Published:Updated:

அறிவான குழந்தையை உருவாக்க கருவிலேயே வழியிருக்கிறது! - இப்படிக்குத் தாய்மை - 9

தாய்மை
தாய்மை

ஒரு குழந்தையுடைய மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான காலகட்டம், அது தாயின் வயிற்றிலிருக்கிற கடைசி மூன்று மாதத்தில் இருந்து ஆரம்பித்து அதன் 3 வயது வரைக்குமானது.

ஒரு தாய் ஆரோக்கியமான, நல்ல குணமுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பது அவருடைய குடும்பத்துக்கான மகிழ்ச்சித் தருணம் மட்டும் கிடையாது. அதுவொரு சமூகத்துக்கான சந்தோஷம். ஒரு குழந்தையை அறிவில், ஆற்றலில், பகுத்துணரும் பாங்கில், பலருடன் பழகும் விதத்தில், உயர்ந்த எண்ணங்களில், பல்வேறு நுண்ணறிவில், தெளிந்த சிந்தனையில், அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவதில், அமைதியான குணத்தில்... இப்படி இன்னும் பல்வேறு விஷயங்களில் நல்ல மனிதனாக உருவாக்கித் தருவது என்பது இந்தச் சமூகத்துக்கு ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய ஒரு பெரும் அறப்பணி.

தாய்மை
தாய்மை

சரி, ஒரு குழந்தை ஆரோக்கியமாக உருவாக, கருத்தரிப்பதற்கு முன்னால் என்னென்ன செய்ய வேண்டும், கருத்தரித்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் இதுவரை பார்த்தோம். 

உடல் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியத்துக்கான ஆணிவேர் என்பதையும் தெரிந்துகொண்டோம். சரியான உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு மனதின் செயல்பாடும் கேள்விக்குறியே. குழந்தையின் கர்ப்பகால வளர்ச்சியும், உருவாக்கமும், பின்னாளில் அதன் எதிர்காலத்தை எப்படியெல்லாம்  செப்பனிடுகிறது என்பதற்கான மேலும் பல உதாரணங்களை இந்த அத்தியாயத்தில் காண்போம்.

நம் கதை மாந்தர்களான பானுவும் சீதாவும் இந்த அத்தியாயத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள். இதுவரை வராண்டாவில் நடக்கும்போது பார்த்தும் பார்க்காமலும், சின்ன சிரிப்புடன் கடந்துவிடுவார்கள். பானு அரக்கப்பரக்க ஓடுவதில் கவனமாக இருப்பாளே தவிர, அருகில் என்ன நடக்கிறது யார் எதிரில் வருகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு நாள்கூட நிதானித்துப் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட பானுவுக்கு கர்ப்பகாலம் குறித்து எண்ணற்ற சந்தேகங்கள் இருப்பதை, வீட்டுப் பணிப்பெண் மாலா வழியாகத் தெரிந்துகொண்டு, சீதா அவர்களுடைய வீட்டுக்கே வந்துவிட்டாள்.

தாய்மை
தாய்மை

பானுவுக்கு தன் உடல்நிலை மற்றும் கர்ப்பகாலம் குறித்து எண்ணற்ற சந்தேகங்கள் இருந்தாலும், தைரியமான பெண்தான். ஆனால், பானுவின் தாய்தான் மிகுந்த பதற்றமும் குழப்பமாய் இருந்தார். பானு எழுந்து நின்றாலும் நடந்தாலும், `அச்சச்சோ... வேண்டாம்' எனத் தடுத்துக்கொண்டிருந்தார். பாசத்தைக் காட்டுவதாக எண்ணி, மகளை ஓயாமல் தாங்கிப்பிடித்து, பானுவை ஒரு நோயாளிபோல மாற்றிவிட்டாள். வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களிலேயே சீதாவுக்கு இது புரிந்துவிட்டது.

'கர்ப்பம் தரிக்க..!' - தம்பதிகளுக்கான வாழ்வியல் பரிந்துரைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 05

உபசரிப்பு முடிந்தபிறகு, பானுவிடம் சீதா ஒரு நெருங்கிய தோழி போல பேச ஆரம்பித்தாள். ``உடல் சற்று பலவீனமாக இருப்பதால், பெட் ரெஸ்ட்டில் இருக்கிறீர்கள். ஆனால், மனதின் வலிமையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நோயாளி போன்ற எண்ணத்தோடு கர்ப்பகாலத்தில் ஒரு நாளும் இருக்கக் கூடாது. இந்தச் சூழ்நிலையை எண்ணி நீங்கள் கவலைப்படும்போது உங்கள் உடலின் சக்தி இன்னும் பலமடங்கு குறைந்து சோர்வடைய ஆரம்பிப்பீர்கள். அதனால், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் உங்களுடைய கவலை, சோர்வு இரண்டும் சென்றுவிடும். இப்போதும் உங்களுக்கு ஒன்றும் தவறாக நடந்து விடவில்லை. இத்தனை காலம் வேலை வேலை என்று பரபரப்பாகவே இருந்த உங்களுக்கு கடவுள் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறார், அவ்வளவே...' என்று சொல்ல, பானுவின் முகத்திலும் தெளிவு தென்பட ஆரம்பித்தது.

தாய்மை
தாய்மை

``என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்னுடைய எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் புரியுமா சிஸ்டர்'' - குழப்பத்தோடு கேட்டாள் பானு. ``ஆமாம் பானு. நீங்கள் இடைவிடாமல் நினைக்கும் எண்ணக்குவியலானது உங்கள் குழந்தையின் மூளையில் நிச்சயமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் உற்சாகமாக இருக்கும்போது உங்கள் கருவில் இருக்கிற குழந்தையைச் சுற்றியிருக்கிற அமினியாடிக் திரவத்தில் நேர்மறையான அணுக்கூறுகள் (positive molecules) சூழ்ந்திருக்கும். கவலையாக இருக்கும்போதோ அமினியாடிக் திரவத்தில் எதிர்மறை அணுக்கூறுகள் (negative molecules) சூழ்ந்திருக்கும்.

உங்களுடைய நாள்பட்ட மனஅழுத்தம் நிச்சயம் குழந்தையின் வளர்ச்சியில் சிறு அளவிலோ, பெரும் அளவிலோ பாதிப்பை உண்டாக்கும். பிறந்தவுடன் இல்லாவிட்டாலும் குழந்தையின் வளர்ச்சியில் பின்னாளில் நிச்சயம் பிரதிபலிக்கும். அதனால்தான் கர்ப்பிணிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், மனம் வருத்தப்படக் கூடாது, பிடித்ததைச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்கிறார்கள்'' பேசி முடித்த சீதாவை, ``அறிவியல்பூர்வமாக இத்தனை தகவல்களைச் சொல்லறீங்களே சிஸ்டர். இதைப்பத்தி படிச்சிருக்கீங்களா'' என்று பானு ஆச்சர்யம் காட்ட, அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த பணிப்பெண் மாலா, ``எங்கேயாவது ஏதாவது புதுசா கத்துத் தர்றாங்கன்னா சீதாக்கா உடனே கிளம்பிடுவாங்க'' என்று சொல்ல, ``என் இரண்டு குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டேன். அப்படித் தெரிந்துகொண்டதுதான் இதெல்லாம்'' என்றாள் சீதா சின்ன சிரிப்புடன்.

தாய்மை
தாய்மை

```உங்ககூட பேசினாலே எனக்கு யுனிவர்சிட்டிலே பாஸ் ஆன மாதிரிதான். இனிமே நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க'' என்று பானு ஆர்வமாகக் கேட்க, சீதா மறுபடியும் பேச ஆரம்பித்தாள். ``வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையானது ஒவ்வொரு நிமிடத்துக்கும் இரண்டு லட்சத்துக்கு (நியூரான்ஸ்) மேற்பட்ட செல்களால் வளர்ச்சி அடைந்து வரும். கர்ப்பகாலத்தில் குழந்தையின் மூளையில் நடக்கும் சில நியூரான் கனெக்ஷன்ஸ்தான் பின்னாளில் அந்தக் குழந்தையின் செரிமானம், ஆற்றல், சிந்தனை, ஒருமுகத்தன்மை, நிணநீர் மண்டலங்களின் செயல்திறன், கைகால் போன்ற உறுப்புகளின் வேகம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஒரு வரியில் சொல்வதென்றால் ஒரு குழந்தை விவேகமாக உருவாகிற தருணம் இதுதான்.

உடம்புங்கிறது, ஃபார்முலா ஒன் ரேஸ் கார் மாதிரி!  இப்படிக்கு... தாய்மை - தொடர் 03

ஒரு குழந்தையுடைய மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான காலகட்டம், அது தாயின் வயிற்றிலிருக்கிற கடைசி மூன்று மாதத்தில் இருந்து ஆரம்பித்து அதன் 3 வயது வரைக்குமானது. அதிலும் முதல் இரண்டு ஆண்டுகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குழந்தையின் மூளையில் மாற்றங்கள் நிகழும். அந்தக் குழந்தையானது பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகர்வது எல்லாமே மூளையில் கனெக்ஷனாக மாறி காலத்துக்கும் நிற்கும்'' - சீதா சொல்லியவற்றை ஆச்சர்யம் தாங்காமல் கேட்டுக்கொண்டிருந்த பானு, நாம் ஓடியாடி இருக்க முடியாவிட்டாலும் மனதளவில் இறுக்கமாக இல்லாமல் எப்போதும் போல உற்சாகமாய் இருக்க வேண்டும் என அப்போதே முடிவெடுத்தாள்.

தாய்மை
தாய்மை

தன் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட பானுவிடம், ``ஆரோக்கியத்துக்கான நான்கு தூண்களான உணவு, உறக்கம், உற்சாகம், உடற்பயிற்சி ஆகியவை சரியாக இருந்தால்தான் ஒரு கர்ப்பிணி 100 மதிப்பெண் வாங்க முடியும். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதென்றால் உங்களைக் கடவுளின் அவதாரமாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு உயிரை ரத்தமும் சதையுமாக உருவாக்கி வெளியே கொண்டு வரும் பெண்கள் யாவரும் கடவுளின் அவதாரங்கள்தான். கர்ப்பகாலம் முழுவதும் உங்களின் ஆழமான எண்ணங்களின் தாக்கமே உங்கள் குழந்தையின் குணநலன்களாய் பிரதிபலிக்கும்.

ஆக உங்களின் எண்ணப்படியே உங்கள் குழந்தை சிருஷ்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் முழு ஆரோக்கியத்தோடும், நல்ல ஆற்றலோடும், உற்சாகத்தோடு வலம்வருவதாய் மனதார நம்புங்கள்'' என்று சீதா சொல்லி முடிக்க, பானுவின் உடல் உற்சாகத்தில் புல்லரித்தது.

கருவையும், குழந்தையையும் பற்றி இன்னும் பல ஆச்சர்யத் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சீதா சொல்லக் கேட்போம்.

தாய்மை
தாய்மை

வீட்டிலேயே செய்யலாம் புரதப் பவுடர்!

பாதாம் - ஆறு மணி நேரம் ஊறவைத்து, காயவைத்தது -100 கி

முந்திரி - 25 கி

பிஸ்தா -100 கி

வால்நட் - 100 கி

பூசணி விதைகள் - 100 கி

சூர்யகாந்தி விதைகள் - 100 கி

சணல் விதைகள் - 100 கி

சப்ஜா விதைகள் - 100 கி

சியா விதைகள் - 100 கி

ஆளி விதைகள் - 100 கி

முலாம்பழம் விதைகள் - 100 கி

லவங்கப்பட்டை - சிறு துண்டு

ஏலக்காய் - 2 அல்லது 3

எல்லாவற்றையும் வறுத்து, பொடி செய்து இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு தினமும் சாப்பிட 8 முதல் 10 கிராம் வரை புரதம் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு