Published:Updated:

நீரிழிவு நோய்க்கான காப்பீட்டுத் திட்டங்கள்... நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

பல குடும்பங்களில் வருமான வரி விலக்குகளை முன் வைத்து மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் பார்க்கப்பட்டும், எடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தப் பெருந்தொற்று பலருக்குக் காப்பீடுகளின் அவசியத்தை உணர்த்திவிட்டது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி நிதி ஆண்டு 2019-20-ல் நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையில் 3.6% சுகாதார பராமரிப்புக்கென செலவிடப்பட்டுள்ளது. இந்தச் சதவிகிதம் குறையாமல் உயர்ந்துகொண்டேதான் போகப்போகிறது.

Health Insurance
Health Insurance

இப்போதுதான் பலர் மனதில் இந்த அபாய சங்கின் ஒலி கேட்கத் தொடங்கி இருக்கிறது. பல குடும்பங்களில் வருமான வரி விலக்குகளை முன் வைத்து மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் பார்க்கப்பட்டும், எடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தப் பெருந்தொற்று பலருக்குக் காப்பீடுகளின் அவசியத்தை உணர்த்திவிட்டது.

பல நேரத்தில், எதிர்பாராமல் வரும் ஒரு நோய் நம் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடுகிறது. ஒரு புறம், இனி வராத மாதச் சம்பளம், மறுபுறம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் மருத்துவச் செலவுகள். இவை பலருக்கு காப்பீட்டின் அவசியத்தைப் புரிய வைக்கத் தொடங்கி இருக்கின்றன.

காப்பீடுகள் அவசியம்தான். ஆனால், அவற்றில் உள்ள பல சட்ட விதிக்கூறுகள் நாம் எந்தக் காரணத்தை முன் வைத்து காப்பீட்டைச் செய்தோமோ அதை நிறைவேற்ற வழி இல்லாமல் செய்திடும். இந்த வகையில் நீரிழிவு நோய் பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

நீரிழிவு நோய், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சில வருடங்களுக்கு முன் வரை இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக, இந்த நோயின் தொடர்ச்சியாக வரக்கூடிய கிட்னி பாதிப்பு, பார்வைக் கோளாறு மற்றும் கால் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்குக் காப்பீட்டுத்தொகை கிடைக்காமலிருந்தது.

Diabetes
Diabetes
Pixabay

ஆனால், தற்போது இரண்டு வகை நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 and Type 2) காப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. இது பலருக்கு வரம். காரணம் 2016-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 120% அதிகரித்துள்ளது. இவர்களுக்கான செலவு எப்படி இருக்கும் என்பதையும் கவனிப்போம்.

சர்க்கரைநோய் சம்பந்தப்பட்ட எந்த வகை பாதிப்பு வந்தாலும், அதற்கான மருத்துவ செலவு பல லட்சங்கள் வரை போகலாம்.

மருத்துவமனை செலவு ஒரு முறை செலவுதான். ஆனால், இவர்கள் மாதம்தோறும் எடுத்துக்கொள்ளும் இந்த நோய்க்கான மருந்து, சோதனை, இன்சுலின், தனி வகை உணவுத் திட்டம் என்ற வகையில் ஆகக்கூடிய செலவு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை.

இதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, இந்த நோய் இப்போது பரவலாக அனைத்து சமூகத்தின் அடுக்குகளிலும் பரவி வருவதால் ஒரு சாமானியனின் மாதச் சம்பளத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால்கூட, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே காப்பீடு அவசியமாகிப்போகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது திட்டங்களுக்கு வருவோம். காப்பீடுகள் இரண்டு வகைப்படும். சாதாரண காப்பீடு மற்றும் சிறப்புக் காப்பீடு. இரண்டுக்குமான வித்தியாசம், சிறப்புத் திட்டங்களின் மாத காப்பீட்டுத்தொகை அதாவது பிரீமியம் மிக அதிகமாக இருக்கும். அடுத்தது, மொத்த காப்பீட்டுத்தொகையில் ஏதோ ஒரு வருடம் ஆஸ்பத்திரிக்காக நாம் செலவு செய்துவிட்டால், அந்தத் தொகை கழிக்கப்பட்டுவிடும். உதாரணத்துக்கு நாம் ஒரு லட்சம் காப்பீட்டுத்தொகை திட்டம் எடுத்திருந்தால், அதில் ஆஸ்பத்திரி செலவு ரூ. 50,000 கொடுத்துவிட்டால், இனி வரும் வருடங்களுக்கு நம் காப்பீட்டுத்தொகை ஒட்டுமொத்த வரம்பு ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுவிடும். தவிர இதற்கு No Claim போனஸ் தொகையும் கிடையாது.

சில நிறுவனங்களையும் அவற்றால் வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையையும் பட்டியலிட்டுப் பார்க்கலாம். இந்தத் தொகைகள் அவ்வப்போது மாற்றப்படுவதால், காப்பீடுகள் எடுக்கும் முன்பு அவற்றைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள்
காப்பீடுகள்
காப்பீடுகள்

நீரிழிவு நோய் சில வருடங்களாகத்தான் காப்பீட்டுக் கொடையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை முதலிலேயே பார்த்தோம். அது அனுமதிக்கப்படும்போது அவை இந்தச் சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் சர்க்கரை நோயையும் காப்பீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்புவோர் மிக அதிக பிரீமியம் கட்ட வேண்டியுள்ளது.

இந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால், இதைத்தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு விதி, காப்பீடு எடுக்கப்பட்ட உடனேயே நாம் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவதில்லை. இந்தக் காத்திருப்புக் காலம், நிறுவனத்துக்கு நிறுவனம் மற்றும் நோய்க்கு நோய் மாறுபடுகிறது.

உதாரணம் கண்புரை, மூலநோய், விரைவீக்கம் போன்ற சிகிச்சைகளுக்கு இரண்டு வருட காத்திருப்புக் காலம் உள்ளது.

அதே போல் நீரிழிவு நோய்க்கும் உள்ளது. ஆகவே, காப்பீட்டுத் திட்டத்துக்குச் செல்லும் முன், பல நிறுவனங்களிடம் இதைப்பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதே போல் பிரீமியம் தொகை வருடா வருடம் வயது அதிகரிக்கும்போது அதிகரிக்காமல் இருக்குமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாதாரணமாக உங்கள் வயதுக்குச் சாதா காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையில் 25% அதிகமாக இந்த நீரிழிவு காப்பீட்டுக்குச் செலுத்த தேவை இருக்கும்.

மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளத் தேவையானது, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் group insurance health cover எடுக்க முடியுமானால், அதில் உங்கள் பெற்றோரையும் இணைத்து விடுங்கள். இப்படி ஃபேமிலி திட்டம் எடுக்கும்போது, காப்பீடு முதல் நாளிலிருந்தே பெறுவதற்குத் தகுதிபெறுகிறது. அதனால் நீரிழிவுக்கான காத்திருப்புக் காலம் இருக்காது.

Diabetes
Diabetes
Pixabay

இதைத் தவிர, சில நிறுவனங்கள் sub limits மற்றும் co-pay விதிகளைச் செயல்படுத்துகிறார்கள். உதாரணமாக, ரெலிகேர் நிறுவன காப்பீடுகளில் நமக்கு ஆகும் செலவில் 20% நாம் செலுத்த வேண்டும், இதுதான் co-pay. காப்பீட்டாளர் 71 வயதைக் கடந்த உடன் இந்த சதவிகிதம் 10% உயர்த்தப்படும். அதே போல், மருந்துகளுக்கான உயர்ந்த பட்ச அளவு, ஆஸ்பத்திரி அறைகளுக்கான அளவு என்பதையும் இந்த நிறுவனங்கள் விதிகளாக அமைத்திருக்கின்றன. இவைதான் சப் லிமிட்ஸ். இவற்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சில நிறுவனங்களையும் அவற்றால் வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையையும் மேலே உள்ள பட்டியலில் பார்க்கலாம். இந்தத் தொகைகள் அவ்வப்போது மாற்றப்படுவதால், காப்பீடுகள் எடுக்கும் முன்பு அவற்றை சரி பார்த்துக்கொள்ளுங்கள்

இதில் ஸ்டார் ஹெல்த்தின் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதில் 40 வயது நபர் நீரிழிவுக்கான சிறப்புக் காப்பீடுத் திட்டத்தைத் தேர்வு செய்தால், அவர் செலுத்த வேண்டிய பிரீமியம் 89% அதிகரிக்கிறது.

ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் காப்பீடு இல்லாமல் இருப்பது பெரும் அபாயம். காப்பீடுகள் எடுப்பதற்கு முன் நோய்க்கான காத்திருப்பு நேரம், பிரீமியம், co-pay, sub- limit இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். மிக முக்கியமாக எந்தக் காப்பீட்டு நிறுவனம் நீங்கள் காப்பீடாகச் செய்துள்ள தொகையைப் பயன்பாட்டின் காரணமாகக் குறைக்காமல் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு அதைத் தேர்ந்தெடுங்கள்.

Insurance
Insurance

ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள். சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே உங்கள் மாத வருமானத்தில் 5-10% ஹெல்த் ஃபண்டுக்காகச் சேமிக்கத் தொடங்குங்கள். நீரிழிவு நோய் இப்போதெல்லாம் வயது பார்த்து வருவதில்லை. அதே போல் குடும்ப வரலாறு பற்றியும் கவலைகொள்வதில்லை. நீரிழிவு நோய் நம் நிதிச்சுமையை அதிகரிக்கச் செய்யும் ஒன்று என்பதை மறந்துவிட வேண்டாம்.

- லதா ரகுநாதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு