதல்லவா?

அவர் வாழ்ந்தகாலத்தில் கூகுள் வசதியோ, தொலைத்தொடர்பு வசதிகளோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பேருந்துவசதிகூட அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அகராதிக்காக அலைந்து அலைந்து தேடலிலேயே அவரது காலம் செலவிடப்பட்டிருக்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் அந்த அளவுக்குக் கடுமையான உழைப்பைக் கொடுத்து சாதித்திருக்கிறார்.
விக்ரம் குமார்
அகத்தியர்
அகத்தியர்

கூகுள் தேடு தளத்தில் எதைத் தேடினாலும் கிடைப்பதுபோல, தமிழ் சார்ந்து என்ன விஷயங்களைத் தேடினாலும் கொடுக்கும் அக்கால கூகுள் தேடல் இயந்திரம் (Search engine) இவரது அகராதி. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு பொருளின் பயன் என்ன, செயல்படும் முறை என்ன என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்துள்ளார். தமிழ் தெரியாதவர்களுக்கும் இந்த அகராதி சித்த மருத்துவ மேன்மையைப் புரிய வைக்கும். மரபு விஷயங்களுடன் சேர்த்து, மரபில் இருக்கும் அறிவியல் தரவுகள், அவற்றின் வழக்கு முறைகள், சித்தர்களைப் பற்றிய குறிப்புகள், தாவரவியல், வேதியியல் என ஒரு முழுமையான களஞ்சியமே இந்த அகராதி. தமிழ் வார்த்தைகளுக்கோ சித்த மருத்துவக் குறிப்புகளுக்கோ விடை தேவையென்றால், இவரது அகராதியைப் புரட்டிப் பார்த்தால் போதும். ஒரு வார்த்தைக்கு எண்ணற்ற குறிப்புகள் காணப்படும். ஒற்றை எழுத்துக்கு பல்வேறு அர்த்தங்கள், அதன் பயன்கள் என நம் கற்பனையைத் தூண்டும் அளவுக்கு இந்த அகராதி சிறப்பு வாய்ந்தது.

ஒரு சொல்லுக்கு சில சொற்களால் மட்டுமே விளக்கம் என்று இல்லாமல், பல்வேறு தகவல்களை மிக விசாலமாகப் பகிர்ந்திருப்பதும் இவரது சிறப்பு. அகராதியைப் படித்துப் பார்த்தால், எப்படி ஒரு மனிதரால் இந்த அளவுக்கு உழைப்பு கொடுத்திருக்க முடியும் என்பது ஆச்சர்யமே. அவர் வாழ்ந்தகாலத்தில் கூகுள் வசதியோ, தொலைத்தொடர்பு வசதிகளோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பேருந்துவசதிகூட அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அகராதிக்காக அலைந்து அலைந்து தேடலிலேயே அவரது காலம் செலவிடப்பட்டிருக்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் அந்த அளவுக்குக் கடுமையான உழைப்பைக் கொடுத்து சாதித்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தகைய பெரும் பணியைச் செய்த அவரை மெச்சாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.

இன்றைய இளம் தலைமுறை அவரை ஒரு ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு அவரவர் துறையில் சாதிக்கலாம். சாம்பசிவம் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்துப் பாருங்கள், அகராதியைப் புரட்டிப் பாருங்கள். அந்த மாமனிதரின்மீது மிகப்பெரிய மரியாதை உண்டாகும்.

வாழ்க்கை முழுவதும் துயரத்தைத் தவிர, வேறு எதையும் கண்டிராத மாமனிதரின் முழுமையான பங்களிப்பு இந்த அகராதி. தனது பிள்ளைகளை இழந்த துன்பம், மனைவியை இழந்த சோகம் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு, இப்படியொரு மாபெரும் பணியைச் செய்திருக்கிறார். அத்தகைய மனிதரின் மனவலிமையை எதனோடு ஒப்பிடுவது? மனரீதியாக ஒரு மனிதர் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்கு சாம்பசிவம் பிள்ளை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவரது உழைப்பால் இன்று பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

இன்றைய இளம் தலைமுறை அவரை ஒரு ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு அவரவர் துறையில் சாதிக்கலாம். சாம்பசிவம் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்துப் பாருங்கள், அகராதியைப் புரட்டிப் பாருங்கள். அந்த மாமனிதரின்மீது மிகப்பெரிய மரியாதை உண்டாகும். சித்த மருத்துவ மாணவர்களுக்கும் சரி, ஆராய்ச்சியாளர்களுக்கும் சரி, சித்த மருத்துவத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது அவரது அகராதி. சித்த மருத்துவம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த அகராதியில் விடை கிடைக்கும் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். ஒரு பல்கலைக்கழகம் பலரை பணியில் அமர்த்தி, பல கோடிகள் செலவு செய்து, நிகழ்த்தவேண்டிய செயலை ஒற்றை மனிதராக நிகழ்த்தி சிகரம் தொட்டுள்ளார். ஆனால் அகராதிக்காக பெரிய அளவில் அவருக்கு அங்கீகாரமோ, அவரது உழைப்புக்கான ஊதியமோ கிடைக்கவில்லை.

சித்த மருத்துவமனை
சித்த மருத்துவமனை
`அந்தத் தட்டில் அனைவரும் உண்பார்களே..!’ - உ.பி பள்ளியில் சாதிப் பாகுபாடு? #Shocking
ஒவ்வொரு தமிழரிடமும் சித்த மருத்துவத்தின்மீது ஆர்வம் கொண்ட அனைவரிடமும் இருக்க வேண்டிய அகராதி இது. என்னுடைய வீட்டு நூலகத்தில் அழகாக எட்டிப்பார்க்கிறது சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதி. உங்கள் வீட்டில்?
விக்ரம் குமார்

தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து அணைகட்டிய பென்னி குவிக் போல, தனது சொத்துகளை விற்று தான் சம்பாதித்த பணம் முழுவதையும் அகராதியின் பணிகளுக்காகச் செலவிட்ட சாம்பசிவம் பிள்ளை போற்றப்பட வேண்டியவர்களில் மிக முக்கியமானவர். சித்த மருத்துவத்தில் உள்ள பொக்கிஷமான ஆறுகளை, ஆழியில் மொத்தமாகக் கொண்டு சேர்த்து அளவிட முடியாத குறிப்புகளைத் தொகுத்துள்ளார் அவர். அள்ள அள்ளக் குறையாத மணற்கேணி இந்த அகராதி. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இது சாதாரண அகராதி அல்ல; கவிபாடும் பேரகராதி. தமிழ் மருத்துவத்துக்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கத் தேவையான அனைத்துத் தகவல்களையும் கொண்ட திரட்டு இந்தக் கலைக்களஞ்சிய அகராதி. புத்தக வாசனை மதிமயக்குவது இயல்பு. அதேபோல் இந்த அகராதியை மோந்து பார்த்தால் சித்த மருத்துவம் மற்றும் தமிழ் மரபின் வாசனை நம்மை மெய்மறக்கச் செய்யும். அகராதியில் அச்சிடப்பட்டுள்ள ஒவ்வொரு எழுத்தும் அவரது உன்னத சேவைக்கான அத்தாட்சி. தமிழர்களின் மருத்துவமுறைக்கென ஒரு தனி அகராதியாக, சாம்பசிவம் பிள்ளையின் விலைமதிப்பில்லா அகராதி திகழ்கிறது.

Narendra Modi
Narendra Modi

சித்த மருத்துவத்துக்காக உழைத்த இந்த மாமேதைக்கு இப்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை பிரதமர் மோடியால் இன்று வெளியிடப்படுவது சித்த மருத்துவம் மற்றும் தமிழுக்குக் கிடைத்த பெருமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு டி.வி.சாம்பசிவம் பிள்ளை, தனது அயராத உழைப்புக்காக முதன்முதலாக இந்திய அரசால் நினைவு கூரப்படுகிறார். அவரது அரும்பணிக்கு தபால் தலை வெளியிடுவதோடு மட்டும் நின்று விடாமல், இன்னும் பல முன்னெடுப்புகள் நிகழ வேண்டும். ஒவ்வொரு தமிழரிடமும் சித்த மருத்துவத்தின்மீது ஆர்வம் கொண்ட அனைவரிடமும் இருக்க வேண்டிய அகராதி இது. என்னுடைய வீட்டு நூலகத்தில் அழகாக எட்டிப்பார்க்கிறது சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதி. உங்கள் வீட்டில்?