Published:Updated:

அன்று வேப்பிலை... இன்று ஸ்டிக்கர் - கொள்ளை நோய் நாள்களின் நினைவைப் பகிரும் தேனி பாட்டிகள்

கொரோனா

அனுபவம் மிக்க, வயதான தேனியைச் சேர்ந்த பாட்டிகள் சிலரிடம் கொரோனா குறித்துப் பேசினோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் நம்மை சிந்தனைக்குள்ளாக்கின.

அன்று வேப்பிலை... இன்று ஸ்டிக்கர் - கொள்ளை நோய் நாள்களின் நினைவைப் பகிரும் தேனி பாட்டிகள்

அனுபவம் மிக்க, வயதான தேனியைச் சேர்ந்த பாட்டிகள் சிலரிடம் கொரோனா குறித்துப் பேசினோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் நம்மை சிந்தனைக்குள்ளாக்கின.

Published:Updated:
கொரோனா

ஒரு நாள் மட்டுமே இருந்த ஊரடங்கு, தற்போது 21 நாள்களாக கூட்டப்பட்டிருக்கிறது. “நீங்கள், 21 நாள் ஊரடங்கைக் கடைபிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்தியா 21 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிடும்” என்று எச்சரிக்கிறார், பாரத பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ரொம்பவும் சீரியஸாகப் பார்க்கப்படும் கொரோனோவுக்கு தனிமைப்படுத்திக்கொள்வதே வழி என்கின்றனர், அறிவியல் மருத்துவ வல்லுநர்கள். தேனியைச் சேர்ந்த பாட்டிகள் சிலரிடம் பல வருடங்களுக்கு முன் வந்த கொள்ளை நோய் குறித்த நினைவுகளைப் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அப்போ எனக்கு 10 வயது. ஊரில் காலரா வேகமாகப் பரவியது. யாருக்காவது காலரா இருந்தால், அந்தக் குடும்பத்தையே மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுவிடுவார்கள்.
பிரேமாவதி பாட்டி
சீனியம்மாள்
சீனியம்மாள்

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த 92 வயதாகும் பாட்டி சீனியம்மாளிடம் பேசியபோது, சில தகவல்களைக் கொடுத்தார். "கொரோனா எல்லாம் பெரிய விசயமே இல்லை. ஜாக்கிரதையா இருந்தா பயப்படத் தேவையில்லை. அன்று அம்மை நோய், இன்று கொரோனா அவ்வளவுதான். முன்னெல்லாம், அம்மை இறங்கிய வீடு இது என அடையாளப்படுத்த வீட்டின் வாசலில் வேப்ப இலையைக் கட்டிவைப்பார்கள். அதைப் பார்த்து, யாரும் அந்த வீட்டுக்கு செல்ல மாட்டார்கள். அம்மை இறங்கிய வீட்டுக்காரர்கள் யாரும், மற்ற வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். சில கிராமங்களில், அம்மை நோய் வந்தவர்களை, ஊர் மத்தியில் உள்ள கோயிலில் விட்டுச்செல்வார்கள். அவர்களுக்கு ஊர் வைத்தியர்கள் வைத்தியம் பார்ப்பார்கள். இப்படி, அம்மை நோய் வந்தால் பல கட்டுப்பாடுகள் இருக்கும். எல்லாம் மனிதர்களை தனிமைப்படுத்ததான். இதனால், ஊரில் அம்மை நோய் பரவாமல் தடுக்க முடியும். அதனைத்தான் இப்போது கொரோனாவிற்கும் சொல்கிறார்கள். இதெல்லாம் காலம் காலமாக நமக்கு பழக்கப்பட்ட ஒரு விசயம் தான். இதனால், எளிதில் கொரோனாவை விரட்ட முடியும். மக்கள் பயப்படாமல் இருந்தாலே போதும்” என்றார் அழுத்தமாக.

அன்று வேப்ப இலையைக் கட்டி, அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் வீடு என அடையாளப்படுத்தினால், இன்று வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஒட்டி, இது கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்கள் வீடு என அடையாளப்படுத்துகிறது அரசு.

பிரேமாவதி
பிரேமாவதி

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கண்காணிப்புச் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தேனியைச் சேர்ந்த பிரேமாவதியிடம் பேசினோம். “எனக்கு இப்போ 80 வயதாகிறது. அப்போ எனக்கு 10 வயது. ஊரில் காலரா வேகமாகப் பரவியது. யாருக்காவது காலரா இருந்தால், அந்தக் குடும்பத்தையே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். கடுமையான கட்டுப்பாடுகளால் காலராவைக் கட்டுப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அம்மை நோய் வந்தது. ஆனால், அம்மை நோயை மக்கள் நம்பிக்கைகளில் ஒன்றாக்கியதால், மருந்து எடுத்துக்கொள்ளாமல், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி மூலம் அம்மை நோயுடன் போராடினார்கள். இப்போ கொரோனா வந்திருக்கிறது. கொரோனாவைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டாலே எந்த வைரஸூம் நம்மை நெருங்காது.

வாரம் இரண்டு முறை வீட்டின் தரைப்பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு கழுவி விட வேண்டும். நாம் பயன்படுத்தும் பொருள்கள், பாத்திரங்களைத் தினம்தோறும் கழுவி, சூரிய ஒளி படும்படி வைத்து, பின்னர் எடுத்து பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை வாங்கி வந்தால், அதை நன்கு கழுவ வேண்டும்.

அந்தக் காலத்தில், வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தால், கை, கால்களை நன்கு கழுவிவிட்டுதான் உள்ளே வருவோம். காலப்போக்கில் அந்தப் பழக்கம் மாறிவிட்டது. அதை இப்போது பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும். இப்படி, நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டாலே எந்த நோயும் நம்மை நெருக்காது. தவிர, இப்போது மருத்துவ அறிவும் முன்னைக்கு இப்ப நல்ல வளர்ச்சி கண்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரையையும் பின்பற்றினால் பயம் தேவையில்லை” என்றார்.

என்.ஆர்.டி நகரைச் சேர்ந்த 70 வயதாகும் புஷ்பவள்ளியிடம் பேசினோம். “கொரோனாவைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். நமக்கு ஏதோ நடக்கப்போகிறது என அச்சப்படுகிறார்கள். முன்னெல்லாம் அம்மை நோய் வந்தால் எப்படி நடந்துகொள்வோமோ அப்படி நடந்துகொண்டாலே எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பாக, சுத்தமாக இருந்தாலே வீட்டில் எந்த நோயும் வராது. அம்மை நோய் வந்தவர்களை, வேப்ப இலையைப் போட்டு, அதன்மீது படுக்கவைத்து, மஞ்சள் அரைத்து உடலில் பூசுவோம். அம்மை நோய் வந்தவர்களின் அருகில்கூட வீட்டில் இருக்கும் மற்றவர்கள் செல்ல மாட்டார்கள். ஒரே ஒரு நபர் மட்டுமே அவர்களைப் பார்த்துக்கொள்வார். அப்படி கட்டுப்பாட்டோடு இருப்போம். நம்மையும் நமது வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும். கொரோனாவை அடித்து விரட்டலாம்!” என்றார்.

புஷ்பவள்ளி
புஷ்பவள்ளி

கிராமம் வரை மருத்துவ வசதிகள் சென்று சேராத காலத்திலேயே கொள்ளை நோய்களை எதிர்கொண்டு போராடியவர்கள் நாம். இன்றைக்கு மருத்துவ அறிவும் கைதேர்ந்த மருத்துவர்களும் பெருகியிருக்கும்போது, மக்கள் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி சமூகப் பரவலைத் தவிர்க்கவேண்டியது அவசியம். மக்கள் ஒத்துழைப்பில் இந்தக் கொடிய கொரோனா காலத்தைக் கடப்போம்.