Published:Updated:

Covid Questions: மாஸ்க் அணிவதால் முகமெல்லாம் பருக்கள்; என்னதான் தீர்வு?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக மாஸ்க் அணிந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக மாஸ்க் அணிகிற இடத்தில் மட்டும் பருக்கள், சின்ன கட்டிகள் போன்று வருகின்றன. பலவித மாஸ்க்குகளை மாற்றிப் பார்த்துவிட்டேன். எவ்வளவு காஸ்ட்லியான மாஸ்க் அணிந்தாலும் இந்தப் பிரச்னை நீடிக்கிறது. என்ன செய்வது?

- பூமிகா (விகடன் இணையத்திலிருந்து)

செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு 'மாஸ்க்னே' (Maskne) என்று பெயர். முகத்தில் மாஸ்க் அணிகிற இடத்தில் பருக்கள், சருமம் சிவந்துபோவது, எரிச்சல் போன்றவை ஏற்படுவது மாஸ்க்னேயின் அறிகுறிகள். மாஸ்க் அணிவதால் முகத்தில் குறிப்பிட்ட பகுதியின் சருமமானது அழுத்தப்படுகிறது. அந்த இடத்திலுள்ள சரும துவாரங்கள் சுவாசிக்க முடியாமல் மூடப்படுகின்றன. நாம் சுவாசிக்கும்போது வெளியேறும் ஈரம் கலந்த காற்று, நம் சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதம் போன்றவையும் இதற்கு காரணமாகலாம். நாம் வெளியேற்றும் மூச்சுக் காற்றில் பாக்டீரியா இருக்கலாம். அதனாலும் சருமத்துக்கு உபயோகிக்கும் க்ரீம், மேக்கப் போன்றவற்றால் சரும துவாரங்கள் அடைபட்டு, அதன் விளைவாகவும் பருக்கள், கட்டிகள் உருவாகலாம். தவிர சருமத்திலுள்ள நுண்ணிய ரோமங்கள் வெளியே வரும்போது ஏற்படும் உறுத்தலாலும் இப்படி ஏற்படலாம்.

இப்போதைய சூழலில் மாஸ்க் அணிவதைத் தவிர்த்துவிட்டு இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வருவது பாதுகாப்பானதல்ல. மாஸ்க் அணிவதென்பது நம் உயிரைக் காக்கும் அவசிய விஷயங்களில் ஒன்று என்றாகிவிட்டது.

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்?

தினமும் இருவேளைகள் ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவ வேண்டும். எண்ணெய்ப் பசையான சருமம் கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் `சாலிசிலிக் அமிலம்' ( Salicylic Acid ) கலந்த ஃபேஸ்வாஷ் உபயோகித்தால் சரும துவாரங்கள் அடைபடாமல் இருக்கும். ஃபேஸ்வாஷ் உபயோகித்ததும் ஜெல் வடிவ அல்லது வாட்டர் பேஸ்டு ( Water Based ) மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும்.

சன் ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்றால் மாஸ்க் மூடும் இடங்கள் தவிர்த்து, வெளியே தெரியும் நெற்றி, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் அதை உபயோகித்தால் போதும். மாஸ்க்னே பிரச்னை உள்ளவர்கள் சில நாள்களுக்கு மேக்கப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மேக்கப்பை தவிர்க்கவே முடியாத துறையில் இருக்கிறேனே என்பவர்கள், பவுடர் மேக்கப் மட்டும் உபயோகிக்கலாம். மிகவும் ஹெவியான மேக்கப் வேண்டாம். அது சரும துவாரங்களை அடைத்து, மாஸ்க்னே பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும்.

face mask | முகக்கவசம்
face mask | முகக்கவசம்
AP Photo/Bikas Das
Covid Questions: மாஸ்க் அணிந்தாலே கண்கள் வறண்டுபோகின்றன; என்ன செய்வது?

மாஸ்க் விஷயத்திலும் கவனம் தேவை. மூன்றடுக்கு காட்டன் மாஸ்க் மிகச் சிறந்தது. நாள் முழுவதும் மாஸ்க் அணிந்தபடி வேலை செய்ய வேண்டியவர்கள், காலை ஒன்று, மதியம் ஒன்று என இரண்டு மாஸ்க்குகளை மாற்றலாம். அந்த மாஸ்க்குகளை முறையாகத் துவைத்து உபயோகிக்க வேண்டும். அதிக வாசனையில்லாத, மைல்டான டிடெர்ஜென்ட் உபயோகித்துத் துவைக்க வேண்டும்.

சரும ஆரோக்கியத்துக்கு அவசியமான நிறைய தண்ணீர் குடிப்பது, பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது போன்றவற்றையும் மிஸ் செய்ய வேண்டாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு