Published:Updated:

மரணம் வரை போராடும் மருத்துவர்கள், உபாதைகளோடு சேவைசெய்த செவிலியர்கள்... மனதை உருக்கும் நிகழ்வுகள்!

கொரோனா
கொரோனா

கொரோனா தாக்குதலுக்கும் அதற்கான சிகிச்சைகளுக்கும் இடையில் உலகம் முழுவதும் மனதை ஈரமாக்கும் பல சம்பவங்களும் நடந்துள்ளன. அவற்றின் தொகுப்பு இது..

``கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் கால் பதித்துவிட்டது. 'உலகளாவிய பெருந்தொற்று' என்று WHO சொன்னது அசுர வேகத்தில் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் முதல்முறையாகக் `கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றாக' மாறியுள்ளது கொரோனா.

'இந்த வைரஸின் தயவில் நாம் இல்லை. இந்த விளையாட்டின் முக்கிய விதி Never give up' - கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸின் வார்த்தைகள் இவை.

டெட்ராஸ் அதோனாம்
டெட்ராஸ் அதோனாம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இன்றுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு, ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு என்று பதற வைத்துக் கொண்டிருக்கிறது. கூடவே, கொரோனா தாக்குதலுக்கும் அதற்கான சிகிச்சைகளுக்கும் இடையில் உலகம் முழுவதும் மனதை ஈரமாக்கும் பல சம்பவங்களும் நடந்துள்ளன. அவற்றின் தொகுப்பு இது..

கறுப்பு நிற இறுதிச்சடங்கு வாகனம் ஒன்றை, கவச ஆடை மற்றும் முகக்கவசம் அணிந்த ஒரு பெண் அழுதுகொண்டே துரத்திச் செல்வது போன்ற வீடியோ ஒன்று சீனாவில் வெளியானது. அந்த இறுதிச்சடங்கு வாகனத்தில் சடலமாகப் பயணித்தவர் அந்தப் பெண்ணின் கணவரும் சீனாவின் வுகான் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையின் இயக்குநருமான 'டாக்டர் லியூ ஸிம்மிங்'. கொரோனா தொற்றினால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்ததன் விளைவாக அவருக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது.

Corona awareness
Corona awareness

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான லியூ, நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையளித்தன் விளைவு அவரையும் தொற்றிக் கொண்டது கொரோனா. அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த அவருடைய மனைவி 'காய் லிபிங்', கணவரை ஓய்வெடுக்கச் சொல்லிக் கெஞ்சியும், லியூ காதில் வாங்கவே இல்லை. தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்ததோடு, தன்னிடமிருந்து மனைவிக்குத் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் அவரைத் தன் அருகில் வரவிடாமலே இருந்திருக்கிறார்.

"என்னுடைய மெசேஜ்களை எல்லாம் பார்க்கிறீர்களா?''

''நான் வந்து உங்களை கவனித்துக் கொள்ளட்டுமா?" வார்டின் வெளியே நின்று கணவருக்கு, காய் லிபிங் அனுப்பிய செல்போன் மெசேஜ் இவை.

"வேண்டாம்!" - இது டாக்டர் லியூவின் பதில்!

ஓரிரு தினங்களில் உயிரிழந்தார் லியூ.

Corona
Corona

வாஷிங்டனைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தான் மீண்ட கதையைத் தற்போது மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து வருகிறார். நண்பர்கள் 30 பேர் ஒன்று சேர்ந்து பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள். பார்ட்டியில் பங்கேற்ற மூன்று நாள்கள் கழித்து எலிசபெத்துக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது. அவருடன் பார்ட்டியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் காய்ச்சல், சளி என்று பல்வேறு அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன. பரிசோதனையில் எலிசபெத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்குள் நோய் பாதித்து 13 நாள்கள் கடந்துவிட்டன. அமெரிக்க சுகாதாரத் துறையினர், அறிகுறிகள் தோன்றிய 7 நாள்கள் வரையிலும், காய்ச்சல் குறைந்த பிறகு 72 மணி நேரம் வரையிலும் தனித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

Corona Awareness
Corona Awareness

ஆனால், இவை தெரிவதற்கு முன்னேயே எலிசபெத் இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிட்டிருந்தார். அவரை மருத்துவமனையிலும் அனுமதிக்கவில்லை. வீட்டிலேயே இருந்தவருக்கு நோயின் தீவிரம் மெல்ல மெல்ல குறைந்து கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிட்டார் எலிசபெத். "கொரோனாவால் 16 நாள்கள் உடல்நலமில்லாமல் இருந்தேன். நோயிலிருந்து முற்றிலும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறேன். நோயின் தாக்கம் என்பது நபருக்கு நபர் மாறுபடும் என்பதை அறிவேன். இருந்தாலும் கொரோனா பாதித்தாலே உயிர் போய்விடும் என்று பயப்படுகிறவர்களுக்கு என் அனுபவம் உதவியாக இருக்கும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள்'' என்று தம்ஸ் அப் காட்டுகிறார் எலிசபெத்.

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அதிக அளவில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சீனாவில். உயிரிழப்புகளும் கணிசமாக ஏற்பட்டுள்ளன. சீனாவில் ஒரே நாளில் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

Bride
Bride

மூவரில் ஒருவரான 29 வயது பெங் யின்ஹூவா, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறவிருந்த தன் திருமணத்தைத் தள்ளி வைத்தார். கொரோனாவின் தாக்கம் குறைந்ததும் நிச்சயம் திருமணம் செய்துகொள்வோம் என்று தனது வருங்கால மனைவிக்கு வாக்கு கொடுத்திருந்தார் பெங். கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு ஏமாற்றமும் கண்ணீருமே இப்போது மிஞ்சியிருக்கிறது.

கொரோனாவுக்கு சிகிச்சையளித்த லியூ என்ற செவிலியருடன், அவருடைய குடும்பத்தினர் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் போதிய இடமில்லாததால் நோய் பாதித்த நான்கு பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். லியூவின் தந்தை உயிரிழந்த 5-வது நாள் தாயும் இறந்தார்.

Family
Family

``மருத்துவமனைக்குச் சென்று கெஞ்சினேன், அழுதேன். அதே சமயம் நானும் மிகவும் பலவீனமாகவும் இயலாதவனாகவும் இருந்தேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்ல மகனாகவும், பொறுப்புள்ள அப்பாவாகவும், அன்புள்ள கணவனாகவும், நேர்மையான மனிதனாகவும் வாழ்ந்தேன். என்னை நேசிப்பவர்களுக்கும் நான் நேசிப்பவர்களுக்கும்... விடைபெறுகிறேன்!" இறப்பதற்கு முன்னதாக லியூவின் சகோதரரும் திரைப்பட இயக்குநருமான சங் காய், லண்டனில் வசிக்கும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. தன் சகோதரர் இறந்த சில மணி நேரங்களில் லியூவும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

27 வயதான செவிலியர் 'ஸங் வீன்டென்' தன் குடும்பத்தினருடன் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். கொரோனாவை எதிர்த்துப் போராட உடனே களமிறங்க வேண்டும் என்று அவர் பணியாற்றும் மருத்துவமனையிலிருந்து நோட்டீஸ் வந்ததும், அம்மா தடுத்ததையும் மீறி மருத்துவமனைக்குக் கிளம்பினார் ஸங். வருங்காலக் கணவரும் நண்பர்களும் அவருக்கான லக்கேஜை அடுக்கிக்கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

Corona
Corona

ஸங் பணிக்கு வந்ததும் வியர்வை வெளியேறக்கூட வழியில்லாத கவச ஆடை வழங்கப்பட்டது, கூடவே முகக்கவசமும். தொற்று பாதிக்காமலிருக்க தலையை மொட்டையடித்துக்கொண்டார் ஸங். "மாதவிடாய் நேரத்தைப் பற்றி என்னுடைய ஆண் உயர் அதிகாரிகளிடம் பேசும்போதுதான் தர்மசங்கடமாக இருந்தது. சானிட்டரி நாப்கின், டாம்பூன்ஸ் போன்றவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தவிர, கவச ஆடையை அணிந்துவிட்டால் அவசரத்துக்குக்கூட கழிவறையைப் பயன்படுத்த முடியாது.

Corona awareness
Corona awareness

மாதவிடாய் நேரங்களில் அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டாலும் போக முடியாது. குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு ஒருமுறைதான் கழிவறைக்குச் செல்ல முடியும். அப்போதுதான் மனமுடைந்து போனேன். இறுதியில் தன்னார்வலர்களின் மூலம் வயதானவர்களுக்குப் பயன்படுத்தும் இரண்டாயிரம் டயாப்பர்கள் கிடைத்தன. என்னைப்போன்ற 500 பெண் ஊழியர்களையும் அவற்றை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள்'' என்கிற ஸங்கின் வார்த்தைகள், கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவப் பணியாளர்களின் நிலையை அப்படியே எடுத்துரைக்கிறது. மொட்டையடித்த ஸங்கை சீன ஊடகங்கள் 'மிகவும் அழகான போர் வீரர்' என்று வர்ணித்தது. "காய்கறி வாங்க ஸ்டோருக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்து ஒரு நபர் 'ஹாய்! ஹேண்ட்சம்' என்று அழைத்தார். ஆனால் ஹேர்கட் செய்ததற்கு மருத்துவமனைதான் கட்டணம் செலுத்தியது" என்று சிரிக்கிறார் ஸங்.

சீனாவில், கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பணியாளர்களில் சிலர் பணிச்சுமையின் காரணமாகவும் சோர்வின் காரணமாகவும் உயிரிழந்திருக்கிறார்கள். 28 வயதான மருந்தாளர் 'சாங் யிங்ஜி' நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். டிசம்பரில் சீனாவின் உறையும் குளிரில் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களுக்கெல்லாம் உடலின் வெப்பத்தைப் பரிசோதிப்பது, மருந்துகளைப் பரிந்துரைப்பது என ஒற்றை ஆளாகத் தொடர்ந்து 10 நாள்கள் இரவும் பகலும் பணியாற்றிய சாங், பதினோராம் நாள் காலையில் மருத்துவமனையின் தங்கும் அறையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துகிடந்தார்.

Corona
Corona

இவரைப்போலவே சீனாவின் கிராமம் ஒன்றில், கொரோனா நோயாளிகளுக்கு ஓய்வில்லாமல் சிகிச்சையளித்து வந்த 37 வயதான மருத்துவர் 'வாங் டுசெங்'கும், மாரடைப்பால் உயிரிழந்தார். 51 வயதான 'ஸு ஹுய்', மருத்துவமனை ஒன்றில் வைரஸ் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராகப் பணியாற்றியவர். 18 நாள்கள் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றியபின் வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுந்தவர் மறுபடியும் கண்விழிக்கவேயில்லை. தவிர, சாலையின் ஓரத்தில் நின்று கொரோனா பாதுகாப்புப் பரிசோதனை செய்துகொண்டிருந்த ஒரு மருத்துவ ஊழியர் மீது அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில், தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

கொரோனாவின் கோர தாண்டவத்தில் ஈரானும் தப்பிப் பிழைக்கவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு, 400-க்கும் அதிகமான உயிரிழப்பு, நாடாளுமன்றத்தின் 23 எம்.பிக்களும் கொரோனா என்று ஈரான் தவித்துக்கொண்டிருக்கிறது. விளைவு இங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் ஊண் உறக்கமின்றிப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகியன. அவற்றில் ஈரான் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டப் பணியாளர்கள் கவச ஆடை, முகக்கசவம் அணிந்தபடி மருத்துவமனை வார்டிலேயே நடனமாடுகின்றனர். ஒரு வீடியோவில் தனியாக ஒரு செவிலியர் மட்டும் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.

Isolation
Isolation

மருத்துவமனையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளின் மனநிலையை மேம்படுத்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கிடார் வாசிக்கிறார். சிலர் பாட்டுப் பாடுகின்றனர். ஈரானில் இதற்கு முன்னால் பொதுவெளியில் நடனமாடியவர்கள் மீது மதச்சட்டத்தின்படி நடவடிக்கை பாய்ந்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து பல மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் சோர்ந்து இருக்கும் மருத்துவப் பணியாளர்கள் புத்துணர்ச்சிக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மருத்துவப் பணியாளர்களின் நடனங்களுக்கு ஈரான் எங்கும் ஆதரவுக்குரல்கள் எழுந்தன.

உலகமே கொரோனா குறித்த எச்சரிக்கையுணர்வில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா தொடர்பான தகவலை அரசுக்கு அளித்ததாகப் பெண் மருத்துவர் ஒருவரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது கேரளத் தனியார் மருத்துவமனை ஒன்று. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர், மருத்துவர் ஷினு சியாமளன் பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அண்மையில் வெளிநாட்டுக்கு ஏதேனும் சென்று வந்தீர்களா என்று ஷினு கேட்டதற்கு, கத்தாரிலிருந்து தான் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். உடனே டாக்டர் ஷினு, அந்த நோயாளியைக் கேரள அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார்.

Doctor Shinu
Doctor Shinu
அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

ஆனால், அந்த நபரோ அங்கு செல்வதற்கு மறுத்து, தான் கத்தாருக்குத் திரும்பிச் செல்லவிருப்பதாகத் தெரிவித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார் ஷினு. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நோயாளி ஒருவர் சிகிச்சை பெறாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறியது தெரிந்தால் மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவது குறைந்துவிடும் என்று, ஷினுவைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

'' அந்த நோயாளியை வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல அனுமதித்த அதிகாரிகளுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நான்தான் வேலையில்லாதவளாகிவிட்டேன்'' என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஷினு. இந்நிலையில் அரசு அதிகாரிகளின் மீது அவதூறு பரப்பினார் என்று, டாக்டர் ஷினு மீது மாவட்ட மருத்துவ அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு