Published:Updated:

ஏர்வாடி அவலம்: சட்ட நடைமுறைகளால் தவிக்கும் மனநோயாளிகள்!

விகடன் டீம்

காப்பகத்தில் நோயாளிகளைச் சேர்ப்பதில் நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அதனால்,

ஏர்வாடி
ஏர்வாடி

கடந்த 2001, ஆகஸ்ட் 6-ம் தேதி ஏர்வாடி மனநலக் காப்ப கத்தில் நடந்த கொடூர தீவிபத்தை, இப்போது நினைத்தாலும் குலைநடுங்குகிறது! தன்னிலை அறியாமல், திக்கற்றுத் தவித்த மனநோயாளிகள் 28 பேரும் தீயின் கொடிய நாவால் தீண்டப்பட்டு, தப்பி ஓடக்கூட முடியாமல் துள்ளத்துடிக்க கரிக்கட்டையான சோகம் அது. சம்பவம் நடந்து 18 ஆண்டுகளான நிலையில், இப்போது எப்படி இருக்கிறது ஏர்வாடி? விரிவாக படிக்க... http://bit.ly/2lZp52R

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், சவுதி அரேபியாவில் இருந்து வந்தவரான அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷகீது பாதுஷா நாயகத்தின் அடக்கத்தலம் உள்ளது. இந்தத் தர்காவில் எரியும் விளக்கில் உள்ள எண்ணெய் மற்றும் புனிதநீர் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்பது மக்களின் நம்பிக்கை. குறிப்பாக, மனநலப் பிரச்னைகள் தீர்க்கும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் நாடு முழுவதும் இருந்து மனநோயாளிகள் இங்கு அழைத்துவரப்படுகிறார்கள்.

ஏர்வாடி
ஏர்வாடி

ஏர்வாடி தர்காவுக்குள் நுழைந்தோம். ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒவ்வொரு கதை. நமக்குத்தான் அது கதை. அவர்களுக்கோ, அது வாழ்க்கை; கடந்துபோன வாழ்க்கை... கைவிடப்பட்ட வாழ்க்கை; கறுப்பு வெள்ளைகளில் நிழலும் நிஜமுமாக உழலும் வாழ்க்கை; கற்பனையில் மட்டுமே சஞ்சரிக்கும் வாழ்க்கை. அந்தக் கற்பனை உலகின் காட்சிகளை அவர்கள் கண்டுகளிப்பதற்கு சாட்சியாக விரிகிறது அவர்களின் ஏகாந்த சிரிப்பு! சிலரோ, தர்கா வாசலில் வந்து நிற்கும் வாகனங்களில் உணவுக்காகக் கையேந்தியபடியே காத்துக் கிடக்கிறார்கள்.

'கை, கால்களைக் கட்டக் கூடாது' என்று நீதிமன்றம் சொல்லியிருந்தாலும், தீவிர மனநல பாதிப்புக்குள்ளானவர்களின் கை, கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. சட்ட நடைமுறைகளால் காப்பகத்தில் சேர்க்க முடியாமல் பலரும் தர்காவில் தவித்துவருகிறார்கள்.

"மனநோயாளிகளைக் காப்பகத்தில், சேர்ப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?" என்று ஏர்வாடி தர்காவின் நிர்வாகச் சபை முன்னாள் தலைவர் அம்ஜத் ஹுசைனிடம் கேட்டோம். "காப்பகத்தில் நோயாளிகளைச் சேர்ப்பதில் நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அதனால், இங்கு வரும் மனநோயாளிகள் தர்காவிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிதீவிர தன்மைகொண்ட நோயாளிகளைப் பாதுகாக்கவும் கட்டுப்படுத்தவும் நோயாளிகளின் உறவினர்களே சங்கிலியால் அவர்களைக் கட்டிவைக்கிறார்கள். அரசே நேரடியாக மனநலக் காப்பகத்தை நடத்த வேண்டும் அல்லது தர்கா நிர்வாகத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்" என்றார்.

erwadi
erwadi

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநலக் காப்பகப் பொறுப்பாளரான டாக்டர் பெரியார் லெனினிடம் கேட்டோம். "தர்காவில் தங்கியுள்ள நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் அறக்கட்டளை நிர்வகித்துவரும் காப்பகத்தில் மனநோயாளிகளை அனுமதிக்க, இந்திய மனநலச் சட்டத்தின்கீழ் கிராம நிர்வாக அலுவலர் முதல் நீதிமன்றம் வரை பல கட்டங்களாக அனுமதி பெற வேண்டியிருக்கிறது. அந்தச் சட்டத்தை எளிமையாக்க, நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார் அக்கறையுடன்.

- ஏர்வாடியின் உண்மை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு கண்டதன் அடிப்படையில், மனநோயாளிகளின் துயரமான பின்னணிகளுடன், ஜூனியர் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > எப்படி இருக்கிறது ஏர்வாடி? - கட்டுப்பாடுகள் ஏராளம்... கண்ணீரில் உறவுகள்... சட்டத்தை எளிமையாக்குமா அரசு? https://www.vikatan.com/news/general-news/the-tragic-situation-of-ervadi-a-roundup

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/